Friday, September 10, 2021

நற்செய்தியைப் பற்றிய சுருக்கமான ஒரு உரை

வாசிக்க: ஏசாயா 15,16; சங்கீதம் 70; 1 கொரிந்தியர் 15:1-34

வேத வசனம்  1 கொரிந்தியர் 15: 3. நான் அடைந்ததும் உங்களுக்குப் பிரதானமாக ஒப்புவித்ததும் என்னவென்றால், கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து,
4.
அடக்கம்பண்ணப்பட்டு, வேதவாக்கியங்களின்படி மூன்றாம்நாளில் உயிர்த்தெழுந்து,
5.
கேபாவுக்கும், பின்பு பன்னிருவருக்கும் தரிசனமானார்.

கவனித்தல்: பண்டைய கால சமுதாயத்தில், ஒரு தலைமுறையில் இருந்து அடுத்த தலைமுறைக்கு அறிவு மற்றும் தகவலை எடுத்துச் செல்ல வாய்வழி பாரம்பரியத்தை பயன்படுத்தினர். அறிவைப் பரப்புவதற்கு மனப்பாடம் செய்தல் என்பது அடிப்படையானதாக இருந்தது. கொரிந்து சபை விசுவாசிகளிடம் தான் பகிர்ந்து கொண்ட நம்பகமான வாய்வழி பாரம்பரியத்தை பவுல் குறிப்பிடுகிறார். கலாத்தியர் 1:11-12ல், இயேசு கிறிஸ்துவிடம் இருந்து நேரடியாக சுவிசேஷத்தை வெளிப்படுத்தல் மூலமாக பெற்றதாக பவுல் கூறுகிறார். வேறுவிதமாகச் சொல்வதானால், பவுல் பிரசங்கித்த நற்செய்தியானது அவருடையது அல்ல; பவுல் அதைக் கண்டுபிடிக்கவோ அல்லது உருவாக்கவோ இல்லை. பவுல்  தான் பெற்றுக் கொண்டதை உண்மையுடன் மற்றவர்களுக்குப் பிரசங்கித்தார். கொரிந்து சபையினருக்கு சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவை பிரசங்கிக்க வேண்டும் என்பதில் பவுல் தீர்மானமுள்ளவராக இருந்தார் (1 கொரி.1:23; 2:23).

எல்லோரும் மரிக்கிறார்கள்; கிறிஸ்துவின் மரணத்தில் என்ன தனிச்சிறப்பு என்று ஜனங்கள் கேட்கக் கூடும். இயேசுவின் மரணமானது சாதாரணமானது அல்ல. அவர் வேத வாக்கியங்களின்படி நம் பாவங்களுக்காக மரித்தார். கிறிஸ்துவின் மரணத்தில், மேசியாவைப் பற்றிய அனேக தீர்க்கதரிசனங்களின் நிறைவேறுதலை நாம் காண்கிறோம். தன் மரணம் மூலமாக, இயேசு நம் பாவங்களுக்கான பரிகாரத்தை உண்டு பண்ணினார். இயேசுவின் மரணத்தில் தேவனுடைய அன்பு வெளிப்பட்டதை நாம் காண்கிறோம் (ரோமர் 5:8). ”நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு, அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார்” என்று அப்போஸ்தலனாகிய பேதுரு சொல்கிறார் ( 1 பேதுரு 2:24).

இயேசு அடக்கம் செய்யப்பட்டது அவருடைய மரணம் பொய் அல்ல என்பதை குறிக்கிறது.  இயேசு “இத்தனை சீக்கிரத்தில் மரித்துப்போனாரா என்று பிலாத்து ஆச்சரியப்பட்டான்” என மாற்கு 15:44 கூறுகிறது. இயேசுவின் மரணத்தைப் பற்றி எந்த சந்தேகமும் இல்லை. இயேசு சுய நினைவின்றி மயங்கி இருந்தார், மயக்கத்தில் இருந்தார் என்று உயிர்த்தெழுதலை சந்தேகிக்கும் swoon theory போன்ற எந்த கோட்பாடுகளுக்கும் அடிப்படை முகாந்திரமில்லை. மறுபடியுமாக, வேதவாக்கியங்களின் படி, இயேசு மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார். அப்போஸ்தலருடைய போதனையில் இயேசுவின் உயிர்த்தெழுதலானது மையமானதாக இருந்தது. இயேசுவின் உயிர்த்தெழுதல் கட்டுக்கதை அல்ல. இயேசு உயிர்த்தெழுந்த பின் அனேகருக்கு தரிசனம் அளித்தது பற்றிய பல சம்பவங்களின் பட்டியலையும், கண்களால் கண்ட சாட்சிகளைப் பற்றியும் புதிய ஏற்பாடு நமக்குத் தருகிறது.  இந்த அத்தியாயத்தில் ஆறு தரிசனங்களைப் பற்றி பவுல் குறிப்பிடுகிறார்.  இயேசுவின் உயிர்த்தெழுதல் ஒரு வரலாற்று உண்மை. ஒரு அறிஞர் சொல்வது போல, “உயிர்த்தெழுதல் நம்பிக்கையானது கிறிஸ்தவ விசுவாசத்தில் பிற்காலத்தில் சேர்க்கப்பட்ட ஒரு நம்பிக்கை அல்ல; உயிர்த்தெழுதல் நம்பிக்கையே கிறிஸ்தவ விசுவாசம்” ஆகும்.  நம்மிடம் கேட்பவர்களிடமும், கேள்வி கேட்கிறவர்களிடமும் தெளிவாக விளக்கும்படி, நற்செய்தி கூறும் செய்தியை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நற்செய்தியை இதுவரை கேள்விப்படாதவர்களிடம் அதை பகிர்ந்து கொள்கிற பொறுப்பு நமக்கு உண்டு.

பயன்பாடு:  இயேசு என் பாவங்களுக்காக மரித்தார் என்று நான் விசுவாசிக்கிறேன். அவர் அடக்கம் பண்ணப்பட்டு மூன்றாம் நாளில் உயிரோடே எழுந்தார். இயேசு இன்றும் உயிரோடு இருக்கிறார்.  இயேசு கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்ததினாலே,  ஜீவனுள்ள நம்பிக்கை  உண்டாகும்படி தேவன் எனக்கு ஒரு புதிய வாழ்வை (மறுபிறப்பைத்) தந்திருக்கிறார்.  ”கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக்குறித்து நான் வெட்கப்படேன்; முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் விசுவாசிக்கிறவனெவனோ அவனுக்கு இரட்சிப்பு உண்டாவதற்கு அது தேவபெலனாயிருக்கிறது” (ரோமர் 1:16).

ஜெபம்:  தந்தையாகிய தெய்வமே,  நீர் எனக்குக் காண்பித்திருக்கிற மக பெரிய அன்புக்காக உமக்கு நன்றி. இயேசுவே, என் பாவங்களைச் சுமந்து, தேவனுடன் எனக்கு ஒப்புரவாகுதலை உண்டு பண்ணின உம் சிலுவை மரணத்திற்காக உமக்கு நன்றி. கர்த்தாவே, நீர் இன்றும் உயிரோடு இருக்கிறீர், மாறாதவராக இருக்கிறீர்.  பரிசுத்த ஆவியானவரே, கிறிஸ்துவின் மகிமையை வெளிப்படுத்தும் சுவிசேஷத்தின் ஒளியைப் பரப்ப பகிர்ந்து கொள்ள என்னைப் பலப்படுத்தியருளும்.

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

Day - 252

No comments: