Wednesday, October 6, 2021

இயேசுவைப் போல வாழ்தல்

 வாசிக்க: எரேமியா 1,2; சங்கீதம் 96; எபேசியர் 5

வேத வசனம் எபேசியர் 5: 1. ஆதலால், நீங்கள் பிரியமான பிள்ளைகளைப்போல தேவனைப் பின்பற்றுகிறவர்களாகி,
2.
கிறிஸ்து நமக்காகத் தம்மை தேவனுக்குச் சுகந்த வாசனையான காணிக்கையாகவும் பலியாகவும் ஒப்புக்கொடுத்து நம்மில் அன்புகூர்ந்ததுபோல, நீங்களும் அன்பிலே நடந்துகொள்ளுங்கள்.

கவனித்தல்:   இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையை வாசிப்பதற்கும் பின்பற்றுவதற்கும் அனேகர் ஆர்வமுள்ளவர்களாக இருக்கிறார்கள். இயேசுவின் வாழ்க்கையானது முதல் நூற்றாண்டில் இருந்தது போலவே இன்றும் மக்களுக்குச் சவாலானதாக இருக்கிறது. இதுவரை, இயேசுவைப் பின்பற்றுதல் என்ற தலைப்பில் நூற்றுக்கணக்கான புத்தகங்கள் எழுதப்பட்டிருக்கின்றன. தாமஸ் à கெம்பிஸ் என்பவர் எழுதிய “கிறிஸ்து நாதர் அனுசாரம்” (Imitation of Christ) என நூல் உலகமெங்கிலும் மிகவும் புகழ்பெற்ற, பரவலாக வாசிக்கப்பட்ட புத்தகம் ஆகும்.  கெம்பீஸ் இயேசுவைப் பின்பற்றுவதற்கு துறவற வாழ்க்கையை ஆதரிக்கிறார். இது போல, பல்வேறு நூலாசிரியர்கள் இயேசுவைப் பின்பற்றுவது தொடர்பான தங்கள் புத்தகங்களை  ஒரு குறிப்பிட்ட கருத்தில் எழுதி, அக்கருத்தைப் பரப்புகின்றனர். ஆனால், பவுலோ எபேசு சபை விசுவாசிகள் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்களாக இருக்க வேண்டும் என உற்சாகப்படுத்துகிறார். பவுல் தாமே இயேசுவைப் பின்பற்றுவதில் மிகவும் தீவிரமானவராக  இருந்தார் (1 கொரி.11:1). இயேசுவின் முன்மாதிரியை கிறிஸ்தவர்கள் பின்பற்ற வேண்டும் என ஆதி அப்போஸ்தலர்கள் வலியுறுத்தினர் )1 பேதுரு 2:21; 1 யோவான் 2:6). தன் சீடர்களின் கால்களைக் கழுவின பின்பு, ”நான் உங்களுக்குச் செய்ததுபோல நீங்களும் செய்யும்படி உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்” என்று இயேசு சொன்னார் ( யோவான் 13:14-15).  நற்செய்தி நூலானது இயேசுவை மிகவும் கவனமாக பின்பற்றுவதற்கான நல்லதொரு புரிதலை நமக்குத் தருகிறது.

இயேசுவைப் போல வாழ்தல் என்பது அவர் செய்த எல்லாவற்றையும் நாம் செய்ய வேண்டும் என்பதைக் குறிக்கிறதா? நமக்கு அது சாத்தியமா? என்று சிலர் கேட்கக் கூடும்.  முதலாவதாக, நம்மால் செய்ய முடியாத ஒன்றைச் செய்ய வேண்டும் என இயேசு ஒருபோதும் நம்மிடம் கேட்கமாட்டார் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். இரண்டாவதாக,  இந்த வசனத்திற்கு அருகில் வரும் வசனங்களைக் கவனிக்கும்போது (எபே.4:32; 5:1-2), ஒருவரை ஒருவர் அன்பு செய்தல், ஒருவரை யொருவர் மன்னித்தல் மற்றும் அன்பிலே நடந்து கொள்ளுதல் பற்றி பவுல் சொல்வதை நாம் அறிந்து கொள்கிறோம். அன்பு செய்தல் மற்றும் மன்னித்தல் பற்றி நாமனைவரும் நம்முடைய சொந்த கருத்துக்களையும் வரையறைகளையும் உடையவர்களாக இருக்கிறோம். இங்கே, கிறிஸ்து நம்மை அன்பு செய்வது போல, நம்மை மன்னித்தது போல நாமும் அன்பு செய்ய வேண்டும், மன்னிக்க வேண்டும் என வேதம் நம்மை அழைக்கிறது. பிருயமான பிள்ளைகள் தங்கள் பெற்றோரைப் பின்பற்ற அவர்கள் செய்வது போலச் செய்ய முயற்சிப்பது போல, நாம் இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்ற வேண்டும். கிறிஸ்துவைப் பின்பற்றுவதில் முதல் படி என்னவெனில், நம் சுயத்தை வெறுப்பது ஆகும் (மத்.8:34; லூக்கா 22:34). மூல கிரேக்க மொழியில், ”தேவனைப் பின்பற்றுகிறவர்களாகுங்கள்” என்பது நிகழ்கால வினைச்சொல் கட்டளையாக வருகிறது. இதன் பொருள் என்னவெனில், இது நாம் நம் வாழ்வில் அனுதினமும் தொடர்ந்து பின்பற்றவேண்டிய கட்டளை என்பதாகும். நாம் இயேசுவைப் பின்பற்றும்போது, அவர் செய்ததை நாமும் செய்யும்போது, நம் வாழ்க்கையானது தேவனுக்கு சுகந்த வாசனையான காணிக்கையாக இருக்கும்.

பயன்பாடு:  நான் இயேசுவுக்காக வாழ அழைக்கப்படிருக்கிறேன். கிறிஸ்து என்னை நேசித்து மன்னித்தது போல நான் மற்றவர்களை மன்னித்து அன்பு பாராட்ட வேண்டும். நான் இதை என் பலத்தில் செய்ய முடியாது. கிறிஸ்துவாலேயன்றி என்னால் எதுவும் செய்ய இயலாது.  நான் கிறிஸ்துவில் நிலைத்திருக்கையில், தேவனுடைய முன்மாதிரியைப் பின்பற்ற எனக்கு உதவுகிற பரிசுத்த ஆவியானவரின் வல்லமையை நான் விசுவாசிக்கிறேன். இயேசுவைப் போல வாழ்தல் என்பது ஒரு சுமை (அ) பாரமான காரியம் அல்ல. அது என் வாழ்வை எனக்கும் மற்றவர்களுக்கும் சொர்க்கமாக மாற்றுகிற ஒன்று ஆகும்.

ஜெபம்:  என் தேவனே, உம் முன்மாதிரியான அன்பு மற்றும் மன்னிப்புக்காக உமக்கு நன்றி. இயேசுவே, தேவனுடைய அன்பை நான் புரிந்து கொள்ள உதவும் உம் தியாக வாழ்க்கைக்காக நன்றி. பரிசுத்த ஆவியானவரே, என் வாழ்வில் எல்லாப் பகுதிகளிலும் தேவனைப் பின்பற்ற எனக்கு உம் வல்லமையைத் தந்தருளும். ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

Day - 278

No comments: