வாசிக்க: ஏசாயா 47,48; சங்கீதம் 86; கலாத்தியர் 1
வேத வசனம்: கலாத்தியர் 1: 6. உங்களைக் கிறிஸ்துவின் கிருபையினாலே அழைத்தவரை நீங்கள் இவ்வளவு சீக்கிரமாய்
விட்டு, வேறொரு சுவிசேஷத்திற்குத் திரும்புகிறதைப்பற்றி நான்
ஆச்சரியப்படுகிறேன்;
7. வேறொரு சுவிசேஷம் இல்லையே; சிலர் உங்களைக் கலகப்படுத்தி, கிறிஸ்துவினுடைய
சுவிசேஷத்தைப் புரட்ட மனதாயிருக்கிறார்களேயல்லாமல் வேறல்ல.
கவனித்தல்: நம்மிடம் பழகியவர்கள் மற்றவர்களின்
பொய்யான பரப்புரையை நம்பி நம்மை விட்டு பிரிந்து செல்லும்போது, பொய்யான புனைவுகளை
உண்மை என்று கேள்வியே கேட்காமல் இவர்கள் எப்படி ஏற்றுக் கொண்டார்கள் என்று நாம்
ஆச்சரியமடைந்து யோசிக்கிறோம். அப்படிப்பட்ட தருணங்களில், நம் ஆச்சரியமானது நம் ஏமாற்றம்,
அதிருப்தி, மற்றும் கோபத்தை வெளிப்படுத்துகிறதாக இருக்கும். நம் நண்பர்களை தவறாக வழிநடத்தியவர்களிடம்
கோபமடைவதைக் காட்டிலும் அதிகமாக நாம் நம்மை விட்டு பிரிந்து செல்லும் நண்பர்கள் மேல்
அதிக கோபமடைவோம். மோசேயின் நியாயப்பிரமாணம் மற்றும் கிரியைகளுக்கு முக்கியத்துவம்
கொடுத்த நியாயப்பிரமாணப் பிரசங்கிகளின் பொய்யான நற்செய்தியை உடனே ஏற்றுக் கொண்ட கலாத்தியர்களுக்கு
எதிரான ஆச்சரியத்தையும், வருத்தத்தையும் பவுலின் வார்த்தைகள் வெளிப்படுத்துகின்றன.
பவுல் மிகவும் உறுதியாக அந்த பொய்யான சுவிசேஷத்தைக் கண்டித்து, இயேசு கிறிஸ்துவின்
நற்செய்தியைத் தவிர வேறு எந்த நற்செய்தியும் கிடையாது என அவர்களிடம் கூறினார். கிறிஸ்துவின்
சுவிசேஷமானது நாம் தேவ கிருபையில் வாழும்படி நம்மைப் பலப்படுத்துகிறது.
மறுபுறம், மனிதர்களால் உண்டாக்கப்பட்ட சுவிசேஷமானது
தேவனுடைய தயவைப் பெறுவதற்கு கிரியைகளைச் செய்ய வேண்டும் என நம்மைக் கட்டாயப்படுத்துகிறது.
பொய்யான சுவிசேஷத்தைப் பிரசங்கித்தவர்கள் தங்களுடைய சொந்த கருத்துக்கள் மற்றும்
எண்ணங்களை சேர்த்து கிறிஸ்துவின் சுவிசேஷத்தை தவறாக திரித்துக் காட்ட முயற்சி செய்திருக்க
வேண்டும். அவர்கள் கலாத்தியரின் கவனத்தை கிறிஸ்துவிடம் இருந்து திசைதிருப்பி மனிதமுயற்சிகளின்
பால் திருப்ப முயன்றனர். நம் கிரியைகளினால் நாம் இரட்சிப்பைப் பெறுகிறோம் என்று வேதம்
சொல்லவே இல்லை. ”கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு
இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு; ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால்
உண்டானதல்ல” (எபே.2:8-9) என்று வேதம் கூறுகிறது. ”மனுஷன் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளில்லாமல் விசுவாசத்தினாலேயே
நீதிமானாக்கப்படுகிறான்” என்று ரோமர் 3:28ல் பவுல் எழுதுகிறார்.
இயேசுவிடம் இருந்து நம் கவனத்தைத் திருப்பும் சுவிசேஷமானது சுவிசேஷத்திற்கு எதிரானது
ஆகும். அல்லது, பவுல் சொல்வது போல, அது சுவிசேஷமே அல்ல. அது குழப்பத்தைத் தவிர வேறெதையும்
உண்டாக்குவதில்லை. ”சபையில் மிகவும் அதிகமாக பிரச்சனையை உண்டாக்குகிறவர்கள் (இப்பொழுதும்
எப்பொழுதும்) வெளியே இருந்து கொண்டு சபையை எதிர்க்கிறவர்களோ, கேலி செய்கிறவர்களோ,
மற்றும் உபத்திரவப் படுத்துகிறவர்களோ அல்ல. மாறாக, உள்ளேயே இருந்து கொண்டு சுவிசேஷத்தை
மாற்ற முயற்சி செய்கிறவர்கள் தான் அதிக பிரச்சனையை உண்டாக்குகிறார்கள்” என்று ஜான்
ஸ்டார் எச்சரிக்கிறார். கிறிஸ்து இல்லாத சுவிசேஷம், சிலுவை இல்லாத சுவிசேஷம் என்பது
எதிரெதிர் அர்த்தம் உடைய இரண்டு வார்த்தைகள் சேர்ந்த ஒரு முரண் தொடை(oxymoron), அதாவது
அது நல்ல செய்தியே அல்ல. ஆகவே, இயேசு கிறிஸ்துவிடம் இருந்து நம்மைப் பிரிக்கும் எந்த
போதனையையும் நாம் ஏற்றுக் கொள்ளாமல் நிராகரிக்க வேண்டும். வானத்தில் இருந்து ஒரு தேவ
தூதனே வந்து அல்லது ஒரு பிரபலமான தேவ ஊழியரே
வந்து வேறொரு நற்செய்தியைப் பிரசங்கித்தாலும் கூட, நாம் அவர்களைக் கண்டித்து, அவர்களின்
செய்தியை ஏற்றுக் கொள்ளக் கூடாது.
பயன்பாடு: கிறிஸ்துவின் சுவிசேஷமானது
அதை விசுவாசிக்கிற எவருக்கும் இரட்சிப்பு உண்டாவதற்கு தேவ பெலனாக இருக்கிறது (ரோமர்
1:16). கிறிஸ்துவின் கிருபையில் வாழ தேவன் என்னை அழைத்திருக்கிறார். கிறிஸ்துவை விட்டு
என்னைப் பிரிக்கும் எதையும் நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். நான் இயேசுகிறிஸ்துவின்
சுவிசேஷத்தை எப்பொழுதும் உறுதியாகப் பற்றிக் கொள்வேன். மக்களை விடுதலையாக்கும் சுவிசேஷத்தைப்
பிரசங்கித்து, அதற்காக வாழ்வேன்.
ஜெபம்: தந்தையாகிய தெய்வமே, நீர்
தருகிற பரிசாகிய இரட்சிப்புக்காக உமக்கு நன்றி. நான் விசுவாசத்தின் மூலமாக, கிருபையினாலே
அதைப் பெறுகிறேன். கர்த்தாவே, நான் கிறிஸ்துவின் கிருபையின் வாழ எனக்கு உதவியருளும்.
பரிசுத்த ஆவியானவரே, பயமின்றி தைரியமாக சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க என்னைப் பலப்படுத்தியருளும்.
ஆமென்.
- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573
Day - 268
No comments:
Post a Comment