வாசிக்க: ஏசாயா 45,46; சங்கீதம் 85; 2 கொரிந்தியர் 13
வேத வசனம்: 2 கொரிந்தியர் 13: 5. நீங்கள் விசுவாசமுள்ளவர்களோவென்று உங்களை நீங்களே சோதித்து அறியுங்கள்; உங்களை நீங்களே பரீட்சித்துப்பாருங்கள். இயேசுகிறிஸ்து உங்களுக்குள்
இருக்கிறாரென்று உங்களை நீங்களே அறியீர்களா? நீங்கள் பரீட்சைக்கு நில்லாதவர்களாயிருந்தால் அறியீர்கள்.
கவனித்தல்: “உன்னை அறிந்து கொள்”
என்பது பண்டைய கிரேக்க பழமொழிகளில் ஒன்று ஆகும். இதன் பொருள் என்னவெனில், உன்னைப்
பற்றி நீ சரியாகப் புரிந்து கொண்டால்தான் நீ மற்றவர்களைப் புரிந்து கொள்ள முடியும்
என்பதாகும். பொதுவாக, ஜனங்கள் தங்களைத் திருத்திக்
கொண்டு, தீர்ப்பிடுவதை விட அதிகமாக மற்றவர்களைக் குறை கூறி, திருத்த ஆர்வமுடையவர்களாக
இருக்கிறார்கள். கிறிஸ்தவர்களும் இந்த தவறை அடிக்கடி செய்கிறார்கள். ”இதோ, உன் கண்ணில் உத்திரம் இருக்கையில் உன் சகோதரனை
நோக்கி: நான் உன் கண்ணிலிருக்கும் துரும்பை எடுத்துப்போடட்டும் என்று நீ
சொல்வதெப்படி?” என்று நம் ஆண்டவர் இயேசு கேட்டார் (மத்.7:4). தற்பரிசோதனை அல்லது சுய-பரிசோதனை
பற்றி ஜனங்கள் பல்வேறு கருத்துக்களை உடையவர்களாக இருக்கிறார்கள். சிலர் தங்களுடைய
செய்களைக் குறித்து அதிக குறை காண்பவர்களாக மாறி, தங்கள் வாழ்க்கையை சீரழித்துக் கொள்கிறார்கள்.
கிறிஸ்தவ தற்பரிசோதனை என்பது மற்றவைகளில்
இருந்து வேறுபட்டது ஆகும். ஒரு கிறிஸ்தவன் செய்யும் சுய-பரிசோதனையானது அவருடைய ஆவிக்குரிய
பக்திவிருத்தி, பாவ-சுத்திகரிப்பு, மற்றும் கர்த்தருடனான அவருடைய அனுதின கிறிஸ்தவ
வாழ்க்கைக்கு உதவிகரமானதாக இருக்கும். கொரிந்தியருக்கு எழுதின இரண்டாவது நிருபத்தில்,
பவுல் தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு பதில் கூறுவதை நாம் காண்கிறோம். இங்கே, கொரிந்து
விசுவாசிகள் மீது குற்றம் சாட்டுவதற்குப் பதிலாக, அவர்கள் தங்களைத் தாங்களே சோதித்து
அறியவேண்டும் என பவுல் சவால் விடுக்கிறார்.
2 கொரிந்தியர் 3:5க்கு மூன்று வித்தியாசமான
விளக்கங்கள் சொல்லப்படுகிறது: முதலாவதாக, கொரிந்து விசுவாசிகள் உண்மையிலேயே கிறிஸ்தவர்கள்
தானா, இரட்சிப்பின் அனுபவம் உடையவர்களா என்று சோதித்து அறியும்படி பவுல் கொரிந்து சபை
விசுவாசிகளிடம் கேட்கிறார். இரண்டாவது விளக்கம் என்னவெனில், பவுல் விசுவாசிகளின்
இரட்சிப்பின் அனுபவம் பற்றிக் கேள்வி எழுப்பவில்லை. மாறாக கிறிஸ்துக்குள்ளான ஆவிக்குரிய
வாழ்க்கையை சோதித்து அறியுமடி அவர்களை அழைக்கிறார். மூன்றாவதாக, கொரிந்து சபையில்
இருந்த சில கிறிஸ்தவர்கள் பவுல் மீது குற்றம் சாட்டி சோதித்தனர். இப்பொழுது, அவர்கள்
தங்களை சோதித்து அறியும்படி பவுல் அழைக்கிறார். எந்த விளக்கமாக இருந்தாலும், பவுல்
இரண்டு கேள்விகளைக் கேட்கிறார்: நீங்கள் விசுவாசம் உள்ளவர்களா? கிறிஸ்து உங்களில்
வாழ்கிறாரா? வேறு வார்த்தைகளில் சொல்வதானால், நீங்கள் கிறிஸ்துவுக்குள் இருக்கிறீர்களா?
தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் அனேகர் இருக்கலாம். ஆனால், அவர்கள்
விசுவாசம் இல்லாதவர்கள் எனில், கிறிஸ்து அவர்களுக்குள் இல்லை எனில், அவர்கள் கிறிஸ்தவர்களாக
முடியாது. நாம் விசுவாசத்தினால் நீதிமானாக்கப்படுகிறோம்
என்றும், ”விசுவாசத்தினாலே வராத யாவும் பாவமே” என்றும் வேதம் சொல்கிறது (ரோமர்.14:23). உங்களில் இருக்கும் கிறிஸ்துவானவர்
மகிமையின் நம்பிக்கை என்று கொலோசெயருக்கு பவுல் எழுதுகிறார் (கொலோ.1:27). நமக்குள்
வந்து வாசம் செய்வேன் என்று இயேசு நமக்கு வாக்குப்பண்ணி இருக்கிறார் (யோவான் 6:56;
14:23). கிறிஸ்து நமக்குள் வாழும்போது, நாம் உயிருள்ள கிறிஸ்தவர்களாக மாறுகிறோம். இல்லையேல்
நாம் பெயர்க் கிறிஸ்தவர்களாகவே இருப்போம். ஆகவே, கர்த்தர் நம்மை வழிநடத்துகிறபடி தற்பரிசோதனைக்
கேள்விகளுடன் நாம் நம்மை நாமே பரிசோதித்துப் பார்க்க வேண்டும். ”பரிசோதித்துப் பார்க்க
முடியாத விசுவாசம் நம்பமுடியாதாக இருக்கும்” என்று ஜான் மேக்ஸ்வெல் என்ற தேவ மனிதர் கூறுகிறார்.
கிறிஸ்தவர்களாகிய நாம் கிறிஸ்துவுக்குள் உயிருள்ள கிறிஸ்தவ வாழ்க்கையை வாழ அடிக்கடி
தற்பரிசோதனை செய்து கொள்வது அவசியம் ஆகும். ”நாம் நம்முடைய வழிகளைச்
சோதித்து ஆராய்ந்து, கர்த்தரிடத்தில் திரும்பக்கடவோம்” (புலம்.3:40).
பயன்பாடு: குறிப்பிட்ட இடைவெளியில் செய்யப்படும் முறையான சரீர
ஆரோக்கிய பரிசோதனையானது நம் சரீரத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. அதுபோல, என்
ஆவிக்குரிய வாழ்க்கைக்கு அவ்வப்போது தற்பரிசோதனை செய்து கொள்வது நல்லது ஆகும். ”விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்” என்று வேதம் சொல்கிறது
(ஆபகூக் 2:4; ரோமர் 1:17). நான் தரிசித்து நடவாமல் விசுவாசித்து நடக்கிறேன். ”கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்; நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய
குமாரனைப்பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன்” (கலா.2:20).
ஜெபம்: பிதா, குமாரன், பரிசுத்த ஆவியாகிய தெய்வமே, எனக்குள்
வாசம் செய்வதற்காக நன்றி. ”தேவனே, என்னை ஆராய்ந்து, என் இருதயத்தை அறிந்துகொள்ளும்; என்னைச் சோதித்து, என் சிந்தனைகளை அறிந்துகொள்ளும்.” பரிசுத்த ஆவியானவரே, என் வாழ்க்கையைப் பரிசோதித்து அறியவும், விசுவாசமுள்ளவனாக
கிறிஸ்துவுடன் வாழ எனக்கு உதவியருளும். ஆமென்.
- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573
Day - 267
No comments:
Post a Comment