வாசிக்க: உன்னதப்பாட்டு 5,6; சங்கீதம் 61; 1 கொரிந்தியர் 7
வேத வசனம்: சங்கீதம் 61: 1. தேவனே, என் கூப்பிடுதலைக்கேட்டு, என் விண்ணப்பத்தைக் கவனியும்.
2. என் இருதயம் தொய்யும்போது பூமியின்
கடையாந்தரத்திலிருந்து உம்மை நோக்கிக் கூப்பிடுவேன்; எனக்கு எட்டாத உயரமான கன்மலையில் என்னைக் கொண்டுபோய்விடும்.
கவனித்தல்: உலகில் உள்ள எல்லா மதங்களிலுமே
ஜெபம் என்பது பொதுவான ஒன்றாக இருக்கிறது. தங்களுடைய வேண்டுதல்களை கடவுளுக்கு தெரியப்படுத்த
ஜெபம் உதவுகிறது என மக்கள் நினைப்பதால், ஜெபம் அவர்களுக்கு ஒரு வித மன திருப்தியை கொடுக்கிறது.
பல மதங்களில், மக்கள் தங்கள் தெய்வத்திடம் இருந்து பதிலை எதிர்பார்ப்பதில்லை.
நம் தேவன் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறவர் என்று வேதாகமம் சொல்கிறது. சங்கீதக்காரனாகிய
தாவீது சங்கீதம் 61 எழுதிய சூழ்நிலையைப் பற்றி குறிப்பிடவில்லை. தான் மரணத்துக்குச்
சமீபமாக இருப்பதாக அவரை நினைக்கச் செய்த ஒரு கடுமையான நெருக்கடியில் அவர் இருந்தார்
என்பதை 2ம் வசனத்தில் இருந்து நாம் புரிந்து கொள்கிறோம். நாம் தேவனை நோக்கி எந்த நேரத்திலும்,
பூமியில் எந்த மூலையில் இருந்தும் ஜெபிக்க முடியும். நம் வாழ்க்கைச் சூழ்நிலைகள் நம்மை
திணறடித்து, நம் இருதயங்களைப் பலவீனப்படுத்தும் போது, நம் வாழ்க்கை மீதான பிடிப்பை
இழந்து, புதை மணலின் மீது நிற்பதாக நாம் உணரலாம். சங்கீதக்காரன்
பேசக் கூட முடியாத அப்படிப்பட்ட ஒரு பயங்கர சூழலில் இருந்ததாக தோன்றுகிறது. ஆயினும்,
உதவிக்காக அவர் தேவனை அழைத்தார். மூன்றாம் வசனத்தில், தான் உறுதியாக நிற்கும்படியான
கன்மலைக்குத் தன்னை அழைத்துச் செல்லும்படி தாவீது தேவனிடம் கேட்கிறார். கர்த்தரே தன்
கன்மலை என்பதில் தாவீது உறுதியாக இருந்தார். அதை சங்கீதப் புத்தகத்தில் பல இடங்களில்
திரும்பத் திரும்ப குறிப்பிட்டிருக்கிறார்.
நம் வாழ்க்கையின் சோதனையான (அ) கஷ்டமான காலங்கள்
நமக்கு தேவனுடைய உதவி தேவை என்பதைப அறிந்து கொள்ளச் செய்கிறது. கடந்த காலங்களில் நமக்கு
உதவின தேவன், நம் நிகழ்கால புயல்கள் மற்றும் போராட்டங்களிலும் நமக்கு உதவ முடியும். கர்த்தரே நம் கன்மலை. அவர் நம் புகலிடமும், எதிரியின்
எந்த தாக்குதல்கள் மற்றும் ஆபத்துகளில் இருந்து நம்மைப் பாதுகாக்கும் பலத்த துருகமாகவும்
இருக்கிறார். தேவன் நம் ஜெபங்களுக்குச் செவிகொடுத்து, பதில தருகிறார் என்ற நிச்சயம்
நமக்கு உண்டு. ஆகவே, சமாளிக்க முடியாத பிரச்சனை அல்லது சூழ்நிலையில் இருப்பதாக நாம்
கண்டு கொள்ளும் நேரங்களில் எல்லாம், நாம் தேவனை நோக்கிக் கூப்பிட்டு, நம் ஜெபங்களுக்குப்
பதில் தரும்படி நாம் வேண்டுதல் செய்யலாம். நாம் வேண்டிக் கொள்கிறதற்கு முன்னமே, தேவன்
நம் தேவைகளை அறிந்திருக்கிறார். நாம் அவரை “அப்பா, பிதாவே” என்று கூப்பிடும்போது,
அவர் நம் ஜெபங்களுக்குப் பதில் அளித்து, அவருடைய சித்தத்தைச் செய்ய நம்மை வழிநடத்துகிறார்.
பயன்பாடு: நான் தேவனை நோக்கி
எப்பொழுதும், எல்லா இடங்களிலும் ஜெபிக்க முடியும். நான் ஜெபிக்கத் துவங்கும் போது,
நான் தேவனிடம் இருந்து நம்பிக்கையையும், விடுதலையைப் பற்றிய உறுதியையும் பெறுகிறேன். அலைகளுக்கு எதிராக உறுதியாக நிற்க தேவன் என்னைப்
பலப்படுத்தி, எனக்கு எட்டாத உயரமான கன்மலையில் என்னைக் கொண்டு போய் விடுகிறார். “கூப்பிடுகிற எளியவனையும், உதவியற்ற சிறுமையானவனையும்
அவர் விடுவிப்பார்” (சங்.72:13). தேவனே என் புகலிடம், என் கேடகம், என்
கோட்டை, என் பலத்த துருகமும், என் இரட்சிப்புமனவர்.
ஜெபம்: தந்தையாகிய தெய்வமே,
என் இருதயத்தின் ஜெபங்கள் அனைத்திற்கும் நீர் கொடுத்த பதில்களுக்காக உமக்கு நன்றி.
ஆண்டவரே, ஆழங்களில் இருந்து உம்மை நோக்கி நான் கூப்பிடும்போது என் வேண்டுதல்களுக்கு
செவிகொடுப்பதற்காக உமக்கு நன்றி. இயேசுவே, நீர் துதிக்கும் ஆராதனைக்கும் பாத்திரராக
இருக்கிறீர். கர்த்தாவே, மகிழ்ச்சியாக உம்மை துதிக்கவும், உண்மையுடன் உமக்கு ஊழியம்
செய்யவும் எனக்கு உதவியருளும். ஆமென்.
- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573
Day - 243
No comments:
Post a Comment