வாசிக்க: ஏசாயா 25,26; சங்கீதம் 75; 2 கொரிந்தியர் 3
வேத வசனம்: 2 கொரிந்தியர் 3: 18. நாமெல்லாரும் திறந்த முகமாய்க் கர்த்தருடைய மகிமையைக் கண்ணாடியிலே
காண்கிறதுபோலக் கண்டு, ஆவியாயிருக்கிற கர்த்தரால் அந்தச் சாயலாகத்தானே மகிமையின்மேல் மகிமையடைந்து மறுரூபப்படுகிறோம்.
கவனித்தல்: ஒவ்வொரு கிறிஸ்தவரும் தன் வாழ்க்கையில் பயிற்சி
செய்து அனுதினமும் அனுபவிக்க வேண்டிய ஒரு முக்கியமான சத்தியத்தை 2 கொரிந்தியர் 3:18 நமக்குச்
சொல்கிறது. நாம் திறந்த முகமாய் தேவனுடைய மகிமையைக் காணும்படி நம்மைப் பெலப்படுத்துகிற
புது உடன்படிக்கை ஊழியத்தின் மகிமையை பவுல் விளக்குகிறார். ஒருவர் “கர்த்தரிடத்தில் மனந்திரும்பும்போது, (தேவனுடைய மகிமையை
நேரடியாக காண்பதைத் தடுத்த) அந்த முக்காடு எடுபட்டுப்போம்”
என்று 16ஆம் வசனத்தில் அவர் சொல்கிறார். கிறிஸ்துவின் மூலமாக, தேவனை நெருங்கி சேரக்
கூடிய சுதந்திரத்தை நாம் பெற்றிருக்கிறோம். நாம் தேவனிடம் வரும்போது, ஒரு மனிதன் கண்ணாடியில்
தன் முகத்தைக் காண்பது போல நாம் கர்த்தருடைய மகிமையைப் பிரதிபலிக்க வேண்டும். இயேசுவே தேவனுடைய “மகிமையின்
பிரகாசம்” என்று வேதம் சொல்கிறது (எபி.1:3). அவர் வார்த்தையானவர். தேவனுடைய
வார்த்தையை உற்று நோக்குவதன் மூலமாக, நாம் தேவனுடைய மகிமையை தியானிக்கிறோம், சிந்தித்துப்
பார்க்கிறோம். தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாக இருக்கிறது. நாம்
அதை தியானிக்கும்போது, அது நம்மில் மாற்றத்தை உண்டுபண்ணுகிறது. இங்கு கொடுக்கப்பட்டிருக்கிற
வினைச் சொல்லைக் கவனியுங்கள்: ”மகிமையின்மேல் மகிமையடைந்து
மறுரூபப்படுகிறோம்.” இது தொடர்ந்து
வழக்கமாக நடைபெறுகிற ஒரு செயல்முறை ஆகும். நாம் கிறிஸ்துவின் சாயலில் நம்மை அடையாளம்
காணும்படி இந்த மறுரூபமாகுதல் நம்மை உருமாற்றுகிறது. இந்த மாற்றத்தை நம் வாழ்வில்
நாம் காண, கிறிஸ்தவர்களாகிய நாம் இயேசு கிறிஸ்துவின் மீது எப்பொழுதும் நம் கண்களைப்
பதியவைத்து, தேவனுடைய வார்த்தையில் உள்ள அவருடைய மகிமையை உற்று நோக்கிப் பார்க்க வேண்டும்.
சங்கீதக்காரன் பாடுவது போல, ”அவர்கள் அவரை நோக்கிப்பார்த்துப்
பிரகாசமடைந்தார்கள்; அவர்கள் முகங்கள் வெட்கப்படவில்லை” (சங்.34:5). நாம் தேவனுடைய வார்த்தையில் கிறிஸ்துவைத் தொடர்ந்தேர்ச்சியாகப் பார்க்கும்போது,
அது நாம் அவரைப் போல மாறும்படி நம்மை மாற்றுகிறது. இது உண்மையிலேயே மகிமையான ஒரு காரியம்
ஆகும். நாம் மகிமையின் மேல் மகிமையடைவோம் என பவுல் சொல்கிறார். அப்படியானால், இது
ஒரு செயல்முறை மட்டுமல்ல, படிப்படியாக நாம் தொடர்ந்து பெறுகிற ஒரு காரியம் என்பதை
இது குறிக்கிறது. இந்த மகிமைக்கான ஆதார ஊற்று கர்த்தரே என்பதை நாம் நினைவில் கொள்ள
வேண்டும். நாம் வேறு எந்த வழியிலும் இந்த மகிமையைப் பெற முடியாது. வாரன் வியர்ஸ்பி
என்ற தேவ மனிதர் இந்த அடிப்படையான சத்தியத்தை மிக அழகாக பின்பவருமாறு சுருக்கமாகக்
கூறுகிறார்: “தேவ ஜனங்கள் தேவனுடைய வார்த்தையை உற்று நோக்கி, தேவ மகிமையைப் பார்க்கும்போது,
தேவ ஆவியானவர் அவர்களை தேவ குமாரனுக்கு ஒப்பாக மாறும்படி மறுரூபமாக்குகிறார்.” நம்மை
தேவன் “தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு
முன்குறித்திருக்கிறார்” என்பது ஒரு பாக்கியம் ஆகும் (ரோமர் 8:29). இது கர்த்தருடனான
நம் அனுதின அனுபவமாக இருக்கட்டும்.
பயன்பாடு: நான் அனுதினமும் தேவனுடைய
வார்த்தையைத் தியானித்து, அது என் வாழ்க்கையை முற்றிலும் மறுரூபமாக்குவதற்கு அனுமதிக்க
வேண்டும். ”ஒருவன் திருவசனத்தைக் கேட்டும் அதின்படி
செய்யாதவனானால், கண்ணாடியிலே தன் சுபாவ முகத்தைப் பார்க்கிற
மனுஷனுக்கு ஒப்பாயிருப்பான்; அவன் தன்னைத்தானே பார்த்து, அவ்விடம்விட்டுப் போனவுடனே, தன் சாயல் இன்னதென்பதை மறந்துவிடுவான்” என்று யாக்கோபு 1:23-24 சொல்கிறது.
தேவனுடைய வார்த்தை என்னிடம் சொல்கிறபடி நான் செயல்படுவேன். அனுதினமும், என்னில் தேவன்
கொடுக்கிற இயேசுவின் மகிமையை நான் தியானித்து என் வாழ்வில் அதைப் பிரதிபலிப்பேன்.
ஜெபம்: பிதாவாகிய தேவனே, என்
வாழ்வில் உம் மகிமையைக் காணச் செய்கிற உம் கிருபைக்காக உமக்கு நன்றி. கர்த்தாவே,
என் கண்களை எப்பொழுதும் உம் மேல் வைத்து, என் வாழ்வில் நீர் உண்டாக்க விரும்புகிற மாற்றத்தை
அடைய எனக்கு உதவியருளும். பரிசுத்த ஆவியானவரே, அனுதினமும் நான் தேவனுடைய மகிமையைத்
தேடவும் பெற்றுக் கொள்ளவும் எனக்கு உம் பலத்தைத் தந்தருளும். ஆமென்.
- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573
Day - 257
No comments:
Post a Comment