வாசிக்க: எசேக்கியேல் 47,48; சங்கீதம் 146; 1 பேதுரு 2
வேத வசனம்: 1 பேதுரு 2: 1. இப்படியிருக்க, கர்த்தர் தயையுள்ளவரென்பதை நீங்கள்
ருசிபார்த்ததுண்டானால்,
2. சகல துர்க்குணத்தையும், சகலவித கபடத்தையும், வஞ்சகங்களையும், பொறாமைகளையும், சகலவித புறங்கூறுதலையும் ஒழித்துவிட்டு,
3. நீங்கள் வளரும்படி, புதிதாய்ப் பிறந்த குழந்தைகளைப்போல, திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின்மேல் வாஞ்சையாயிருங்கள்.
கவனித்தல்: மனித வளர்ச்சி என்பது
பிறப்பிற்கும் முதிர்ச்சி அடைதலுக்கும் இடையே படிப்படியாக நடைபெறுகிற ஒரு காரியம்
ஆகும். ஒரு குழந்தை வளரும்போது, அதன் மரபியல், ஊட்டச்சத்து மற்றும் வளரும் சூழ்நிலை ஆகியவைகளைப் பொறுத்து நிலையான மற்றும் ஒருபோதும் பின்னோக்கிச் செல்ல முடியாத வளர்ச்சியை உடையதாக வளருகிறது. குழந்தைப் பருவம் மற்றும் பதின்ம வயதுப்
பருவத்திற் இடையே ஒரு பிள்ளை வளருகிற வேகமானது மிகவும் அதிகமாக இருக்கும். ஆயினும், ஒரு குறிப்பிட்ட வயதை அடைந்த பிறகு மனித சரீரம் வளர்ச்சி அடைவதில்லை. மனிதனுடைய ஆவிக்குரிய வாழ்க்கை மற்றும் வளர்ச்சியும் மனித சரீர வளர்ச்சியுடன் பல ஒற்றுமைகளையும் தனித்துவமான
வித்தியாசங்களையும் கொண்ட ஒரு தனித்துவமான ஒரு காரியம் ஆகும். இங்கே, " சத்தியத்திற்குக் கீழ்ப்படிந்து" தங்களைத் சுத்திகரித்துக் கொண்டு ”என்றென்றைக்கும் நிற்கிறதும்
ஜீவனுள்ளதுமான தேவவசனமாகிய அழிவில்லாத வித்தினாலே” மறுபிறப்பின் அனுபவத்தைப்
பெற்றவர்களுக்கு அப்போஸ்தலனாகிய பேதுரு எழுதுகிறார் (1 பேதுரு 1: 22-23). ஒரு குழந்தைக்கு வளர்ச்சி தேவையானதாக இருப்பது போல, இந்த கிறிஸ்தவர்கள் தங்கள் ஆன்மீக வாழ்க்கையில் வளர வேண்டும்.
ஆகவே, “சகல துர்க்குணத்தையும், சகலவித கபடத்தையும், வஞ்சகங்களையும், பொறாமைகளையும், சகலவித புறங்கூறுதலையும்” விட்டு விடுங்கள் என்று பவுல் அவர்களுக்கு அறிவுரை கூறுகிறார். தேவ பக்தியற்ற
இக்காரியங்கள் ஒரு கிறிஸ்தவனின் வாழ்வில் இருக்க தகுதியற்றவை. அதன் பின், ஒருவரின்
ஆவ்க்க்குரிய வளர்ச்சிக்கு ”களங்கமில்லாத திருவசனமாகிய ஞானப்பால்” அவசியம் எனக் கூறுகிறார்.
புதிதாய் பிறந்த குழந்தைகளைப் போல, கிறிஸ்தவர்கள் தேவனுடைய வார்த்தையின் மேல் வாஞ்சையாக
இருக்க வேண்டும். நாம் மிகவும் விரும்பும் எந்த உணவையும் விட தேவனுடைய
வார்த்தையானது மிகவும் விரும்பத்தக்கதும், பலனுள்ளதும் ஆகும். ஒரு குழந்தை உணவு
உண்ண மறுக்கும் போது, சிறிதளவு உணவை அந்த குழந்தையின் வாயில் வைத்து உணவை சாப்பிட்டுப்
பார்க்கும்படி ஒரு தாய் செய்வார். இங்கே, தேவனுடைய வார்த்தையை விசுவாசிகள் வாஞ்சிக்க
வேண்டும் என உற்சாகப்படுத்துவதற்காக அக்காட்சியை பேதுரு இங்கு நம் முன் வைக்கிறார்.
கர்த்தவர் நல்லவர் என்பதை அவர்கள் ருசி பார்த்திருக்கிறார்கள் என்பதை அவர்களுக்கு
நினைவுபடுத்துகிறார். மனித சரீர வளர்ச்சியைப்
போலல்லாது, நம் வயது என்னவாக இருந்தாலும், கிறிஸ்துவில் நம் ஆன்மீக வாழ்வில் நாம் தொடர்ந்து
வளர முடியும்.
கர்த்தராகிய இயேசுவை
தங்கள் இரட்சகராக ஏற்றுக் கொண்ட பின்னர் எதுவுமே செய்யத் தேவையில்லை என்று பல கிறிஸ்தவர்கள்
நினைக்கின்றனர். நம் இரட்சிப்பில் நிலைத்திருக்கவும், வளரவும், தேவனுடைய வார்த்தையால்
நம் ஆன்மீக வாழ்க்கையை போஷித்து, வளப்படுத்த வேண்டும். பின்வரும் கேள்விகளைக் கேட்டு
நம்மை நாமே ஆராய்ந்து பார்ப்போமாக: நம் ஆன்மீக, கிறிஸ்தவ வாழ்வில் வளருகிறோமா? தேவனுடைய
வார்த்தையை மிகவும் விருப்பத்துடன் வாஞ்சிக்கிறோமா? தேவனுடைய வார்த்தைக்கு நாம் உரிய
இடம் கொடுக்கவில்லை எனில், நம் கிறிஸ்தவ ஆன்மீக வாழ்வில் எந்தவிதமான வளர்ச்சியும்
இருக்காது. “பாவமானது வேதாகமத்தில் இருந்து உங்களை விலக்கி வைக்கும், இல்லையேல் இந்தப்
புத்தகம் பாவத்தில் இருந்து உங்களை விலக்கிப் பாதுகாக்கும்” என ஜான் பன்யன் கூறுகிறார்.
அனேக கிறிஸ்தவர்கள் தேவனுடைய வார்த்தையினால்
பலப்படுத்தப் படாதபடியினாலேயே, உலகப் பிரகாரமான சோதனைகளுக்கு எதிராக எதிர்த்து நிற்க
முடியாமல் வீழ்ந்து விடுகிறார்கள். நாம் தேவனுடைய வார்த்தையை வாஞ்சித்து அனுதினமும்
அதை வாசித்து, அது நமக்குத் தரும் ஊட்டத்தில் நாம் வளருகிறோமா? நம்மை நாமே ஆராய்ந்து, சரிசெய்து
கொள்வோம்.
பயன்பாடு: தேவனுடைய வார்த்தையானது என் மனதைப் புதிதாக்கி,
என் ஆத்துமாவிற்கு புத்துணர்ச்சியை அளிக்கிறது. தேவனுடைய வார்த்தையானது என்னை எச்சரித்து,
பாவம் செய்யாதபடிக்கு என்னைப் பாதுகாக்கிறது. தேவனுடைய வார்த்தையானது பிசாசுக்கு எதிராக
நிற்பதற்கு எனக்கு பலத்தைத் தருகிறது; அது ஆவியின் பட்டயம் ஆகும். அனுதினமும், நான்
என் ஆவிக்குரிய வாழ்வில் வளர, வாழ தேவனுடைய வார்த்தை எனக்கு அவசியம் தேவை. நான் தினமும்
வேதத்தை வாசித்து, தியானித்து, அது சொல்கிறபடி வாழ்வேன்.
ஜெபம்: தந்தையாகிய தெய்வமே, ஒரு போதும் தவறாத, ஆத்துமாவை
உயிர்ப்பிக்கிற, என் கேள்விகள் எல்லாவற்றிற்கும் பதிலளிக்கிற தேவனுடைய வார்த்தையாகிய
வேதாகமத்திற்காக உமக்கு நன்றி. இயேசுவே, உம் வார்த்தைகளை அனுதினமும் கேட்டு, அதன்படி
வாழ எனக்கு உதவியருளும். பரிசுத்த ஆவியானவரே, இன்றும் என்றும் தேவனுடைய வார்த்தையின்
வல்லமையால் என் ஆன்மீக வாழ்வில் நிலைத்திருக்கவும், வளரவும் உம் ஞானத்தையும் வல்லமையையும்
தந்தருளும். ஆமென்.
- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573
Day – 329
No comments:
Post a Comment