வாசிக்க: ஏசாயா 13,14; சங்கீதம் 69; 1 கொரிந்தியர் 14
வேத வசனம்: 1 கொரிந்தியர் 14: 18.
உங்களெல்லாரிலும் நான் அதிகமாய்ப் பாஷைகளைப்
பேசுகிறேன், இதற்காக என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்.
19. அப்படியிருந்தும், நான் சபையிலே அந்நியபாஷையில் பதினாயிரம் வார்த்தைகளைப் பேசுகிறதிலும், மற்றவர்களை உணர்த்தும்படி என் கருத்தோடே ஐந்து வார்த்தைகளைப் பேசுகிறதே எனக்கு
அதிக விருப்பமாயிருக்கும்.
20. சகோதரரே, நீங்கள் புத்தியிலே குழந்தைகளாயிராதேயுங்கள்; துர்க்குணத்திலே குழந்தைகளாயும், புத்தியிலோ தேறினவர்களாயுமிருங்கள்.
கவனித்தல்: சமீபத்தில் ஆங்கிலிக்கன் திருச்சபையைச் சேர்ந்த மிகவும் பிரபலமான வேத பண்டிதர் ஒருவர் தனது வேலை பற்றிய கவலையை உறவினர் ஒருவரிடம் சொன்னபோது பரிசுத்த ஆவியில் நிறைந்து அந்நிய பாஷைகளில் பேசின அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். அவர் பகிர்ந்த செய்தி விரைவிலேயே உலகமெங்கும் பரவி, அனேக கிறிஸ்தவர்களுக்கு அவருடைய சாட்சி உற்சாகமளித்தது. பிரசங்க ஊழியத்திற்குச் செல்வதற்கு முன் சில நாட்கள் தன் தனியறையில் அந்நியபாஷைகளில் பேசி ஜெபிப்பது தன் வழக்கம் என்று இந்தியாவின் புகழ்பெற்ற நற்செய்தியாளர் ஒருவர் முன்பு சொன்னார். அந்நிய பாஷையில் பேசுதல் என்பது ஒரு கிறிஸ்தவருடைய தனிப்பட்ட பக்திவிருத்திக்கு உதவுகிறது. ஆதிச்சபையோடு அந்நிய பாஷை போன்ற ஆவிக்குரிய வரங்கள் முடிந்து விட்டது என்பதை நம்பத் தேவையோ, காரணங்களோ இல்லை. அந்நிய பாஷைகளில் பேசுவதற்கு எதிராக வேதாகமமோ பவுலோ எதுவும் சொல்ல வில்லை (வ.39). ஆயினும், சபையில் எல்லோருக்கும் முன் பேசும்போது அந்நிய பாஷைகளில் பேசுவதற்கு விளக்கம் கொடுப்பவர் இல்லை எனில் அந்நிய பாஷை பேசும் வரத்தை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது என்று பவுல் அறிவுரை கூறுகிறார் (வ.28). பவுல் ஏன் இப்படிச் சொன்னார் என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
”உங்களெல்லாரிலும்
நான் அதிகமாய்ப் பாஷைகளைப் பேசுகிறேன்” என்று பவுல் வெளிப்படையாக
குறிப்பிட்டிருக்கிறார். ஆகவே, பவுல் அந்நிய பாஷை பேசும் வரத்தைப் பயன்படுத்துவதற்கு
எதிராக எதையும் நிச்சயமாக சொல்ல வில்லை. 1 கொரிந்தியர் 12ம் அதிகாரத்தில், ஆவிக்குரிய
வரமானது மற்றவர்களின் பிரயோஜனத்திற்காக கொடுக்கப்பட்டிருக்கிறது என்று பவுல் சொல்கிறார்.
ஆவிக்குரிய வரங்கள் பற்றிய கொரிந்து விசுவாசிகளின் கேள்விக்குப் பதிலளிக்கையில், ”நீங்களும் ஆவிக்குரிய வரங்களை நாடுகிறவர்களானபடியால், சபைக்குப் பக்திவிருத்தி உண்டாகத்தக்கதாக அவைகளில் தேறும்படி நாடுங்கள்” என்று பவுல் அவர்களை
ஊக்கப்படுத்தினார். சபையில் அனைத்து கிறிஸ்தவர்களும் ஒருவருக்கொருவர் பக்திவிருத்தியடைய
ஏதுவாகப் பேச கரிசனை உள்ளவர்களாக இருக்க வேண்டும். அதற்கு, நாம் பேசுகிற பதினாயிரம்
வார்த்தைகளைப் பார்க்கிலும், கருத்தாய் பேசுகிற ஐந்து வார்த்தைகள் பயனுள்ளது ஆகும்.
பண்டைய கிரேக்க மொழியில், பதினாயிரம் (Myriad) தான் இருப்பதிலேயே மிகப் பெரிய எண்
ஆகும். ஆவிக்குரிய வரங்கள் குறித்த உள்ள தங்கள் ஆர்வத்தில், கொரிந்து விசுவாசிகள்
குழந்தைகளைப் போல யோசித்திருக்க வேண்டும். ”சகோதரரே, நீங்கள் புத்தியிலே குழந்தைகளாயிராதேயுங்கள்” என்று பவுல் கொரிந்து
விசுவாசிகளைக் கேட்டுக் கொள்கிறார். ஆவிக்குரிய வரங்களை நாடுவதில், கிறிஸ்தவர்கள்
குழந்தைத்தனமான சிந்தனைகளையும் செயல்களையும் கைவிட வேண்டும். அதே நேரத்தில், நாம்
குழந்தைகளைப் போல தீய எண்ணங்கள் மற்றும் விருப்பங்கள் இல்லாதவர்களாகவும் இருக்க வேண்டும்.
”சர்ப்பங்களைப்போல வினாவுள்ளவர்களும் புறாக்களைப்போலக்
கபடற்றவர்களுமாய் இருங்கள்” என்று இயேசு சொன்னார் (மத்.10:16). ரோம சபைக்கு பவுல்
எழுதியது போல, நாம் ”நன்மைக்கு ஞானிகளும் தீமைக்குப்
பேதைகளுமாயிருக்கவேண்டும்” (ரோமர் 16:19). எல்லாவற்றிற்கும் மேலாக, அன்பே நம்
ஆவிக்குரிய வரங்களை மற்றவர்களை கட்டி எழுப்பவும், அவர்களுக்குப் பக்திவிருத்தி
உண்டாக்க பயன்படுத்தவும் உதவுகிறது. நாம் இதை நினைவில் கொண்டு, அன்பையும் ஆன்மீக வரங்களையும்
தேடி நாட கவனமாக இருப்போமாக.
பயன்பாடு: தேவன் எனக்கு ஆவிக்குரிய
வரங்களைத் தந்திருக்கிறார். அவருடைய மகிமைக்காக அவைகளை பயன்படுத்த நான் ஜாக்கிரதையுள்ளவனாக
இருக்க வேண்டும். சபையில் பல வார்த்தைகளைப்
பேசி நான் சுய திருப்தி அடைவதற்குப் பதிலாக, மற்றவர்களுடைய தேவைகள் குறித்த உணர்வுள்ளவனாக
நான் இருந்து, அவர்களுக்கு பக்தி விருத்தி உண்டாக்குகிற வார்த்தைகளை நான் பேச வேண்டும்/பேசுவேன்.
ஜெபம்: சர்வ வல்லமையுள்ள தேவனே, ஒவ்வொரு கிறிஸ்தவருக்கும்
நீர் கொடுத்திருக்கிற ஆவிக்குரிய வரங்களுக்காக உமக்கு நன்றி. இயேசுவே, என் ஆவிக்குரிய
வரம்(வரங்கள்) என்ன என்பதைப் பற்றிய புரிதலுடன், சபையில் மற்றவர்களுக்கு பக்திவிருத்தி
உண்டாகும்படி அதை ஏற்ற விதத்தில் பயன்படுத்த எனக்கு உதவியருளும். பரிசுத்த ஆவியானவரே, ஒரு முதிர்ந்த கிறிஸ்தவராக
நான் மாற/வாழ எனக்கு உம் பலத்தைத் தாரும். ஆமென்.
- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573
Day - 251
No comments:
Post a Comment