வாசிக்க: எரேமியா 23,24; சங்கீதம் 107; 1 தெசலோனிக்கேயர் 2
வேத வசனம்: எரேமியா 23: 23. நான் சமீபத்திற்கு மாத்திரமா தேவன், தூரத்திற்கும் தேவன் அல்லவோ என்று கர்த்தர் சொல்லுகிறார்.
24. யாவனாகிலும் தன்னை நான் காணாதபடிக்கு மறைவிடங்களில்
ஒளித்துக்கொள்ளக்கூடுமோ என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் வானத்தையும் பூமியையும் நிரப்புகிறவர் அல்லவோ என்று கர்த்தர்
சொல்லுகிறார்.
கவனித்தல்: எரேமியா தீர்க்கதரிசி வரப்போகிற
ஆபத்து பற்றி இஸ்ரவேலரை எச்சரித்த போது, அவருடைய வார்த்தைகளுக்கு ஒருவரும் செவிகொடுக்க
வில்லை. ஏனெனில், எருசலேமில் வாழ்ந்த பொய் தீர்க்கதரிசிகள் தேவன் தம் ஜனங்களை பாதுகாப்பார்
என்று பொய் தீர்க்கதரிசனங்களைச் சொல்லி ஜனங்களை தவறாக வழிடநத்தினார்கள். தேவ பயமற்ற இந்த பொய் தீர்க்கதரிசிகள் ஜனங்களுக்கு
மாயையான நம்பிக்கையைக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். இந்தச் சூழலில், தன்னைச் சரியாகப்
புரிந்து கொள்ளும்படி தேவன் மூன்று கேள்விகளைக் கேட்கிறார். முதலாவது கேள்வியானது,
தேவன் எப்போதும் தம் ஜனங்களுடனே இருக்கிறார் என்பதையும் தேவன் நம் அறிவிற்கு அப்பாற்பட்டவர்
என்பதையும் உறுதிப்படுத்துகிறதாக இருக்கிறது.
தேவன் தம் ஜனங்களுக்கு மிகவும் அருகில் இருக்கிறார். “அவர் நம்மில் ஒருவருக்கும் தூரமானவரல்லவே” (அப்.17:27). ”உன்னதத்திலும் பரிசுத்த ஸ்தலத்திலும் வாசம்பண்ணுகிற” நம் தேவன் ”நொறுங்குண்டு பணிந்த ஆவியுள்ளவர்களிடத்திலும்” வாசம் பண்ணுகிறார்
(ஏசாயா 57:15). இரண்டாவது கேள்வியானது, தேவன் நம்மைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்
என்பதை சொல்கிறது. நாம் தேவனிடம் இருந்து எதையும் மறைக்க முடியாது. மூன்றாவதாக, நம்முடனே
கூட இருக்கும் தேவன் இந்த முழு உலகத்தின் மீதும் ஆளுகை உள்ளவராக இருக்கிறார், எல்லாருக்கும்
எல்லாவற்றிற்குமான தேவனாக அவர் இருக்கிறார்.
தேவன் நம்மைப் பார்க்கிறார், நம் அருகில்
இருக்கிறார் என்ற உணர்வு இருந்தால், நாம் எப்படிப்பட்டதொரு வாழ்வை வாழ வேண்டும்! தேவனை
நேசித்துக் கீழ்ப்படிபவர்களுக்கு அவருடைய அருகாமை ஆசீர்வாதமான ஒன்று ஆகும். ஆனால்,
தேவ பயமற்றவர்களுக்கு அவர்களை பயமுறுத்தும் எச்சரிக்கை ஆகும். கள்ள தீர்க்கதரிசிகள்
தங்கள் இருதயத்தின் வஞ்சகத்தை தீர்க்கதரிசனமாக சொல்லி, தேவன் அவர்களைப் பார்ப்பதற்கு
அவர்கள் அருகில் இல்லை என்று நினைத்துக் கொண்டு பொல்லாத வழிகளில் வாழ்ந்து வந்தார்கள்.
தம் தீர்க்கதரிசியான எரேமியா மூலம் தேவன் அவர்களுக்கு எதிராக பேசினார். எவராகிலும்
கர்த்தருடைய நாமத்தில் தீர்க்கதரிசனம் சொன்னால், நாம் அது கர்த்தரிடத்தில் இருந்து
வந்ததுதானா என்பதை சோதித்தறிய வேண்டும். தேவன் பொய் தீர்க்கதரிசிகள் மற்றும் அவர்களுடைய
கள்ள தீர்க்கதரிசனங்களை நம்புகிறவர்களுக்கு எதிராக இருக்கிறார். அதே வேளையில், அவர்
நமக்கு மிகவும் அருகில் இருக்கிறார். அவர் நம்முடனே பேச விரும்புகிறார். நாம் அவருடைய
கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பில் வாழ்கிறோம்.
பயன்பாடு: என் தேவன் எங்கும் நிறைந்தவர்.
நான் அவரிடம் இருந்து எதையும் மறைக்க முடியாது, மறைக்கக் கூடாது. அவர் என்னை சகல
ஆபத்துகளில் இருந்தும் பாதுகாக்கிறார். அவர் கர்த்தரை அறிகிற அறிவினால் என்னை நிரப்புகிறார். கர்த்தருக்கேற்றபடி, கர்த்தரிடம் இருந்து நான்
பெற்ற அழைப்புக்கேற்ற ஒரு வாழ்க்கையை நான் வாழ வேண்டும்/ வாழ்வேன்.
ஜெபம்: தந்தையாகிய தெய்வமே, நீர்
எப்போதும் என்னுடனே கூட இருப்பதற்காக உமக்கு நன்றி. கர்த்தாவே, உமக்குப் பிரியமான
ஒரு வாழ்க்கையை வாழ உம் பலத்தை எனக்குத் தந்தருளும். பரிசுத்த ஆவியானவரே, தேவனுடைய
வார்த்தையை நிதானித்தறியவும், முழு இருதயத்துடன் தேவனுக்குக் கீழ்ப்படியவும் எனக்கு
உதவியருளும். ஆமென்.
- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573
Day - 289
No comments:
Post a Comment