வாசிக்க: ஏசாயா 43,44; சங்கீதம் 84; 2 கொரிந்தியர் 12
வேத வசனம்: ஏசாயா 44: 21. யாக்கோபே, இஸ்ரவேலே, இவைகளை நினை; நீ என் தாசன்; நான் உன்னை உருவாக்கினேன்; நீ என் தாசன்; இஸ்ரவேலே, நீ என்னால் மறக்கப்படுவதில்லை.
22. உன் மீறுதல்களை மேகத்தைப்போலவும், உன் பாவங்களைக் கார்மேகத்தைப்போலவும் அகற்றிவிட்டேன்; என்னிடத்தில் திரும்பு; உன்னை நான் மீட்டுக்கொண்டேன்.
கவனித்தல்: கஷ்ட காலங்களில், தன்னை
எல்லாரும் மறந்து கைவிட்டு விட்டார்கள் என ஒருவர் நினைக்கக் கூடும். இங்கே, வாக்குப்பண்ணப்பட்ட
தேசத்தில் இருந்து நாடுகடத்தப்படும் இஸ்ரவேலர்களின் மீட்பு குறித்த தீர்க்கதரிசனத்தை
ஏசாயா தீர்க்கதரிசி சொல்கிறார். விக்கிரக வணக்கத்திற்கு எதிரான ஒரு கடுமையான எச்சரிக்கை
மற்றும் மனிதர்கள் கைகளால் செய்யப்பட்ட சிலைகளை வணங்கும் மதியீனத்தை வெளிக்காட்டிய
பின்பு, தேவ ஜனங்கள் தம் எச்சரிக்கைகளை நினைவு கூரும்படி அழைத்து, இஸ்ரவேலருக்கு தான்
யார் என்பதையும், இஸ்ரவேலர்கள் தனக்கு யார் என்பதையும் தேவன் நினைவுபடுத்துகிறார்.
விக்கிரகங்களைப் போலல்லாது, தேவன் நம் சிருஷ்டிகராக இருக்கிறார். நாம் அவருடைய ஊழியர்களாக
இருக்கிறோம். தேவன் தம் ஜனத்தை மறப்பதில்லை என்று வாக்குப்பண்ணுகிறார். ஏசாயா
43:22-24இல், இஸ்ரவேலர்கள் தன்னை முழுமனதோடு தேடவில்லை என்பதாக தேவன் கூறுகிறார்.
ஆயினும், தேவன் அவர்களை அன்பு செய்வதை அது தடுக்கவில்லை. நாம் தேவனால் தெரிந்தெடுக்கப்பட்டவர்கள்.
அவர் நம்மை ஒருபோதும் புறக்கணிப்பதில்லை. மாறாக, எப்பொழுதும் நம்முடனே கூட இருக்கிறார்
(ஏசாயா 41:8-10). நாம் எதற்கும் பயப்படாமல் இருக்க வேண்டும் என்று நம்மை அவர் உற்சாகப்படுத்துகிறார். “பயப்படாதே; உன்னை மீட்டுக்கொண்டேன்; உன்னைப் பேர்சொல்லி அழைத்தேன்; நீ என்னுடையவன்” என்று தேவன் சொல்கிறார் (ஏசாயா 43:1). ஏசாயா
4:21ல், தேவனே நம்மை உருவாக்கினவர் என்றும் அவர் நம்மை மறப்பதில்லை என்றும் தேவன்
நமக்கு நினைவுபடுத்துகிறார்.
தேவன் தம் ஜனங்கள் தன்னிடம் திரும்ப வேண்டும்
என்று அழைக்கிறார். நாம் தேவனிடம் செல்லும்போது, நம் மீறுதல்களை அகற்றவும், பாவங்களில்
இருந்து நம்மை சுத்திகரிக்கவும் அவர் மன்னிப்பை அருளுகிறார். ”இஸ்ரவேலே, நீ திரும்புகிறதற்கு மனதாயிருந்தால் என்னிடத்தில்
திரும்பு” என்று எரேமியா தீர்க்கதரிசி
மூலமாக தேவன் அழைக்கிறார் (எரே.4:1). நமக்கு உதவி செய்து, அவருக்கு முன்பாக நிற்க நம்மை
சுத்திகரிப்பது தேவனுக்கு லேசான காரியம் ஆகும். நாம் மனம் திரும்புதலுடன் தேவனிடம்
திரும்பும்போது, நம் அக்கிரமங்கள் மற்றும் பாவங்களை அகற்றிப் போட அவர் வல்லவராக இருக்கிறார்
(ஏசாயா 43:1; 44:22-23). தேவன் நம் மீட்பரும் இஸ்ரவேலின் பரிசுத்தருமாக இருக்கிறார்
(ஏசாயா 41:14). ஏசாயா மூலமாக ட்ஏவன் கொடுத்த இந்த வாக்குத்தத்தங்களை நாம் வாசிக்கும்போது,
அவை சொல்லப்பட்ட நிகழ்வுகள் நடைபெறுவதற்கு பல ஆண்டுகள் முன்பு முன்னறிவிக்கப்பட்டவை
என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். சகலத்தையும் அறிந்திருக்கிற இந்த தேவன் நம்மைப்
பேர் சொல்லி அழைத்திருக்கிறார். நம் சிருஷ்டிகராகிய தேவன் நம்மை ஒரு போதும் மறப்பதில்லை.
நாம் அவரை எப்பொழுதும் நினைவு கூர்கிறோமா? தேவன் தம் வாக்குத்தத்தங்களை நிறைவேற்ற
எவரையும் மாற்ற/பயன்படுத்த முடியும். தேவனுடைய ஊழியர்களாக நாம் அவரை உண்மையுடன் சேவிக்க
வேண்டும். இயேசு அவருடைய இரத்தத்தினால் நம்மை மீட்டுக் கொண்டார் (1 பேதுரு
1:18-19). ”ஆதலால், நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில்
சகாயஞ்செய்யுங்கிருபையை அடையவும், தைரியமாய்க்
கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம். (எபி.4:16; 10:20-23).
பயன்பாடு: தேவன் என் சிருஷ்டிகர்.
தேவனுக்கு உரிய இடத்தை நான் வேறு எவருக்கும் அல்லது வேறு எந்த உலக காரியங்களுக்கும்
கொடுக்க மாட்டேன். என்னில் வேதனை உண்டாக்கும் காரியம் ஏதேனும் இருந்தால், நான் தேவனுடைய
எச்சரிப்பை நினைவுகூர்ந்து, அவரிடம் மனந்திரும்பிச் செல்வேன். நான் தேவனுடைய வார்த்தைகளை நினை கூர்ந்து, அவைகளை
கவனமாகப் பின்பற்றுவேன். நான் முழு மனதுடன், வலதுபுறம் இடது புறம் சாயாமல், தேவனை
உண்மையாக சேவிப்பேன்.
ஜெபம்: சிருஷ்டிகராகிய தேவனே,
என்னை மீட்ட உம் அன்பிற்காக நன்றி. ஆண்டவரே, உண்மையுடன் உம்மை ஆராதிக்கவும் சேவிக்கவும்
எனக்கு உதவியருளும். பரிசுத்த ஆவியானவரே, தேவனுடன் அனுதினம் வழிபிசகாமல் நடப்பதற்கான
பலத்தை எனக்குத் தந்தருளும். ஆமென்.
- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573
Day - 266
No comments:
Post a Comment