வாசிக்க: எரேமியா 17,18; சங்கீதம் 104; கொலோசெயர் 3
வேத வசனம்: கொலோசெயர் 3: 12. ஆகையால், நீங்கள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட பரிசுத்தரும்
பிரியருமாய், உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக்கொண்டு;
13. ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர்பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.
14. இவை எல்லாவற்றின்மேலும், பூரணசற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.
கவனித்தல்: “ஆள் பாதி, ஆடை பாதி” என்பது பழமொழி. பள்ளிக் கூடம்
செல்லும் பிள்ளைகள் மற்றும் பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் ஒரே மாதிரியான சீருடை
அணிந்து செல்வதை நாம் காண்கிறோம். குழு அடையாளம்,
சமத்துவத்தைக் காத்துக்கொள்ளுதல் போன்றவற்றில் அவர்களின் சீருடையானது முக்கியமான பங்கை
வகிக்கிறது. அவர்களின் சீருடையானது தங்களுடைய பள்ளி அல்லது நிறுவனத்தை சேர்ந்தவர்கள்
என்ற உணர்வை அவர்களுக்குக் கொடுக்கிறது. சில சபைகள் சீருடை அணிந்து வருவதை அல்லது வெள்ளை உடை அணிவதை வலியுறுத்துகிறார்கள். பொதுவாக, இது போன்ற
ஆடைக்கான விதிகள் ஒருவரின் வெளிப்புறத் தோற்றத்திற்கு அதிக கவனம் செலுத்துகிறதாக
இருக்கின்றன. கிறிஸ்தவ வாழ்க்கை முறைக்கான நடைமுறை ஆலோசனையை கொலோசெயர் 3ஆம் அதிகாரம்
நமக்குத் தருகிறது. கிறிஸ்துவில் நாம் யார் என்பதையும், நாம் என்ன செய்ய வேண்டும்
என்பதையும் கொலோ.3:12-14 சொல்கிறது.
”ஆகையால்” என்ற வார்த்தையானது இதற்கு முந்தைய
வசனங்களில் சொல்லப்பட்டதன் அடிப்படையில் ஒரு முடிவெடுக்க அல்லது தீர்மானம் எடுக்க
நம்மை அழைக்கிறது. ”கிறிஸ்துவே எல்லாரிலும்
எல்லாமுமாயிருக்கிறார்” என்று 11ஆம் வசனம் அழுத்தமாக சொல்கிறது. நாம் தேவனால்
தெரிந்து கொள்ளப்பட்ட பரிசுத்தரும் பிரியருமாக இருப்பது என்பது ஒரு ஆசீர்வாதம் ஆகும்.
இது நாம் தேவனுடைய பிள்ளைகளாக, இந்த உலகத்திற்கு அவரைக் காட்டுகிறவர்களாக வாழ வேண்டும்
என்ற பொறுப்பு நமக்கு இருக்கிறது என்பதை நினைவுபடுத்துகிறது. நம் சமுதாய, தேசிய பின்னணியைப்
பொருட்படுத்தாமல், கிறிஸ்தவ விசுவாசத்தின் ஐந்து அடிப்படை குணாதிசயங்களை நாம் தரித்துக்
கொள்ள வேண்டியது நம் அனைவருக்கும் அவசியமானது ஆகும். இது நாம் கிறிஸ்துவுடன் நம்மை அடையாளப்படுத்துக்
கொள்ளவும், அவரைக் காட்டவும் நமக்கு உதவுகிறது.
கடவுள் நம்மை ஏற்றுக் கொண்டு, நாம் அவருடன் இருக்கும்படி நம்மை அவர் மன்னிக்க வேண்டும்
என்று எதிர்பார்க்கிறோம். ஆயினும், ”ஒருவரையொருவர்
தாங்கி,… ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்” என்று வேதம் நமக்குச் சொல்லும்போது, அதைச்
செய்வது நமக்கு மிகவும் கடினமானதாக இருக்கிறது. ஆகவே, கிறிஸ்துவே நம் முன்மாதிரி
என்பதை பவுல் நமக்கு நினைவுபடுத்துகிறார். கிறிஸ்துவிடம் இருந்து நாம் பெற்றுக் கொண்டதை
அப்படியே நாமும் செய்ய வேண்டும்: “கிறிஸ்து உங்களுக்கு
மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.” கடைசியாக, மேலே உள்ள அனைத்தையும் உள்ளடக்கிய நம்மை இணைக்கும் மற்றும் ஒன்றாக்கும் சக்தியான அன்பை நாம்
அனைவரும் தரித்துக் கொள்ள வேண்டும். இது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை தரித்துக் கொள்வதே
அன்றி வேறல்ல. நாம் இதைச் செய்யும்போது, நாம் கிறிஸ்துவைப் போல வாழ்வதற்கு தேவையான
அனைத்தையும் அவர் நமக்குச் சாத்தியமானதாக்குகிறார்.
பயன்பாடு: நான் என் பழைய மனிதனையும்
அவனுடைய செய்கைகளையும் களைந்து போட்டு (வ.9), கிறிஸ்துவை தரித்துக் கொள்ள வேண்டும்
(ரோமர் 13:14). உள்ளான மனிதன் நாளுக்கு நாள் புதிதாக்கப்படுவதிலேயே என் கவனம் இருக்க
வேண்டும், என் வெளிப்புறத் தோற்றத்தில் அல்ல. என் அன்பு மாயமற்றதாக, உண்மையானதாக
இருக்க வேண்டும். நான் என் வாழ்வின் மூலமாக
கிறிஸ்துவின் செய்தியை அறிவிக்கும் அவருடைய தூதுவராக இருக்கிறேன்.
ஜெபம்: தந்தையாகிய தெய்வமே, என்னை
உம்முடையவனா(ளா)க இருக்கும்படி என்னை தெரிந்து கொண்டதற்காக உமக்கு நன்றி. கர்த்தாவே, அன்பின் வழியிலே நான்
நடக்க என்னைப் பலப்படுத்தியருளும். பரிசுத்த ஆவியானவரே, கிறிஸ்து என்னை நேசித்து மன்னித்தது
போல மற்றவர்களிடம் நான் கிறிஸ்தவ அன்பைக் காண்பிக்க எனக்கு உதவியருளும். ஆமென்.
- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573
Day - 286
No comments:
Post a Comment