Friday, November 5, 2021

நாம் நம்புகிற ஆனந்த பாக்கியம்

வாசிக்க: எசேக்கியேல் 3-4; சங்கீதம் 124; தீத்து 2

வேத வசனம்  தீத்து 2: 11. ஏனெனில் எல்லா மனுஷருக்கும் இரட்சிப்பை அளிக்கத்தக்க தேவகிருபையானது பிரசன்னமாகி,
12.
நாம் அவபக்தியையும் லௌகிக இச்சைகளையும் வெறுத்து, தெளிந்தபுத்தியும் நீதியும் தேவபக்தியும் உள்ளவர்களாய் இவ்வுலகத்திலே ஜீவனம்பண்ணி,
13.
நாம் நம்பியிருக்கிற ஆனந்த பாக்கியத்துக்கும், மகா தேவனும் நமது இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய மகிமையின் பிரசன்னமாகுதலுக்கும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும்படி நமக்குப் போதிக்கிறது.
14. அவர் நம்மைச் சகல அக்கிரமங்களினின்று மீட்டுக்கொண்டு, தமக்குரிய சொந்த ஜனங்களாகவும், நற்கிரியைகளைச் செய்ய பக்திவைராக்கியமுள்ளவர்களாகவும் நம்மைச் சுத்திகரிக்கும்படி, நமக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்.

கவனித்தல்: கிறிஸ்தவர்கள் தங்கள் சாட்சியைப் பகிர்ந்து கொள்ளும்போது, அவர்களின் அனேகர் தங்களுடைய கடந்தகால (தேவனற்ற/பாவ/கீழ்ப்படியாத) வாழ்க்கையைப் பற்றி விளக்கமாகக் கூறுகின்றனர்.  ஒரு சிலரே தங்கள் நிகழ்கால மாற்றப்பட்ட வாழ்க்கையைக் குறித்து பேசுகின்றனர்.  சில கிறிஸ்தவர்கள் இரட்சிப்பு என்பது தங்களின் கடந்தகால அனுபவம் என்று நினைக்கின்றனர். அவர்கள் அதை தங்களுடைய நிகழ்கால/இன்றைய வாழ்க்கையுடனும், தங்கள் எதிர்காலத்துடனும் தொடர்புபடுத்துவதில்லை. தீத்து 2ஆம் அதிகாரம் கிறிஸ்தவ ஒழுக்கக் கோட்பாடுகளையும் கிறிஸ்தவ விசுவாசத்தையும் பற்றிய வேதாகமத்தில் மிகச் சிறந்த அதிகாரமாக இருக்கிறது. இது இரட்சிப்பின் மூன்று காலங்களைப் பற்றிய ஒரு புரிதலை நமக்குத் தருகிறது: கடந்தகாலம் (வ.11), நிகழ்காலம் (வ.12), மற்றும் எதிர்காலம் (வ.13). இந்த வசனங்கள் நாம் நீதிமானாக்கப் பட்டது,  நாம் பரிசுத்தப்படுதல், மற்றும் மகிமையடைதல் பற்றி நமக்கு நினைவுபடுத்துகிறது (ரோமர்.5:1; எபே.2:8,9; 1கொரி 1:18; 1தெச. 5:9; ரோமர் 8:11). ”மகா தேவனும் நமது இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய மகிமையின் பிரசன்னமாகுதல்” என்பது ”நாம் நம்பியிருக்கிற ஆனந்த பாக்கியம்” என்று 13ஆம் வசனம் கூறுகிறது.

”மகா தேவன்” என்று இயேசுவுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிற பட்டமானது அவருடைய தெய்வீகத்தைப் பற்றி வெளிப்படையாக கூறுகிற வசனமாக இருக்கிறது. ஆனந்த பாக்கியத்தை எதிர் நோக்கிக் காத்திருத்தல் என்பது இயேசுவின் வருகையைப் பற்றிய எதிர்பார்ப்புடன் காத்திருப்பதைக் குறிக்கிறது. கிறிஸ்துவை உண்மையாகப் பின்பற்றுபவரின் ”ஆவிக்குரிய மனப்பான்மை”யாக இது இருக்கிறது. ”இது உலக இச்சைக்கு எதிரான மருந்து மற்றும் இந்த எதிர்பார்ப்புடன் உலகில் வாழ்வதற்கான உந்துதலைத் தரும் ஊக்க மருந்து” என்று வேதவிளக்கவுரை எழுதுபவர் ஒருவர் கூறுகிறார். இது ஏன் ஆனந்த பாக்கியம்? என்று நாம் நினைக்கக் கூடும். இயேசு மறுபடியும் வரும்போது நாம் எடுத்துக் கொள்ளப்பட்டு, கர்த்தருடன் என்றென்றைக்கும் இருப்போம் என்ற நம்பிக்கை நமக்கு உண்டு (1 தெச.4:13-18). நம்மை இரட்சித்த தேவ கிருபையானது பரிசுத்தமாக வாழ நமக்குப் போதித்து ஆனந்த பாக்கியத்திற்கு எதிர்பார்த்து காத்திருக்கும்படி நம்மைப் பயிற்றுவிக்கிறது. நாம் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறோமா? ”இரண்டாம் வருகையைப் பற்றிய உபதேசமானது இந்த உலக நாடகம் என்று முடியும் என்பது நமக்குத் தெரியாது, அறிந்து கொள்ளவும் முடியாது என நமக்குப் போதிக்கிறது. எந்த நேரத்திலும் திரை கீழே இறக்கப்பட்டு நாடகம் முடிவுக்கு வரலாம்: இந்த பத்தியை நீங்கள் வாசித்து முடிப்பதற்கு முன்பே கூட என்று சொல்லலாம்” என C.S.லூயிஸ் கூறுகிறார். கிறிஸ்து இன்று வந்தால், நாம் அவருடன் இருப்போமா? என்பதை நம்மை நாமே ஆராய்ந்து பார்ப்போம். நாம் ஆனந்த பாக்கியத்தை எதிர் நோக்கி காத்திருக்கும்போது, புகழ்பெற்ற பாமாலை ஆசிரியர் ஃபேனி கிராஸ்பி எழுதியது போல, “Watching and waiting, looking above, Filled with His goodness, lost in His love” (பரலோகத்தை நோக்கிப் பார்த்து, எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்து, அவருடைய நன்மைகளினால் நிரப்பப்பட்டவர்களாக, அவருடைய அன்பில் மூழ்கினவர்களாக” நாம் வாழ்வோம்.

பயன்பாடு:  இயேசுவின் இரண்டாம் வருகையைப் பற்றி வேதாகமம் திரும்பத் திரும்ப பலமுறை கூறுகிறது. இயேசுவைப் பின்பற்றுகிற நான், அவர் எப்பொழுது வந்தாலும், அவருக்காக ஆயத்தமாக இருக்க வேண்டும். கிறிஸ்துவே என் ஆனந்த பாக்கியம் ஆவார்.  அவர் வரும்போது, நான் ”அவரோடேகூட மகிமையிலே” வெளிப்படுவேன்; நான் அவருக்கு ஒப்பாக இருப்பேன் (கொலோ.3:4, 1 யோவான் 3:2). இந்த உலகிலும் பரலோகத்திலும், இயேசுவுக்கு ஒப்பாக இருத்தல் என்பது எவ்வளவு ஆசீர்வாதமான ஒரு காரியம்! நான் இயேசுவுக்காக பொறுமையுடனும் எதிர்பார்ப்புடனும் காத்திருக்கிறேன்.

ஜெபம்: சர்வ வல்ல தேவனே, என்னை இரட்சித்த உம் கிருபை மற்றும் அபரிதமான அன்புக்காக உமக்கு நன்றி. இயேசுவே, பாவ சோதனைகளுக்கும் உலக இச்சைகளுக்கும் “இல்லை” என்று சொல்லி, பரிசுத்தமாக வாழ எனக்கு உதவியருளும். பரிசுத்த ஆவியானவரே, கிறிஸ்துவினால் கட்டுப்படுத்தப்படுகிற ஒரு வாழ்க்கையை இயேசுவின் வருகை சமீபம் என்ற எதிர்பார்ப்புடன்  வாழ என்னைப் பலப்படுத்தியருளும். ஆமென்.

அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

Day – 307

No comments: