Wednesday, September 8, 2021

அன்பே பிரதானம்

வாசிக்க: ஏசாயா 11,12; சங்கீதம் 68; 1 கொரிந்தியர் 13

வேத வசனம் 1 கொரிந்தியர் 13: 4. அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது; அன்புக்குப் பொறாமையில்லை; அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது,
5.
அயோக்கியமானதைச் செய்யாது, தற்பொழிவை நாடாது, சினமடையாது, தீங்கு நினையாது,
6.
அநியாயத்தில் சந்தோஷப்படாமல், சத்தியத்தில் சந்தோஷப்படும்.
7. சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் விசுவாசிக்கும், சகலத்தையும் நம்பும், சகலத்தையும் சகிக்கும்.

கவனித்தல்: 1 கொரிந்தியர் 13ம் அதிகாரமானது அனேக கிறிஸ்தவர்களுக்கு மிகவும் விருப்பமான ஒரு வேதபகுதி ஆகும். 1 கொரிந்தியர் 13ல் குறிப்பிடப்பட்டிருக்கிற அன்பின் மகத்துவத்தை அதை வாசிக்கிற அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள். ஆயினும், வாழ்க்கையில் அப்படிப்பட்ட அன்பை செயல்படுத்துவது பற்றி கேள்வி கேட்கும்போது, அன்பு செய்வதில் உள்ள கஷ்டங்கள் அல்லது சாக்குபோக்குகளை ஜனங்கள் கூறுவார்கள். தேவனைத் தவிர, வேறு யார் இப்படி அன்பு செய்ய முடியும்? என்று அவர்கள் சொல்லக் கூடும். சிலர் நாங்கள் அன்பு செய்ய எங்களால் இயன்ற அளவுக்கு முயற்சி செய்கிறோம் என்று சொல்லி, அப்படிப்பட்ட அன்பை என்றாவது ஒரு நாள் பெறுவோம் என்கிற நம்பிக்கையை உடையவர்களாக இருக்கலாம். 1 கொரிந்தியர் 13ம் அதிகாரத்தின் முதன் மூன்று வசனங்களில் ஆவிக்குரிய வரங்களைக் காட்டிலும் அன்பு பெரிது என்று பவுல் கூறுகிறர். 4-7 வரையிலான வசனங்கள் அன்பின் 15 குணாதியங்களைப் பற்றி குறிப்பிடுகிறது. 8-13 வரையிலான வசனங்களில், அன்பின் நீடித்து நிலைத்திருக்கும் தன்மையைப் பற்றி பவுல் விளக்குகிறார்.

அன்பு என்ற வார்த்தையானது பயன்படுத்தப்படும் சூழலைப் பொறுத்து பல அர்த்தங்களை உடையதாக இருக்கிறது.  அன்பு என்பதைக் குறிக்க குறைந்த பட்சம் ஆறு கிரேக்க வார்த்தைகள் இருக்கின்றன: Agape, Eros, Philia, Storge, Philautia, and Xenia. 1 கொரிந்தியர் 13ல், நிபந்தனையற்ற அல்லது தன்னலமற்ற அன்பைக் குறிக்கும் அகாபே (Agape)  என்ற வார்த்தையை பவுல் பயன்படுத்துகிறார். அன்பு என்பது ஒரு கொள்கை, அல்லது ஒரு தத்துவம்  அல்லது ஒரு உணர்வு என்று அனேகர் நினைக்கின்றனர். ஆனால், 1 கொரி.13:4-7 பகுதியானது அன்பின் செயல்களைக் குறிப்பிடுகிறது. ”வசனத்தினாலும் நாவினாலுமல்ல, கிரியையினாலும் உண்மையினாலும் அன்புகூரக்கடவோம்” என்று வேதம் நம்மை உற்சாகப்படுத்துகிறது (1 யோவான் 3:18; 4:16). தேவன் நம் மீது வைத்த அன்பிற்கு வேதம் நமக்கு சாட்சி பகருகிறது. ரோமர் 5:8ல் நாம் வாசிப்பது போல, “நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்.” தம் அன்பில் நிலைத்திருக்க நம்மை அழைத்த இயேசு, ” நான் உங்களில் அன்பாயிருக்கிறதுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டும்” என நமக்கு கட்டளையிட்டிருக்கிறார். கிறிஸ்தவ சபையில், ஐக்கியங்களில், வேலை பார்க்கும் இடங்களில், மற்றும் அமைப்புகளில் உள்ள பல பிரச்சனைகளை உண்டாக்கும் அடிப்படைக் காரணங்களில் ஒன்று அன்பு குறைபாடு அல்லது அன்பில்லாமையே. நம்மில் அன்பு இல்லை எனில், நாம் மற்றவர்களில் நலனுக்காக நம் ஆவிக்குரிய வரங்களை பயன்படுத்த மாட்டோம். நம் கிறிஸ்தவ விசுவாசம் மற்றும் நம்பிக்கைக்கான ஆதாரம் அன்பு ஆகும். ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்பது இயேசு அடிக்கடி சொன்ன கட்டளைகளிலும், புதிய ஏற்ப்பாட்டு போதனைகளிலும் இது ஒன்று ஆகும். “நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள்” என்று இயேசு சொன்னார் (யோவான் 13:35).

பயன்பாடு: அன்பு என்றால் என்ன என்பதையும் எது அன்பு அல்ல என்பதையும் நான் கற்றுக் கொண்டிருக்கிறேன். முதலாவதாக, அன்பு என்பது வெறுமனே அதைப் பற்றி பேசிக்கொண்டிருப்பது அல்ல. அது என் செயல்களில் நான் என்ன செய்கிறேன் என்பதைப் பற்றியது ஆகும். அன்பின் மகத்துவம் மற்றும் நிலைத்திருக்கும் தன்மையை நான் புரிந்து கொள்கையில், என் வாழ்க்கையில் புதிய ஆடைகளை எடுக்க என்னால் முடிந்த அளவுக்கு முயற்சி செய்வேன்/செய்யவேண்டும். இயேசு என்னை நேசித்தது போலவே நான் மற்றவர்களையும் நான் நேசிக்க வேண்டும்.

ஜெபம்: அன்பின் தேவனே, எனக்காக நீர் காண்பிக்கிற நன்மைகளுக்காக உமக்கு நன்றி. இயேசுவே, நான் அன்பில் நிலைத்திருக்கவும், ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவும் அனுதினமும் எனக்கு உதவும்.  கர்த்தாவே, என் முழு இருதயத்தோடும், என் முழு மனதோடும், என் முழு ஆத்துமாவோடும், மற்றும் என் முழு பலத்தோடும் நான் உம்மை நேசிக்க/அன்பு செய்ய எனக்கு உதவியருளும். ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

Day - 250

No comments: