வாசிக்க: எரேமியா 33,34; சங்கீதம் 112; 2 தெசலோனிக்கேயர் 2
வேத வசனம்: சங்கீதம் 112: 4. செம்மையானவர்களுக்கு இருளிலே வெளிச்சம் உதிக்கும்; அவன் இரக்கமும் மனஉருக்கமும் நீதியுமுள்ளவன்.
கவனித்தல்: நேர்மையாக வாழ்வது இந்நாட்களில் மிகவும் சவாலானதாக
இருக்கிறது. நேர்மையாக இருப்பவர்களைப் பார்த்து பிழைக்கத்தெரியாதவர்கள் என்று உலக
மக்கள் கேலி செய்கின்றனர். “ஊரோடு ஒத்து வாழ்” என்ற பழமொழியை நாம் வாழ்கிற இடத்திற்கு
ஏற்றபடி நம் நேர்மையை சமரசம் செய்து வாழ வேண்டும் என்பதாக பலர் தவறாகப் புரிந்து வைத்திருக்கிறார்கள்.
கர்த்தருக்குப் பயந்து செம்மையான வழிகளில் நேர்மையாக நடக்கும் மனிதன் பெறும் ஆசீர்வாதங்கள்
பற்றிய ஒரு காட்சியை சங்கீதம் 112 நமக்குத் தருகிறது. 112 ஆம் சங்கீதம் 111ஆம் சங்கீதத்தின்
தொடர்ச்சி என்று கருதப்படுகிறது. மேலும் அதன் உள்ளடக்கமானது சங்கீதம் 111உடன் மிகவும்
நெருங்கிய தொடர்புடையதாக இருக்கிறது. 111ஆம் சங்கீதத்தின் கடைசி வசனமும் 112ன் முதல்
வசனமும் கர்த்தருக்குப் பயப்படுதலைப் பற்றி பேசுகின்றன. கர்த்தருக்குப் பயப்படுதல்
என்பது ஞானத்தின் ஆரம்பம் மட்டுமல்ல, செம்மையாக வாழ்வதற்கும் அடிப்படையானது என்பதையும்
இது குறிக்கிறது.
”நீதிமானுடைய
சிரசின்மேல் ஆசீர்வாதங்கள் தங்கும்” என்று நீதிமொழிகள் 10:6 கூறுகிறது. சங்கீதம்
112இல் குறிப்பிடப்பட்டிருக்கிற எல்லா ஆசீர்வாதங்களிலும், 4ஆம் வசனம் நம் கவனத்தை
இன்று ஈர்க்கிறது. ”இருள்” என்ற வார்த்தையானது வாழ்வில் வரும் வியாதி, பிரச்சனைகள்,
பேரழிவுகள் மற்றும் பாடுகளைக் குறிக்கிறதாக இருக்கிறது. செம்மையானவர்கள் தங்கள் வாழ்வில்
இருளான ஒரு காலகட்டத்தினூடாக செல்ல நேரிடலாம் என்று 4ஆம் வசனம் நமக்குச் சொல்கிறது.
ஆயினும், அவர்களுக்காக வெளிச்சம் உதிக்கிறது; அவர்கள் இருளிலேயே இருக்கும்படி கைவிடப்பட
மாட்டார்கள். ”நீதிமானுக்காக வெளிச்சமும், செம்மையான இருதயத்தாருக்காக மகிழ்ச்சியும் விதைக்கப்பட்டிருக்கிறது” என்று சங்கீதம் 97:11 கூறுகிறது. கர்த்தராகிய தேவன் தாமே தம் ஜனங்களுக்கு வெளிச்சமாக
இருப்பார் (ஏசாயா 60:10). செம்மையானவர்கள் அல்லது கர்த்தருக்குப் பயந்து நேர்மையாக
இருப்பவர்கள் இருளில் தொடர்ந்து இருக்க மாட்டார்கள். இருளில் அவர்களின் வெளிச்சம் உதிக்கும்
(ஏசாயா.58:8-10). தேவனிடம் இருந்து வெளிச்சம் பெறுதல் ஒரு நேர்மையாக நடக்கும் மனிதர்
தேவனுடைய குணாதிசயங்களை உடையவராக இருக்கும்படி மாற்றுகிறது ( சங்.111:4 மற்றும்
112:4 ஐ ஒப்பிடுக). வேதம் சொல்வது போல, “உத்தமமாய் நடக்கிறவன்
பத்திரமாய் நடக்கிறான்” (நீதி.10:9). எனவே, ”உன் வழியைக்
கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல்
நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார். உன் நீதியை
வெளிச்சத்தைப்போலவும், உன் நியாயத்தைப் பட்டப்பகலைப்போலவும் விளங்கப்பண்ணுவார்” (சங்.37:5-6).
பயன்பாடு: ”நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்” (சங்.23:4). ”கர்த்தர் என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர், யாருக்குப் பயப்படுவேன்? கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர், யாருக்கு அஞ்சுவேன்?” (சங்.27:1). தேவனுடைய “வசனம் என்
கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு
வெளிச்சமுமாயிருக்கிறது” (சங்.119:105).
ஜெபம்: தந்தையாகிய தெய்வமே, இருளிலும் உம் வழியில் நடக்க
என்னை வழிநடத்தும் உம் வெளிச்சத்திற்காக உமக்கு நன்றி. கர்த்தாவே, நான் எப்பொழுதும்
செம்மையான வழியில் நடக்க எனக்கு உம் வல்லமையைத் தந்தருளும். பரிசுத்த ஆவியானவரே, தேவனுடைய
வார்த்தையை எனக்கு நினைவுபடுத்தி, அதற்கேற்ப வாழ எனக்கு உதவியருளும். ஆமென்.
- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573
Day – 294
No comments:
Post a Comment