வாசிக்க: ஏசாயா 27,28; சங்கீதம் 76; 2 கொரிந்தியர் 4
வேத வசனம்: 2 கொரிந்தியர் 4: 17.
மேலும் காணப்படுகிறவைகளையல்ல, காணப்படாதவைகளை நோக்கியிருக்கிற நமக்கு, அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவம் மிகவும் அதிகமான
நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது.
18. ஏனெனில், காணப்படுகிறவைகள் அநித்தியமானவைகள், காணப்படாதவைகளோ நித்தியமானவைகள்.
கவனித்தல்: என் பாடுகளையும் வேதனையும் நீங்கள் அனுபவித்தால்
மட்டுமே அதை புரிந்து கொள்வீர்கள் என்று ஜனங்கள் மனம் வெதும்பி கூறுவதை சில நேரங்களில்
நாம் கேட்கிறோம். நல்ல கிறிஸ்தவர்கள் ஏன் பாடுகளைச் சந்திக்கிறார்கள் என்று நாம்
ஆச்சரியமடையலாம். கிறிஸ்தவர்களிடையே பாடுகள் மற்றும் செழிப்பு பற்றி பல்வேறு கருத்துக்களும்
போதனைகளும் காணப்படுகின்றன. இங்கு, பவுல் தன் பாடுகளை “அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான உபத்திரவம்” என்று குறிப்பிடுகிறார்.
அப்படியானால், பவுல் தன் வாழ்விலும் ஊழியத்திலும் ஒருபோதும் கடுமையான பாடுகள் மற்றும்
உபத்திரவங்களை எதிர்கொள்ள வில்லை என்று அர்த்தமல்ல. அப்போஸ்தல நடபடிகள் புத்தகமும்,
பவுல் எழுதிய நிருபங்களும் அவர் அனுபவித்த பாடுகள் மற்றும் கஷ்டங்களைப் பற்றி பல விஷயங்களைக்
கூறுகின்றன. பவுல் மிகவும் பிரபலமானவராகவும் கற்றறிந்தவராகவும் இருந்த படியால், அவர்
ஆடம்பரமான மற்றும் வசதியான உயர்தர வாழ்க்கையை வாழ்ந்தார் என்று நாம் சொல்ல முடியாது.
பத்துக் கிலோ அரிசிப் பையைத் தூக்கிச் சுமப்பது ஒரு பெரிய மனிதனுக்கு மிகவும் எளிதானதாக
இருக்கும், அனால் ஒரு வயதே ஆன குழந்தைக்கு அதை நகர்த்துவது கூட கடினமானதாக இருக்கும்.
அது போல, பவுல் தன் உபத்திரவத்தை நித்திய மகிமையின் வெளிச்சத்தில் பார்த்த போது, அவை “அதிசீக்கிரத்தில்
நீங்கும் இலேசான உபத்திரவம்” என்று அவரால் சொல்ல முடிந்தது. “இக்காலத்துப் பாடுகள் இனி
நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்று எண்ணுகிறேன்”
என்று பவுல் ரோமர் 8:18ல் கூறுகிறார். நம்
வாழ்வில் நீண்டகாலப் பிரச்சனைகள் மற்றும் போராட்டங்கள் இருக்கலாம். ஆனால் அவை நிரந்தரமானவை
அல்லது நித்தியமானவை அல்ல என்பதை நாம் நினைவில் கொள்வோமாக. நம் நித்திய வாழ்க்கையுடன்
ஒப்பிடும்போது, பூமியில் நம் வாழ்க்கை மிகவும் குறுகியது ஆகும். ஆகவே, அப்போஸ்தலனாகிய
பேதுரு உற்சாகப்படுத்துவது போல, “ஒருவன் கிறிஸ்தவனாயிருப்பதினால்
பாடுபட்டால் வெட்கப்படாமலிருந்து, அதினிமித்தம் தேவனை மகிமைப்படுத்தக்கடவன்” (1 பேதுரு 4:16).
இரண்டாவதாக, பவுல் தன் கண்களை காணப்படாத
மற்றும் நித்தியமான காரியங்களில் வைத்திருப்பதாகக் கூறுகிறார். ”காணப்படுகிறவைகள் அநித்தியமானவைகள்” என்று அவர் கருதுகிறார்.
பொதுவாக, காணப்படாத மற்றும் காணமுடியாத காரியங்களை நம்புவதில் ஜனங்கள் நடைமுறை கஷ்டங்களை
உடையவர்களாக இருக்கிறார்கள். ”காணப்படுகிறதை நம்புகிறது
நம்பிக்கையல்ல; ஒருவன் தான் காண்கிறதை நம்பவேண்டுவதென்ன?” என்று ரோமர் 8:24ல் பவுல் கூறுகிறார். ”விசுவாசமானது
நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது” என்று பரிசுத்த வேதாகமம்
வரையறுக்கிறது (எபி.11:1). ”பூமியிலுள்ளவைகளையல்ல,” கிறிஸ்து இருக்கும் இடத்தில் உள்ள “மேலானவைகளையே நாடுங்கள்” என்று பவுல் கொலோ.3:1ல் நம்மை உற்சாகப்படுத்துகிறார்.
நாம் நம் கண்களை நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மீது வைக்க வேண்டும் ( எபி.12:1).
நம் வாழ்வின் காரியங்களைப் பார்ப்பதில் ஒரு தெளிவான ஆன்மீக, ஆவிக்குரிய பார்வை
உள்ளவர்களாக நாம் இருக்கும்போது, நாம் இருதயத்தில் சோர்ந்து போக மாட்டோம். நாம் இயேசுவைப்
பார்க்கும்போது, எதையும் நித்தியத்தின் பார்வையில் சரியாகப் பார்ப்பதற்குக் கற்றுக்
கொள்கிறோம்.
பயன்பாடு: என் கிறிஸ்தவ நம்பிக்கை
மற்றும் விசுவாசத்தின் காரணமாக எனக்குப் பாடுகளும் கஷ்டங்களும் வரக் கூடும். ஆனால், பரலோகத்தில் நான் பெறப் போகிற மகிமையுடன்
ஒப்பிடும் போது அவை மிகவும் இலேசானவை; என் நித்திய வாழ்க்கையுடன் ஒப்பிடுகையில் அவை
அதி சீக்கிரத்தில் நீங்கி விடக் கூடியவை. இந்த உலகில் நான் காண்பவை அனைத்தும், இந்த
உலகில் உள்ளவைகள் அனைத்தும் அழிந்து போகும். இயேசுவோ எனக்கு நித்திய வாழ்வைத் தருவேன்
என்று வாக்களித்திருக்கிறார். எனவே, நான் நித்தியத்திற்காக வாழ்வேன்.
ஜெபம்: நித்திய தேவனே, நித்திய
ஜீவனைப் பற்றிய வாக்குத்தத்தத்திற்காக உமக்கு நன்றி. பரிசுத்த ஆவியானவரே, பிதாவின் அருகே இயேசு அமர்ந்திருக்கும்
இடத்தில் உள்ள மேலானவைகளை நாட எனக்கு உதவியருளும். மேலும் அதற்கேற்ப வாழ எனக்கு
உம் பலத்தைத் தந்தருளும். ஆமென்.
- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573
Day - 258
No comments:
Post a Comment