வாசிக்க: ஏசாயா 39,40; சங்கீதம் 82; 2 கொரிந்தியர் 10
வேத வசனம்: 2 கொரிந்தியர் 10: 3. நாங்கள் மாம்சத்தில் நடக்கிறவர்களாயிருந்தும், மாம்சத்தின்படி போர்செய்கிறவர்களல்ல.
4. எங்களுடைய போராயுதங்கள் மாம்சத்துக்கேற்றவைகளாயிராமல், அரண்களை நிர்மூலமாக்குகிறதற்கு தேவபலமுள்ளவைகளாயிருக்கிறது.
5. அவைகளால் நாங்கள் தர்க்கங்களையும், தேவனை அறிகிற அறிவுக்கு விரோதமாய் எழும்புகிற எல்லா மேட்டிமையையும் நிர்மூலமாக்கி, எந்த எண்ணத்தையும் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியச்
சிறைப்படுத்துகிறவர்களாயிருக்கிறோம்.
கவனித்தல்: வறுமை, கல்வியறிவின்மை, அநீதி, மற்றும்
அடக்குமுறைக்கு எதிராக போர் செய்யும்படி உலக தலைவர்கள் அழைப்பு விடுப்பதைப் பற்றி
நாம் அடிக்கடி கேள்விப்படுகிறோம். ஆனால், ஒரு சில நாட்கள் அல்லது மாதங்களில் அவர்கள்
அதை மறந்து விடுகின்றனர் அல்லது வேறு காரியங்களை கவனிக்கச் சென்றுவிடுகிறார்கள். மறுபுறம், கிறிஸ்தவர்களாகிய நாம், விரும்பினாலும்
விரும்பாவிட்டாலும், ஒரு ஆவிக்குரிய யுத்தத்தில் எப்பொழுதும் ஈடுபட்டிருக்கிறோம். நமது
போராட்டம் “மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல” என்று வேதம் சொல்கிறது
(எபேசியர் 6:12). கள்ளப் போதகர்கள், தவறான உபதேசங்கள், மற்றும் ”கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளியைக்” பார்க்க முடியாதபடி
மக்களின் மனதை குருடாக்குகிற எதற்கும் எதிராக நாம் போராட வேண்டும் (2 கொரி.4:4). கொரிந்துவில்,
சில கள்ளப் போதகர்கள் தங்களைப் பற்றி பெருமை பாராட்டிக் கொண்டு, பவுலின் அதிகாரத்தைக்
குறித்து கேள்வி எழுப்பினார்கள். அவர்கள் தங்களுடைய தொடர்ச்சியான குற்றச்சாட்டுகளினால்
பவுலிடம் போராடினார்கள். பவுல் உலகப் பிரகாரமாக
அவர்களுடன் போரிடுவதை தவிர்த்தார். இது ஒரு ஆவிக்குரிய யுத்தம் என்றும், மாம்சத்திற்கேற்ற
போராயுதங்கள் பயனற்றவை என்பதையும் அவர் புரிந்து வைத்திருந்தார். பிசாசுடனான யுத்தத்தில்
நாம் அவனை ஜெயிக்க முடியாது என்று நினைக்கச் செய்யும் கற்பனைக் கோட்டைகளை பிசாசானவன்
நம் மனதில் கட்டி எழுப்ப முயற்சி செய்கிறான். அரண்களை நிர்மூலமாக்கும் தேவபலம் பொருந்திய
ஆயுதங்கள் நமக்குத் தேவை. எபேசியர் 6:17 ல், பிசாசைத் தாக்குகிற ஆயுதம், “தேவவசனமாகிய ஆவியின் பட்டயம்” என்று பவுல் கூறுகிறார்.
ஐந்தாம் வசனத்தில், ஆவிக்குரிய ஆயுதங்களை
வைத்து என்ன செய்கிறார் என்பதை பவுல் கூறுகிறார். முதலாவதாக, தேவனைப் பற்றி அறிகிற
அறிவுக்கு எதிராக எழும்புகிற தர்க்கங்கள் மற்றும் மேட்டிமையான எண்ணங்களை நிர்மூலமாக்குகிறார்.
நாம் அனைவரும் அறிந்திருக்கிறபடி, தேவனைப் பற்றி அறிகிற அறிவுக்கு எதிரான அனேக மூட
மற்றும் தவறான நம்பிக்கைகள், கள்ளப் போதனைகள், உலகப்பிரகாரமான தத்துவங்கள், மற்றும்
கோட்பாடுகள் உண்டு. தேவனுடைய வார்த்தையின் உதவிகொண்டு, நாம் அவைகளை நிர்மூலமாக்க வேண்டும்.
இரண்டாவதாக, தேவபக்தியற்ற எண்ணங்களைக் கட்டுப்படுத்தி, கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிய
சிறைப்பிடிப்பதைப் பற்றி எழுதுகிறார். உலகப் பிரகாரமான ஒரு எண்ணத்தை நாம் கிறிஸ்துவுக்குக்
கீழ்ப்படியப் பண்ணாவிடில், அது அரிபிளவையைப் போல வளர்ந்து நம்மை பாவத்திற்கு அடிமைப்படுத்திவிடும்.
இங்கே, நாம் இந்த இரு செயல்களும் நிகழ்கால வினைசொல்லில் வருகிறதைக் காண்கிறோம். அப்படியானால்,
நம் அனுதின கிறிஸ்தவ வாழ்வில் இந்த இரண்டு காரியங்களையும் நாம் தொடர்ந்து செய்து வரவேண்டும் என்பதை இது குறிக்கிறது.
“பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல” தேவனுடைய ஆவியினாலேயே நாம் நம் ஆவிக்குரிய
யுத்தங்களில் வெற்றி பெறுகிறோம். இயேசு கிறிஸ்து
நம்மை வெற்றிபெறுகிற கிறிஸ்தவர்களாக்குகிறார்.
பயன்பாடு: நான் இயேசுகிறிஸ்துவின் போர்வீரர். பிசாசின் திட்டங்களுக்கு
எதிரான என் போரில் நான் உலகப்பிரகாரமான ஆயுதங்களைச் சார்ந்து இருக்காமல், தேவனுடைய
சர்வாயுத வர்க்கத்தைப் பயன்படுத்துவேன். பிசாசுக்கும், தேவனைப் பற்றி அறிகிற அறிவுக்கு
எதிராக இருக்கும் எந்தவொரு சிந்தனைக்கும் எதிராக நான் எதிர்த்து நிற்பேன். என் ஆவிக்குரிய
வரங்கள் மற்றும் ஆயுதங்களைப் பற்றி பெருமை பேசுவது என் நோக்கமல்ல, மாறாக அனேகரை கிறிஸ்துவுக்குக்
கீழ்ப்படியப் பண்ணுவதே என் நோக்கம் ஆகும்.
ஜெபம்: தந்தையாகிய தெய்வமே, பிசாசுக்கும்
அவனுடைய தீய திட்டங்களுக்கும் எதிர்த்து நிற்க என்னைப் பலப்படுத்தும் உம் வார்த்தைக்காக
உமக்கு நன்றி. இயேசுவே, எனக்காக நீர் பெற்றுத்
தருகிற வெற்றிகளுக்காக உமக்கு நன்றி. பரிசுத்த ஆவியானவரே, உலகப்பிரகாரமான மற்றும்
பாவ சிந்தனைகளுக்கு எதிரான ஆவிக்குரிய யுத்தத்தில் நான் உம்மைச் சார்ந்து இருக்க
எனக்கு உதவியருளும். ஆமென்.
- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573
Day - 264
No comments:
Post a Comment