Tuesday, October 26, 2021

ஜெபத்தைப் பற்றிய ஒரு குறிப்பு

வாசிக்க: எரேமியா 39,40; சங்கீதம் 115; 1 தீமோத்தேயு 2

வேத வசனம்1 தீமோத்தேயு 2: 1. நான் பிரதானமாய்ச் சொல்லுகிற புத்தியென்னவெனில், எல்லா மனுஷருக்காகவும் விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் வேண்டுதல்களையும் ஸ்தோத்திரங்களையும் பண்ணவேண்டும்;
2.
நாம் எல்லாப் பக்தியோடும் நல்லொழுக்கத்தோடும் கலகமில்லாமல் அமைதலுள்ள ஜீவனம்பண்ணும்படிக்கு, ராஜாக்களுக்காகவும், அதிகாரமுள்ள யாவருக்காகவும் அப்படியே செய்யவேண்டும்.
3. நம்முடைய இரட்சகராகிய தேவனுக்குமுன்பாக அது நன்மையும் பிரியமுமாயிருக்கிறது.
4. எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்.

கவனித்தல்:  கிறிஸ்தவ ஜெபக் கூடுகைகளில் மிகவும் அதிகம் பயன்படுத்தப்படும் வேதப் பகுதிகளில் 1 தீமோத்தேயு 2:1-2 ஆகும். அனேக கிறிஸ்தவர்களுக்கு இந்த வேதப்பகுதி மிகவும் பயனுள்ளதாக, குறிப்பாக ஜெப வேளைகளில் எதற்காக ஜெபிக்க வேண்டும் என்று அவர்களுக்குத் தெரியாத போது மிகவும் உதவியாக இருக்கிறது. நம்மில் பெரும்பாலானோர் நாம் நேசிக்கிற மற்றும் நம்மை அன்பு செய்கிற, ஆதரிக்கிறவர்களுக்காக மற்றும் நம் மீது கரிசனை உள்ளவர்களுக்காக ஜெபிக்கிறோம்.  கிறிஸ்தவத்திற்கும் கிறிஸ்தவர்களுக்கும் எதிரானவர்கள் என்று நாம் கருதுபவர்களுக்காக, நாம் எப்படி ஜெபிக்கிறோம்? நாம் அவர்களுக்காக ஜெபிக்கிறோமா அல்லது அவர்களுக்கு எதிராக ஜெபிக்கிறோமா? இங்கே, எல்லா மனிதருக்காகவும் நாம் ஜெபிக்க வேண்டும் என்று பவுல் நம்மை வலியுறுத்துகிறார். எல்லாருக்காகவும் ஜெபிப்பது என்பது ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கும் உள்ள பாக்கியம் நிறைந்த பொறுப்பு ஆகும். பவுல் பயன்படுத்தி இருக்கிற “பிரதானமாய்” என்பது அப்படிப்பட்ட ஜெபங்களின் முக்கியத்துவத்தை குறிக்கிறது. எல்லா மனிதருக்கும் ஜெபம் அவசியமானதாக இருக்கிறது. மற்றவர்களின் ஜெபம் தேவைப்படாத ஒரு உயிருள்ள நபரைப் பார்ப்பது சாத்தியம் இல்லாத ஒன்று ஆகும்.

ஜெபம் என்பதைக் குறிப்பிட பவுல் நான்கு கிரேக்க வார்த்தைகளைப் பயன்படுத்தி இருக்கிறார்:  Deēseis (விண்ணப்பங்கள்), proseuchas (ஜெபங்கள்), enteuxeis (வேண்டுதல்கள் அல்லது பரிந்துரை ஜெபங்கள்), and eucharistias (ஸ்தோத்திரங்கள்). இந்த வார்த்தைகள் நாம் அனைவருக்காகவும் எல்லாவித ஜெபங்களையும் செய்ய வேண்டும் என்பதை உணர்த்துகிறது. நாம் எல்லாருக்காகவும் ஜெபிக்கும்போது, ராஜாக்களை அல்லது ஆளுகை செய்கிறவர்களை மற்றும் அதிகாரத்தில் உள்ளவர்களுக்காக ஜெபிக்காமல் விட்டுவிடக் கூடாது. நம் ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்காக, அவர்களின் மத, அரசியல் மற்றும் சமுதாய நிலைப்பாடு என்னவாக இருந்தாலும் பொருட்படுத்தாமல், நாம் ஜெபிக்க வேண்டும். கிறிஸ்தவ விசுவாசம் மற்றும் நடைமுறைக்கு எதிரான கருத்தை உடையவர்களுக்காக நாம் எப்படி ஜெபிக்க முடியும்? என்று சிலர் கேட்கலாம். ரோம சக்கரவர்த்தி கொடுகோலனான நீரோ ஆட்சி செய்த போது பவுல் இதை எழுதினார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நாம் நம் ஆட்சியாளர்களுக்காக ஜெபிக்க வேண்டும். ஏனெனில், தேவன் அனைவர் மீதும் ஆளுகை செய்கிறவராக மாட்சிமை பொருந்தியவராக இருக்கிறார் என்று நாம் விசுவாசிக்கிறோம். ரோமர் 13:1இல், “உண்டாயிருக்கிற அதிகாரங்கள் தேவனாலே நியமிக்கப்பட்டிருக்கிறது” என்று பவுல் கூறுகிறார். பக்தியுள்ள பரிசுத்தமான ஒரு வாழ்க்கையை வாழ உதவும் அமைதியான ஒரு வாழ்க்கையை நாம் அனைவரும் விரும்புகிறோம். பிரதானமாக, நாம் எல்லா மனுஷருக்காகவும் ஜெபிக்கும்போது,  நம் விசுவாசத்தை நடைமுறைப்படுத்தும் அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையை நாம் உடையவர்களாக இருப்போம். நம் ஜெபத்திற்கான நோக்கம் இத்துடன் முடிந்து விடுவதில்லை.  தேவன் இத்தகைய ஜெபங்களில் விருப்பம் உள்ளவராக இருக்கிறார். ”எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும்” அவர் விரும்புகிறார். எனவே, எல்லா மனுஷருக்குமான நம் ஜெபமானது ஒரு அமைதியான வாழ்க்கையை மட்டும் நமக்குத் தருவதில்லை, அத்துடன் மக்கள் இரட்சகராகிய தேவனிடம் வரும்படி சுவிசேஷத்தை அறிவிப்பதற்கான சாதகமான சூழ்நிலையையும் உருவாக்கிக் கொடுக்கிறது. ”நாம் சந்திக்கவே முடியாத தலைவர்கள் மீதும் முழங்கால் ஜெபத்தின் மூலம் ஒரு தாக்கத்தை உண்டு பண்ண முடியும்” என்று  எல்லாவற்றிலும் எனக்கு அவரே (My all in all) என்ற நூலின் ஆசிரியர் ராபர்ட் ஜே மார்கன் சொல்கிறார். நம் ஜெபங்கள் வல்லமையுள்ளவை என்று நாம் நம்புகிறோம். நாம் விரும்பும் மாற்றத்தை உண்டாக்க அவைகளை நாம் பயன்படுத்தலாம்.

பயன்பாடு:  என் ஜெபங்களில் நான் குறுகிய மனப்பான்மை உடையவனாக நான் இருக்கக் கூடாது. நான் எல்லோருக்காகவும் ஜெபிக்க வேண்டும்; இதில் எனக்கும் என் கிறிஸ்தவ விசுவாசத்திற்கு எதிரானவர்களும் அடங்குவர். என் தேவன் ஆளுகை செய்கிறார்’ அவரால் செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்றுமில்லை (எரே.32:17). இறுதி அதிகாரம் மற்றும் வல்லமையானது என் தேவனின் கரங்களில் இருக்கிறது. நான் எல்லா மனிதருக்காகவும் ஜெபிக்கும்போது, எல்லா மனிதரையும் பற்றிய தேவனுடைய சித்தத்தை நான் நினைவில் கொள்ள வேண்டும். . ”எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடைய” நான் ஜெபிப்பேன்.

ஜெபம்:  இரட்சகராகிய தேவனே, எங்கள் நாட்டில் உள்ள அனைத்து ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்காக ஜெபிக்கிறேன். கர்த்தாவே, ஜனங்களை ஆளுகை செய்ய அவர்களுக்கு ஞானத்தையும் புத்தியையும் கொடுத்தருளும்.  பக்தியுள்ள மற்றும் பரிசுத்தமான வாழ்க்கையை வாழ ஏற்ற ஒரு நாடாக என் நாடு இருக்க நான் ஜெபிக்கிறேன். கர்த்தர் என் நாட்டிற்காக பெரிய காரியங்களைச் செய்வார். ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

Day – 297

No comments: