வாசிக்க: எரேமியா 35,36; சங்கீதம் 113; 2 தெசலோனிக்கேயர் 3
வேத வசனம்: சங்கீதம் 113: 7. அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து தூக்கிவிடுகிறார்; எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்.
8. அவனைப் பிரபுக்களோடும், தமது ஜனத்தின் அதிபதிகளோடும் உட்காரப்பண்ணுகிறார்.
கவனித்தல்: நாம் உணவு உண்பதற்கு முன் ஜெபிக்கும்போது, நம் முன்
இருக்கும் உணவுக்காக தேவனுக்கு பொதுவாக நன்றி சொல்வோம். மேலும், ஏழைகள் மற்றும் தேவை
உள்ளவர்களுக்கு உணவு அருளும்படி நாம் தேவனிடம் கேட்டு ஜெபிப்போம். உணவுக்கு முன் நாம்
செய்யும் ஜெபம் சுருக்கமாக இருக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்ப்பதால், நம் உணவு
வேளை ஜெபங்களில் இதைவிட அதிகமாக நாம் என்ன செய்துவிட முடியும்! பஸ்கா உணவுக்கு முன்
பாடப்படும் சங்கீதம் 113 “Hallel Psalms,”
என்று அழைக்கப்படும் துதிப் பாடல்களின் தொகுப்பில் முதல் பாடல் ஆகும். இச்சங்கீதம்
113, அன்னாளின் ஜெபத்தையும் (1 சாமு.2:1-15) மற்றும் மரியாளின் வாழ்த்துப் பாடலையும்
(லூக்கா 1:46-55) நினைவுபடுத்துகிறது. சங்கீதக்காரன் தேவனுடைய மகத்துவத்தை மட்டும்
பாடாமல், மக்களின் வாழ்க்கையில் அவர் என்ன செய்கிறார் என்பதையும் பாடுகிறார். பரலோக சிங்காசனத்தில் வீற்றிருக்கும் தேவன் தேவையில்
உள்ள எளியவர்கள் மீது கரிசனை உள்ளவராக இருந்து, அவர்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.
சங்கீதம் 113இல், “சிறியவன்” மற்றும் ”எளியவன்”
என்பது பொருளாதார ரீதியாக ஏழைகளாக இருப்பவர்களை மட்டும் குறிப்பிடாமல், தங்களின் தேவைகள் மற்றும் விடுதலைக்குத் தேவையான
போதிய வளங்களை இல்லாதவர்களைக் குறிப்பிடுகிறது. ஆகவே, அவர்கள் தேவனைச் சார்ந்து இருக்கிறார்கள்.
”புழுதி” மற்றும் “குப்பை” என்பது ஒருவரின் தாழ்ந்த, பரிதாபமான, மற்றும் இழிவான நிலையைக்
குறிக்கிறது. ஏழை எளியவர்களுக்கு நாம் செய்ய வேண்டிய கடமை குறித்து பரிசுத்த வேதாகமம்
நமக்குப் பல விசயங்களைப் போதிக்கிறது. இங்கே, இங்கே தேவன் அவர்களுக்கு என்ன செய்கிறார்
என்பதை நாம் காண்கிறோம். தேவன் எளியவர்களை எடுத்து உயர்த்துகிறார். தேவன் அவர்களை
விடுவித்து, பிரபுக்களோடும் ஜனத்தின் அதிபதிகளோடும் அமரப் பண்ணுகிறார். அவர்களுக்குச் சாம்பலுக்குப் பதிலாக சிங்காரத்தை
அவர் கொடுக்கிறார். அவர்களுடைய முந்தைய நிலையுடன் ஒப்பிடும்போது, தேவனுடைய இரட்சிப்பு
அவர்களுக்கு மரியாதையை கொடுக்கிறது. சிறியவர்களையும் எளியவர்களையும் விடுவிப்பதில்
தேவன் இன்றும் தீவிரமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். லூக்கா 7:22இல், தரித்திரர்
மற்றும் தேவை உள்ளவர்களின் வாழ்வில் மேசியா செய்துவரும் கிரியைகளை யோவானுக்குப் போய்
சொல்லும்படி அவனுடைய சீடர்களிடம் இயேசு கூறினார்.
கிறிஸ்து மூலமாக, தேவன் இன்றும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். கிறிஸ்துவில்,
நாம் நம் இரட்சிப்பைப் பெற்றுக் கொள்கிறோம். அது மட்டுமல்ல, பவுல் எபேசியர்களுக்கு
எழுதினது போல, “கிறிஸ்து இயேசுவுக்குள் (தேவன்) நம்மை அவரோடேகூட எழுப்பி, உன்னதங்களிலே அவரோடேகூட உட்காரவும் செய்தார்” (எபே.2:7). நம்மை
நேசிக்கும் இயேசுவின் மூலமாக நாம் முற்றும் முடிய ஜெயங்கொள்ளுகிறவர்களாக இருக்கிறோம்.
பயன்பாடு: உன்னதங்களில்
வாசம்பண்ணுகிற என் தேவனாகிய கர்த்தருக்குச் சமமானவர் எவருமில்லை. அவர் என்னைக் காண்கிறார். அவர் ”பயங்கரமான குழியிலும்
உளையான சேற்றிலுமிருந்து என்னைத் தூக்கியெடுத்து, என் கால்களைக் கன்மலையின்மேல் நிறுத்தி” இருக்கிறார் (சங்.40:2).
இயேசுவே என் கன்மலையும் என் இரட்சிப்பும் ஆவார். ”கிறிஸ்துவுக்குள் உன்னதங்களிலே
ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும்” தேவன் என்னை ஆசீர்வதித்திருக்கிறார் (எபே.1:3) நான் என் ஆசீர்வாதங்களை எண்ணிப்
பார்த்து, தேவனை எப்பொழுதும் துதித்துக் கொண்டிருப்பேன்.
ஜெபம்: தந்தையாகிய தெய்வமே, நீர்
என் மீது கொண்டிருக்கும் உம் அன்பு மற்றும் கரிசனைக்காக உமக்கு நன்றி. கர்த்தாவே,
நீர் என் வாழ்வில் இடைபட்டு, உம் நாம மகிமைக்காக என்னை உயர்த்துவதற்காக உமக்கு நன்றி.
அன்பின் ஆண்டவரே, நான் உயிரோடிருக்கும் நாளெல்லாம் உம்மைத் துதித்து. உம் நாமத்தைச்
சொல்லி என் கைகளை உயர்த்துவேன். ஆமென்.
- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573
Day – 295
No comments:
Post a Comment