வாசிக்க: ஏசாயா 31,32; சங்கீதம் 78; 2 கொரிந்தியர் 6
வேத வசனம்: 2 கொரிந்தியர் 6:1. தேவனுடைய கிருபையை நீங்கள் விருதாவாய்ப் பெறாதபடிக்கு, உடன்வேலையாட்களாகிய நாங்கள் உங்களுக்குப் புத்திசொல்லுகிறோம்.
கவனித்தல்: ஏராளமான பணத்தை வைத்திருந்தும்
அதைப் பயன்படுதாமலேயே இறந்து போகிற பிச்சைக்காரர்களைப் பற்றி நாம் அவ்வப்போது செய்திகளில்
வாசிக்கிறோம். அவர்கள் உயிரோடிருக்கும்போது அந்தப் பணத்தைப் பயன்படுத்தி ஒரு நல்ல
வாழ்க்கையை வாழ்ந்திருக்கலாம். அவர்கள் அதை தங்களுக்கும் பயன்படுத்துவதில்லை, மற்றவர்களுக்கும்
கொடுப்பதில்லை என்பது வருந்தத்தக்கது ஆகும். நாமனைவரும் அறிந்திருக்கிறபடி, கிருபை
என்பது தகுதியில்லாத ஒருவருக்கு தேவன் கொடுக்கும் பரிசு ஆகும். இந்நாட்களில் சில பிரசங்கிமார்
கிருபை குறித்த நூதனமான விளக்கங்களைச் சொல்லி அனேக கிறிஸ்தவர்களை வழிதவறப் பண்ணுகிறார்கள்.
உலகப்பிரகாரமான ஆசீர்வாதங்கள் மற்றும் பொருளாதார செழிப்புக்காக அல்ல, நாம் தேவனுடன் ஒப்புரவாகும்படியாகவும், அவருடன்
ஒரு புதிய வாழ்க்கையை வாழும்படியாகவும் அவர் நமக்கு கிருபையைத் தருகிறார். ”தேவனுடைய கிருபையை நீங்கள் விருதாவாய்ப் பெறாதபடிக்கு” என்று கொரிந்திய விசுவாசிகளை பவுல் எச்சரிக்கிறார். பவுலின் வார்த்தைகள் பல
அர்த்தங்களைக் குறிப்பதாக இருக்கிறது.ஒரு கிறிஸ்தவர் தேவனுடைய கிருபையைக் காட்டிலும்
அதிகமாக தான் செய்கிற கிரியைகளை நம்பும்போது அல்லது அவர் தேவனை அன்பு செய்யாத கீழ்ப்படியாத
ஒரு சுய நல வாழ்க்கையை வாழும்போது, அவர் தேவ கிருபையில் பங்கேற்பதில்லை. சிலர் தேவனை
நம்பிக் கொண்டு, ஆனால் கிறிஸ்துவில் ஒரு புது சிருஷ்டியாக மாற மறுத்துக் கொண்டு இருக்கக்
கூடும். நாம் முன்பு பார்த்தது போல, கொரிந்து
விசுவாசிகளில் சில ஆவிக்குரிய வரங்கள் மற்றும் வளர்ச்சி குறித்து குழந்தைத்தனமான செயல்களைச்
செய்கிறவர்களாக இருந்தனர். நமக்காக தம் உயிரையே கொடுத்தவருக்காக நாம் வாழாமல் இருக்கும்போது,
கிருபை வரங்களை நாம் ஏற்றுக் கொள்ளாமல் இருக்கும்போது, நமக்குள்ளாக தேவ கிருபையானது
செயல்பட அனுமதிக்காமல் இருக்கும்போது, நாம் தேவனுடைய கிருபையை விருதாவாக பெறுகிறவர்களாக
இருக்கிறோம்.
நம்மெல்லாருக்கும் தேவ கிருபை தேவை; நாம்
அதைச் சம்பாதிக்க முடியாது. தேவன் அருளும்
இரட்சிப்பை ஏற்றுக் கொள்வதன் மூலம் நாம் அவருடைய கிருபையைப் பெறுகிறோம். தேவனுடைய கிருபையானது காலைதோறும் புதியவைகள் (புலம்.3:23).
ஆஸ்வால்ட் சேம்பர் என்ற தேவ மனிதர் சொல்வது போல, “நேற்றைய தினம் நீங்கள் பெற்றுக்
கொண்ட கிருபை இன்றைக்குப் போதுமானதாக இருக்காது.” ஆகவே, நாம் அனுதினமும் தேவனிடம்
இருந்து கிருபையைப் பெற்றுக் கொள்ள வேண்டும். நாம் தேவனுடைய கிருபையை விருதாவாகப்
பெறுகிறவர்களாக இருந்தால், கிருபையின் அனைத்து
ஆசீர்வாதங்களையும் இழப்பது நாம் தான். தேவன் நமக்கு அபரிதமான கிருபையைத் தருகிறார்.
நாம் தேவனுடைய கிருபையை வீணடிக்கக் கூடாது. கிறிஸ்துவில் தேறின (வளர்ச்சியடைந்த, முதிர்ந்த)
ஒரு கிறிஸ்தவராக மாறும்படி நாம் அதைப் பயன்படுத்த வேண்டும். பேதுரு சொல்வது போல, “நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையிலும் அவரை
அறிகிற அறிவிலும் வளருங்கள்” (2 பேதுரு 3:18).
பயன்பாடு: ஒரு கிறிஸ்தவராக, நான்
தேவனுக்காக மட்டுமல்ல, தேவனுக்கு உடன் ஊழியராக இருக்கும் பாக்கியத்தை உடையவனாக நான்
இருக்கிறேன். ”நான் தேவனுடைய கிருபையை விருதாவாக்குகிறதில்லை” (கலா.2:21). இயேசு கிறிஸ்துவின் பரிபூரணத்தினால் நான் கிருபையின் மேல் கிருபையைப்
பெறுகிறேன் (யோவான் 1:16). ”ஆகிலும் நான் இருக்கிறது
தேவகிருபையினாலே இருக்கிறேன்; அவர் எனக்கு அருளிய கிருபை விருதாவாயிருக்கவில்லை” (1 கொரி.15:10).
ஜெபம்: தந்தையாகிய தெய்வமே, உம் கிருபைக்காக நன்றி. இயேசுவே,
நான் உம் கிருபையினால் இரட்சிக்கப் பட்ட ஒரு பாவி என்பதை ஒவ்வொருநாளும் நினைவில் கொள்ள
எனக்கு உதவியருளும். ஆண்டவரே, தேவ கிருபையில் பலப்பட எனக்கு உதவும். பரிசுத்த ஆவியானவரே,
கிறிஸ்துவின் கிருபையில் அனுதினமும் வளர எனக்கு உம் பலத்தைத் தந்தருளும். ஆமென்.
- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573
Day - 260
No comments:
Post a Comment