வாசிக்க: ஏசாயா 17,18; சங்கீதம் 71; 1 கொரிந்தியர் 15:35-58
வேத வசனம்: 1 கொரிந்தியர் 15: 58.
ஆகையால், எனக்குப் பிரியமான சகோதரரே, கர்த்தருக்குள்
நீங்கள் படுகிற பிரயாசம் விருதாவாயிராதென்று அறிந்து, நீங்கள் உறுதிப்பட்டவர்களாயும், அசையாதவர்களாயும், கர்த்தருடைய கிரியையிலே எப்பொழுதும்
பெருகுகிறவர்களாயும் இருப்பீர்களாக.
கவனித்தல்: கிறிஸ்துவின்
உயிர்த்தெழுதல் கிறிஸ்தவ விசுவாசத்திற்கு அஸ்திபாரமாக இருக்கிறது என்பதை 1
கொரிந்தியர் 15ம் அதிகாரத்தில் பவுல் முதலாவதாக விளக்குகிறார். இரண்டாவதாக,
மரித்தோரின் உயிர்த்தெழுதலைப் பற்றி அவர் பேசுகிறார். மூன்றாவதாக, சரீர
உயிர்த்தெழுதல் பற்றி பவுல் சொல்கிறார். இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலானது
நமக்கு எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கையையும், நம் நித்திய வாழ்க்கை பற்றிய
உறுதியையும் நமக்குத் தருகிறது. கிறிஸ்துவில் நாம் நித்தியத்தைப் பற்றிய
நம்பிக்கையையும், உயிர்த்தெழுதலைப் பற்றிய நம்பிக்கையையும் உடையவர்களாக
இருக்கிறோம். நாம் நம்பியிருக்கிற ஆனந்த
பாக்கியம்—”மகா தேவனும் நமது இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய
மகிமையின் பிரசன்னமாகுதல்” (தீத்து 2:13)— என்று வேதாகமம் சொல்கிறது. 57ஆம்
வசனத்தில் நாம் இயேசுகிறிஸ்துவின் மரணம் மற்றுன் உயிர்த்தெழுதல் மூலமாக ஜெயம்
பெறுகிறவர்களாக இருக்கிறோம் என்பதை பவுல் நமக்கு நினைவுபடுத்துகிறார்.
பவுல் குறிப்பிடுகிற “ஆகையால்” என்ற
இணைப்புச் சொல்லானது உயிர்த்தெழுதலைப் பற்றி அவர் எழுதிய இதற்கு முந்தைய 57
வசனங்களையும் குறிப்பதாக இருக்கிறது. அதை மனதில் வைத்து, விசுவாசிகள் தைரியமாகவும்
உறுதியாகவும் இருக்கும்படி பவுல் உற்சாகப்படுத்துகிறார். நாம் கர்த்தருக்காக செய்கிற
எதுவும் வீணாகப் போவதில்லை. நாம் கர்த்தருக்காக செய்ய விரும்புகிற முயற்சிகள்
மற்றும் ஆசைகளை அவர் ஆசீர்வதித்து, நம்மை வெற்றி பெறுகிறவர்களாக தேவன்
மாற்றுகிறார். கர்த்தர் நம்மிடம் கொடுத்திருக்கிற வேலைகளைச் செய்வதில் நாம்
உண்மையுள்ளவர்களாக இருக்க வேண்டும். சில சமயங்களில், நம் வேலைக்கு வெளிப்படையான
பலனை காணாத போது நாம் ஏமாற்றமடையலாம். ஆனாலும், கர்த்தருக்காக ஊழியம் செய்வதில்
நம் உற்சாகத்தை இழந்து விடவோ அல்லது அரை மனதுடன் முயற்சி செய்கிறவர்களாகவோ நாம்
இருக்கக் கூடாது. நம் முழு கவனத்தையும் நாம்
கர்த்தருடைய வேலைக்கு கொடுக்க வேண்டும். கிறிஸ்து வரும்போது, நாம் நமக்கான பலனை, பரிசைப்—தேவன்
நமக்கே ஏற்கனவே ஆயத்தம் பண்ணி வைத்திருக்கிறா கிரீடத்தைப்— பெறுவோம். நம் வேலையையும் அன்பையும் மறப்பதற்கு தேவன் அநீதி
உள்ளவர் அல்ல. கவனிக்க: நம் உயிர்த்தெழுதலைப்
பற்றிய நிச்சயத்தைப் பற்றி பவுல் கூறுகிறார். ஆனால், அது எப்பொழுது நடக்கும் என்பதை
அவர் குறிப்பிடவில்லை. அதற்குப் பதிலாக, உயிர்த்தெழுதலுக்கு விசுவாசிகளின் மனதை அவர்
ஆயத்தப்படுத்துகிறார் (வ.51.52). மேலும்,
கர்த்தருக்காக அவர்கள் செய்யும் ஊழியத்தில் உறுதியுள்ளவர்களாக இருக்க வேண்டும் என
அவர்களை உற்சாகப்படுத்துகிறார். ஆகவே, நாம் நமது 100% முயற்சியையும் சக்தியையும் கர்த்தருடைய
வேலைக்குக் கொடுக்க வேண்டும்.
பயன்பாடு: என் வாழ்க்கை இந்த உலகத்தோடு
முடிந்து போவதில்லை. நான் தேவனுடைய ராஜ்ஜியத்தை சுதந்தரித்து, நித்தியத்தில் தேவனுடன்
வாழ்வேன். பாவம் மற்றும் மரணம் என்ற பிரமாணத்தில் இருந்து இயேசு கிறிஸ்து எனக்கு விடுதலை
தருகிறார். தேவனுடைய ராஜ்ஜியத்துக்காக நான் செய்யும் என் முயற்சிகளும் உழைப்பும் வீண்
அல்ல. நான் ஆண்டவருடைய மகிமைக்காக அனைத்தையும் செய்வேன்.
ஜெபம்: தந்தையாகிய தெய்வமே, நீர்
எனக்குத் தந்திருக்கிற மகிமையின் நம்பிக்கைக்காக உமக்கு நன்றி. ஆண்டவராகிய இயேசுவே,
தேவனுடைய வேலைக்கும், அவருடைய ராஜ்ஜியத்திற்கும் என்னிடத்தில் இருப்பதில் சிறந்ததைக்
கொடுக்க எனக்கு உதவியருளும். பரிசுத்த ஆவியானவரே, கர்த்தருக்குள்ளும், அவருக்காக நான்
செய்கிற வேலையிலும் உறுதியாகவும், தைரியமாகவும் இருக்க என்னைப் பலப்படுத்தும். ஆமென்.
- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573
Day - 253
No comments:
Post a Comment