வாசிக்க: ஏசாயா 41,42; சங்கீதம் 83; 2 கொரிந்தியர் 11
வேத வசனம்: 2 கொரிந்தியர் 11: 3. ஆகிலும், சர்ப்பமானது தன்னுடைய தந்திரத்தினாலே ஏவாளை
வஞ்சித்ததுபோல, உங்கள் மனதும் கிறிஸ்துவைப்பற்றிய உண்மையினின்று
விலகும்படி கெடுக்கப்படுமோவென்று பயந்திருக்கிறேன்.
4. எப்படியெனில், உங்களிடத்தில் வருகிறவன் நாங்கள் பிரசங்கியாத வேறொரு இயேசுவைப்
பிரசங்கித்தானானால், அல்லது நீங்கள் பெற்றிராத வேறொரு ஆவியையும், நீங்கள் ஏற்றுக்கொள்ளாத வேறொரு சுவிசேஷத்தையும் பெற்றீர்களானால், நன்றாய்ச் சகித்திருப்பீர்களே.
கவனித்தல்: கடந்த 2000 வருடங்களாக,
நூற்றுக்கணக்கானவர்கள் தங்களை இயேசுவின் (மறு)அவதாரம் அல்லது மேசியா என்று சொல்லி
இருக்கின்றனர். இணையதள தகவலின்படி, தங்களை இயேசு என்று சொல்லிக் கொள்கிறவர்கள் பன்னிரெண்டு
பேர் தற்போது உலகின் வெவ்வேறு பகுதிகளில் வாழ்ந்து வருகிறார்கள். இப்படிப்பட்ட போலி
இயேசுக்களின் வஞ்சக மற்றும் தந்திரமான போதனைகளை நம்பிக் கொண்டு அவர்களைப் பின்பற்ற
மக்கள் தயாராக இருக்கிறார்கள் என்பது வேதனையைத் தருகிறதாக இருக்கிறது. கொரிந்து சபையில்,
கள்ள அப்போஸ்தலர்கள் பவுலின் அதிகாரம் மற்றும் அப்போஸ்தல ஊழியத்தை மட்டும் தாக்கவில்லை,
அவர்களைச் சகித்துக் கொண்டிருந்த கொரிந்து விசுவாசிகளை வஞ்சிக்கவும் முயற்சித்தார்கள். கள்ள உபதேசங்களைக் கேட்பதற்கு விசுவாசிகள்
சகிப்புத்தன்மையுடன் இருப்பதைக் கண்டு பவுல் ஆச்சரியமடைகிறார். ஆகவே, சாத்தான் ஏவாளை
வஞ்சித்தது போல, அவர்களின் இச்செயலானது தவறான போதனைகளின் பொய்களை உண்மை என்று நம்ப
வழிவகை செய்துவிடக் கூடும் என்று தன் பயத்தை பவுல் வெளிப்படுத்துகிறார். தேவனுடைய வார்த்தையைச் சந்தேகிக்கும்படி சாத்தான்
வெற்றிகரமாக ஏவாளை ஏமாற்றினான். அவன் தந்திரமாக மனிதனை தேவனிடம் இருந்து பிரித்தான்.
ஜனங்கள் கள்ளப் போதகர்களின் தைரியம் மற்றும் நாவன்மை கண்டு கவரப்பட்டு, அவர்களின் தந்திரமான
வார்த்தைகளினால் வஞ்சிக்கப்படுகிறார்கள். கிறிஸ்துவைப் பற்றிய உண்மையான பக்தியை விட்டு
நம்மை விலக்கும் எதற்கும் நாம் இடம் கொடுக்கக் கூடாது.
பவுல் சிலுவையில் அறையப்பட்ட இயேசுவை (1
கொரி.2:2), விடுதலை தருகிற ஆவியானவரை (2 கொரி.3:17)ப் பற்றி அறிவித்து, கிருபையை
அளித்து தேவனுடன் ஒப்புரவாக்குகிற சுவிசேஷத்தைப் பிரசங்கித்தார் (2 கொர்.5:19). ஆனால்
கள்ள அப்போஸ்தலர்களின் போதனையானது பவுல் பிரசங்கித்ததற்கு முரணானதாக—வேறொரு இயேசு,
வேறொரு ஆவி, மற்றும் வேறொரு சுவிசேஷம் ஆகியவற்றைச் சொல்வதாக—இருந்தது. கள்ளப் போதகர்கள்
தாங்கள் போதிப்பவை ஒரு புதிய வெளிப்பாடு என்று பெருமை பாராட்டிக் கொண்டு, அவர்கள்
மற்றவர்களின் போதனைகளை நிராகரிக்கிறார்கள். அவர்கள் வேத வசனங்களை திரித்தோ அல்லது
வசதிக்கேற்ப தெரிந்தெடுத்துக் கொண்டோ தங்கள் நூதன விளக்கங்களை ஆதரிக்கவோ அல்லது நிரூபிக்கவோ
முயற்சிக்கிறார்கள். நாம் கவனமாக இல்லாவிடில், அவர்களுடைய கண்ணியில் நாம் விழ நேரிடலாம்.
”அப்படிப்பட்டவர்கள் கள்ள அப்போஸ்தலர்கள், கபடமுள்ள வேலையாட்கள், கிறிஸ்துவினுடைய அப்போஸ்தலரின் வேஷத்தைத்
தரித்துக்கொண்டவர்களாயிருக்கிறார்கள். அது ஆச்சரியமல்ல, சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக்கொள்வானே” என்று பவுல் கூறுகிறார் ( 2 கொரி.11:13-14). சில நேரங்களில், கள்ளப் போதகர்கள்
தேவனுடைய வார்த்தைக்காக மிகவும் வைராக்கியமாக இருப்பதாக காட்டிக் கொள்வார்கள். ஆதிச்சபையில்
அவர்கள் பல இடங்களில் இருந்தார்கள் (கலா.1:6-9; கொலோ.2:20-21). எபேசுவை விட்டுப் பிரிகையில்
அவர்களுடன் தன் கடைசி உரையில், கள்ளப் போதகர்கள் குறித்து பவுல் சபை மூப்பர்களை
எச்சரித்தார் (அப்.20:29-31). தவறான போதனைகள் சபையில் எந்த வடிவத்திலும் அல்லது எவர்
மூலமும் ஊடுருவுவதை நாம் அனுமதிக்கவோ ஏற்றுக் கொள்ளவோ கூடாது.
பயன்பாடு: கேட்பதற்கு நன்றாக இனிமையாக இருக்கிறது என்பதற்காகவும்,
நம்புவதற்கு கவர்ச்சிகரமானதாக இருக்கிறது என்பதற்காகவும் நான் எந்த போதனையையும்
ஏற்றுக் கொள்ள மாட்டேன். நான் எல்லா போதனைகளையும் பிரசங்கங்களையும் வேதத்தின் வெளிச்சத்தில்
பரிசோதித்துப் பார்ப்பேன். தவறான போதனைகளை நான் எக்காரணம் கொண்டும் ஏற்றுக் கொள்ளாமல்,
கள்ளப் போதகர்கள் மற்றும் அவர்களுடைய வார்த்தைகளைக் குறித்து கவனமான இருக்கும்படி
மற்றவர்களை நான் எச்சரிப்பேன்.
ஜெபம்: தந்தையாகிய தெய்வமே, சத்தியத்தைப் புரிந்து கொள்ள
உதவும் உம் வார்த்தைக்காக நன்றி. கர்த்தாவே, சிலுவையில் அறையப்பட்ட இரட்சகரை எப்பொழுதும்
என் முன்பாக வைத்திருக்க உதவிடும். . பரிசுத்த ஆவியானவரே, சகல சத்தியத்திற்குள்ளும்
என்னை வழிநடத்தியருளும்; தவறான போதனைகள் மற்றும் சாத்தானின் பொய்களை நம்புவதில் இருந்து
என்னைக் காத்தருளும். ஆமென்.
- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573
Day - 265
No comments:
Post a Comment