வாசிக்க: எரேமியா 25,26; சங்கீதம் 108; 1 தெசலோனிக்கேயர் 3
வேத வசனம்: சங்கீதம் 108: 12. இக்கட்டில் எங்களுக்கு உதவிசெய்யும்; மனுஷனுடைய உதவி விருதா.
13. தேவனாலே பராக்கிரமஞ்செய்வோம்; அவரே எங்கள் சத்துருக்களை மிதித்துப்போடுவார்.
கவனித்தல்: மிகப்பெரிய இராணுவங்களை
தோற்கடித்த சிறிய படைகள் குறித்த ஆச்சரியமான கதைகளைப் பற்றி வரலாறு நெடுகிலும் நாம்
வாசிக்கிறோம். யுத்தங்களில் இராணுவ வலிமை மட்டுமே வெற்றிபெற போதுமானதாக இருக்காது.
”எந்த ராஜாவும் தன் சேனையின் மிகுதியால்
இரட்சிக்கப்படான்; சவுரியவானும் தன் பலத்தின் மிகுதியால் தப்பான். இரட்சிக்கிறதற்குக் குதிரை விருதா; அது தன் மிகுந்த வீரியத்தால் தப்புவியாது” என்று சங்கீதம்
33:16-17 கூறுகிறது. ஒரு போர்வீரராக தாவீது தன் வாழ்க்கையின் துவக்கத்தில் இருந்தே
தேவன் தம் ஜனங்களுக்கு வெற்றியைத் தருகிறார் என்று விசுவாசித்தார் ( 1 சாமு.17:45-48).
சங்கீதம் 108ல் நாம் காணும் தாவீதின் ஜெபமானது, அவன் தன் எதிரிகளுடனான யுத்தத்தில்
தோல்வியைக் கண்ட பின் ஜெபித்திருக்கலாம். சங்கீதம் 108 இன் முதல் ஐந்து வசனங்கள் சில
சிறிய மாற்றத்துடன் சங்கீதம் 57:7-11 வரையிலான வசனங்களுக்கு ஒத்ததாக இருக்கிறது. வசனம்
5-13 வரையிலான வசனங்களும் சங்கீதம் 60:5-12 வரையிலான வசனங்களும் வார்த்தைக்கு வார்த்தை
பொருத்தமானதாக இருக்கின்றன. இப்படி மறுபடியும் வருதல் மற்றும் இரண்டு சங்கீதங்களை
இணைத்து ஒரு புதிய சங்கீதத்தை உருவாக்குதல் ஆகியவை தேவன் இதைக் குறித்து ஒரு நோக்கம்
வைத்திருக்கிறார் என்பதை உணர்த்துகிறது.
12ஆம் வசனத்தில் நாம் காண்பது போல, எதிரி மீது வெற்றி பெற நமக்கு தேவனின் உதவி
தேவை. ” மனுஷனுடைய உதவி விருதா.”
நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்
சரி, கிறிஸ்தவர்களாகிய நாம் ஒரு ஆவிக்குரிய யுத்தத்தில் இருக்கிறோம். நம் போராட்டம்
”மாம்சத்தோடும் இரத்தத்தோடும் அல்ல” (எபேசியர் 6:12). தேவனுடைய போர்வீரராக, பிசாசின்
திட்டங்களுக்கு எதிராக நிற்கும்படி, எபேசியர் 6:10-17 வரை சொல்லப்பட்டிருக்கிற தேவனுடைய
சர்வாயுத வர்க்கத்தை நான் அணிந்து கொள்ள வேண்டும். ஆயினும், நம் வெற்றியோ கர்த்தரிடத்தில்
இருந்து வருகிறது. ”என் வில்லை நான் நம்பேன்; என் பட்டயம் என்னை இரட்சிப்பதில்லை. நீரே எங்கள் சத்துருக்களினின்று எங்களை இரட்சித்து, எங்களைப் பகைக்கிறவர்களை வெட்கப்படுத்துகிறீர்” என்று சங்கீதம்
44:6-7 இல் தாவீது பாடுகிறார். நாம் தேவன் மீதும் அவருடைய வார்த்தை மீதும் நம் நம்பிக்கையை
வைக்க வேண்டும். உலக பலத்தில் மீது நம் நம்பிக்கையை வைத்தல் மாயையான நம்பிக்கை ஆகும்.
ஆனால், தேவனோ உண்மையான நம்பிக்கையை நமக்குத் தருகிறார். தேவன் நமக்கு உதவி செய்யும்போது,
நாம் வெற்றிகளை அடைகிறோம். கர்த்தர் தாமே நமக்காக யுத்தம் பண்ணுகிறார். நாம் எந்த
நேரத்திலும் தேவனுடைய உதவியைக் கேட்கலாம். தேவனால் எல்லாம் கூடும்.
பயன்பாடு: ”என் கைகளைப்
போருக்கும் என் விரல்களை யுத்தத்திற்கும் படிப்பிக்கிற என் கன்மலையாகிய
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்” (சங்.144:1). ”மனுஷரால் கூடாதவைகள் தேவனால்
கூடும்” என என் ஆண்டவராகிய இயேசு
சொல்கிறார் (லூக்கா 18:27). ”என்னையல்லாமல்
உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது” என்று அவர் சொல்கிறார் (யோவான்
15:5). இயேசு ஏற்கனவே எனக்காக உலகத்தை ஜெயித்து விட்டார். நான் கிறிஸ்துவில் நிலைத்திருந்து,
எப்பொழுதும் அவருடைய உதவியைத் தேட வேண்டும். நான் கர்த்தரின் வெற்றியைக் கொண்டாடுவேன்.
அவர் எனக்கு வல்ல பெரும் காரியங்களைச் செய்திருக்கிறார்.
ஜெபம்: தந்தையாகிய தெய்வமே, நீர் எனக்கு ”அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அநுகூலமான துணையுமானவர்“ (சங்.46:1). கர்த்தாவே, ஆபத்துக் காலத்தில் உம்மை நோக்கிக்
கூப்பிடுவதற்கான ஞானத்தை எனக்குத் தந்தருளும். இயேசுவே, சிலுவைக்காக உமக்கு நன்றி;
நீர் எனக்காக ஆயத்தம் பண்ணின வெற்றிகளுக்காக உமக்கு நன்றி. என் தேவனே, உம்மை எப்பொழுதும்
நம்பவும் நாடித் தேடவும் எனக்கு உதவியருளும். ஆமென்.
- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573
Day – 290
No comments:
Post a Comment