வாசிக்க: புலம்பல் 1,2; சங்கீதம் 121; 2 தீமோத்தேயு 3
வேத வசனம்: 2 தீமோத்தேயு 3: 16. வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக,
17. அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும் சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது.
கவனித்தல்: உலகத்தில் உள்ள எந்தப் புத்தகத்தைப் பார்க்கிலும்
அதிகம் வாசிக்கப்பட்ட, ஆய்வு செய்யப்பட்ட, அதிகம் மேற்கோள் காட்டப்பட்ட புத்தகம் பரிசுத்த
வேதாகமம் ஆகும். ஆதியாகமத்தில் இருந்து வெளிப்படுத்தல் வரை, வேதாகமத்தில் உள்ள 66
புத்தகங்களை பெருமளவில் ஒருவரை ஒருவர் பார்த்திராத 40 ஆசிரியர்கள் ஏறக்குறைய 1500 வருட காலத்தில் எழுதினர். ஆயினும்,
வேதாகமத்தின் தொடர்ச்சித் தன்மை மற்றும் செய்தியில் மாற்றமில்லாது நிலைத்து நிற்கும்
தன்மையானது தனித்தன்மை நிறைந்தது ஆகும். வேதாகமத்தின் மகத்துவம் பற்றி நாம் இது போன்று
பல காரியங்களைக் கூற முடியும். இந்த தனித்துவமான தன்மைக்கு ஒரே காரணம் என்னவெனில்,
அது தேவ ஆவியினால் அருளப்பட்டது ஆகும். இங்கே
”வேத வாக்கியங்களெல்லாம்” என்று பவுல் குறிப்பிடுகிறார். சில கிறிஸ்தவர்கள் குறிப்பிட்ட
சில புத்தகங்களை மட்டுமே வேதாகமத்தில் வாசிக்க விரும்புகிறார்கள். சிலர் வேதாகமத்தில்
சில புத்தகங்களை வாசிக்கக் கூட முயற்சி செய்வதில்லை. பவுல் இதை எழுதும்போது புதிய
ஏற்பாட்டின் பல புத்தகங்கள் எழுதப்படவில்லை. ஆகவே இது பழைய ஏற்பாட்டை மட்டுமே குறிக்கிறது
என்று நினைக்கிறார்கள். வேதாகமத்தில் குறைந்தது இரு வேத பகுதிகள் புதிய ஏற்பாட்டு
எழுத்துக்களை வேதம் என்று குறிப்பிடுகிறது (1 தீமோ.5:18; 2 பேதுரு 3:16). வேத வாக்கியங்களெல்லாம் என்பது பழைய ஏற்பாட்டுப்
புத்தகங்களை மட்டுமல்ல, வேதாகமத்தின் எல்லா புத்தகத்தையும் அது குறிக்கிறது.
தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிற வேத வாக்கியங்கள்
அனைவருக்கும் பயனுள்ளது ஆகும். தேவனுடைய வார்த்தையினால்
உண்டாகும் நான்கு நன்மைகளைப் பற்றி பவுல் எழுதுகிறார்: தேவனையும், அவர் போதனைகளையும்
அறிந்து கொள்ள உதவும் உபதேசம், ஒரு விசுவாசி செய்யும் பாவத்தைக் கடிந்து கொள்வதற்கு,
ஒருவரின் பாவம் அல்லது தவறான் வழியை சுட்டிக்காட்டி சரி செய்யவும், நீதியின் வழியில்
நடந்து நீதியைப் படிப்பிக்கவும் உதவியாக இருக்கிறது. தேவனுடைய மனிதன் தேறின கிறிஸ்தவனாக
இருக்கவும், தேவனுடைய வார்த்தையை தன்னுடைய வாழ்வில் செயல்படுத்தவும் இந்த நான்கு இயல்புகளும்
உதவுகின்றன. தேவனுடைய வார்த்தையானது நமக்குத் தேவையான பயிற்சியைக் கொடுக்கும்போது,
நாம் எல்லாவற்றையும் செய்கிறதற்கு அது நம்மை பலப்படுத்துகிறது. வேதாகமத்தினால் வரும்
நன்மைகள் அதை நாம் முறையாக வாசிக்கவும் நம் வாழ்வில் அதன்படி வாழவும் நம்மை உற்சாகப்படுத்துகிறது.
எதிரியாகிய சாத்தானை ஜெயிப்பதற்கான வல்லமையை தேவனுடைய வார்த்தையானது நமக்குத் தருகிறது.
”வேத வாக்கியங்கள் நமக்கு தகவல் தருவதற்காக கொடுக்கப்படவில்லை, நம்மை மறுரூபமாக்குவதற்கே
கொடுக்கப்பட்டிருக்கிறது” என்று டி.எல். மூடி நமக்கு நினைவுபடுத்துகிறார்.
பயன்பாடு: நான் திருவசனத்தைக் கேட்பவனாக மட்டும் இராமல்,
அதின் படி செய்கிறவனாக இருக்க வேண்டும் (யாக்கோபு 1:22). தேவனுக்குக்
கீழ்ப்படியவும், இந்த உலகத்தில் அவருக்காக வாழவும் தேவையான பலத்தை தேவனுடைய வார்த்தை
எனக்குத் தருகிறது. தேவனுடைய பிள்ளையாக, தேவனுடைய வார்த்தையில் இருந்து வரும் ஆசீர்வாதத்தை
நான் அசட்டை செய்யக் கூடாது. ஏனெனில், தேவனுடைய வார்த்தையானது சகல நற்கிரியைகளையும்
செய்ய என்னை பயிற்றுவிக்கிறது.
ஜெபம்: தந்தையாகிய தெய்வமே, கிறிஸ்துவில் நான் ஒரு சிறந்த
மனிதனாக இருக்க எனக்கு உதவும் உம் வார்த்தைக்காக நன்றி. கர்த்தாவே, உம் வார்த்தையை
வாசித்து, செவிகொடுத்து, உம் வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிய எனக்கு உதவியருளும். உம்
வேதத்தின் அதிசயங்களை நான் காணும்படி என்
கண்களை திறந்தருளும். ஆமென்.
- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573
No comments:
Post a Comment