வாசிக்க: எசேக்கியேல் 19,20; சங்கீதம் 132; எபிரேயர் 6
வேத வசனம்: எபிரேயர் 6: 1. ஆகையால், கிறிஸ்துவைப்பற்றிச் சொல்லிய மூல உபதேச வசனங்களை நாம்
விட்டு, செத்த கிரியைகளுக்கு நீங்கலாகும் மனந்திரும்புதல், தேவன்பேரில் வைக்கும் விசுவாசம்,
2. ஸ்நானங்களுக்கடுத்த உபதேசம், கைகளை வைக்குதல், மரித்தோரின் உயிர்த்தெழுதல், நித்திய நியாயத்தீர்ப்பு என்பவைகளாகிய அஸ்திபாரத்தை மறுபடியும் போடாமல், பூரணராகும்படி கடந்துபோவோமாக.
3. தேவனுக்குச் சித்தமானால் இப்படியே செய்வோம்.
கவனித்தல்: குழந்தைகள் மிகவும் எளிய
பாடங்களில் இருந்து துவங்கி, படிப்படியாக கற்றுத் தேறுகிறார்கள். அவர்கள் வளர வளர,
அவர்களின் வயது மற்றும் வகுப்புக்கு ஏற்றபடி அவர்கள் கற்றுக் கொள்ளும் பாடங்கள் கடினமானவைகளாக
இருக்கும். ஒரு குழந்தை கற்றுக் கொள்வதில் வளரவில்லை எனில், அதன் பெற்றோருக்கு அது
கவலை தருகிற ஒரு விஷயம் ஆகும். இங்கே யூதக் கிறிஸ்தவர்கள் குறித்த தன் கவலையை நூலாக்கியோன்
வெளிப்படுத்துகிறார். எபிரேயர் 5:11-14 வசனங்களில், அவர்கள் ஆவிக்குரிய வாழ்வில் அவர்கள் வளர்ச்சி அடையாமல்
இருப்பதையும், தேவனுடைய வார்த்தையைப் பற்றிய சத்தியங்களைப் புரிந்து கொள்ள ஆர்வம்
இல்லாமல் இருப்பதையும் குறித்து கடிந்து கொள்கிறார். காலத்தைப் பார்த்தால், போதகர்களாக
இருக்க வேண்டிய அவர்களோ, தங்கள் ஆவிக்குரிய நிலையில் இன்னும் ஆரம்ப நிலையிலேயே இருந்தனர்.
ஆகவே, விசுவாசிகள் வளர்ந்து, தங்கள் கிறிஸ்தவ வாழ்வில் முதிர்ச்சி பெற, பூரணராகும்படி
நூலாசிரியர் அழைப்பு விடுக்கிறார்.
எபிரேயர் 6ஆம் அதிகாரத்தில் யூத மார்க்கத்திற்கும்
கிறிஸ்தவத்திற்கும் இடையே பொதுவான ஆறு அடிப்படை உபதேசங்களைப் பற்றிய பட்டியலை நாம்
காண்கிறோம்: மனம் திரும்புதல், தேவன் மேல் விசுவாசம், ஞானஸ்நானம், கைகளை வைக்குதல்,
மரித்தோரின் உயிர்த்தெழுதல், மற்றும் நித்திய நியாயத்தீர்ப்பு. யூதக் கிறிஸ்தவர்களுக்கு
இந்த உபதேசங்கள் நன்கு அறிமுகமானவை. இந்த பொதுவான உபதேசங்கள் அவர்கள் தேவன் மேல் விசுவாசம்
வைப்பதற்கான ஆரம்பப் புள்ளியாக இருந்திருக்கலாம். ஆயினும், அவர்கள் அப்பொதுவான உபதேசங்களிலேயே
இருந்து கொண்டு இருப்பார்கள் எனில் முதிர்ச்சி அடைவதற்கு தேவையான வளர்ச்சியைப் பெறாதவர்களாகவே
இருப்பார்கள். அவர்கள் நியாயப்பிரமாணத்தில் இருந்து விசுவாசத்தினால் கிருபையின் கீழ்
வாழ்வதற்கு முன்னேற வேண்டும். அவர்கள் முன்னோக்கிச் செல்லவில்லை எனில், உபத்திரவங்களுக்குப்
பயந்து அவர்கள் கிறிஸ்துவிடம் வருவதற்கு முன்பு இருந்த தங்கள் பழைய நிலைக்கு வழுவி
சென்றுவிடுவார்கள். ”பூரணராகும்படி கடந்துபோவோமாக” என்று எபிரேய நிருப ஆக்கியோன் அழைப்பு விடுக்கிறார். முன்னோக்கிச் செல்லுதலும் கிறிஸ்துவில் வளருதலும்
ஒவ்வொரு கிறிஸ்தவருக்கு அவசியமானவை ஆகும். ”நீங்கள் முன் நோக்கிச் செல்லவில்லை எனில்,
நீங்கள் பின்வாங்குகிறீர்கள் (பின்னோக்கிச் செல்லுதல்)” என்று ஒருவர் மிகச் சரியாக
சொல்லி இருக்கிறார். ”நான் அடைந்தாயிற்று, அல்லது முற்றும் தேறினவனானேன்” என்று நாம் சொல்ல முடியாது; ”கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் (நம்மை) அழைத்த பரம
அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கி” நாம் ஆசையாக முன்னேறிச் செல்ல வேண்டும் (பிலி.3:12-14).
யூதக் கிறிஸ்தவர்கள் “கேள்வியில் மந்தமுள்ளவர்களாக” கற்றுக்கொள்ள ஆர்வம் இல்லாதவர்களாக இருந்தனர். அவர்கள்
நீதியின் வசனத்தைக் கற்றுக் கொள்ளவும், நன்மை தீமை இன்னதென்று பகுத்தறியத்தக்கவர்களாகவும்
அவர்கள் முழு மனதுடன் முதிர்ச்சியடைதலை நோக்கி
முன்னேறுவதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டியதாயிருந்து (எபி.5:13). மூன்றாம் வசனமானது,
முதிர்ச்சியை நோக்கிய நம் பயணத்திற்கு ஒரு நிபந்தனையை நம் முன் வைக்கிறது. அது தேவனுடைய
வல்லமையைச் சார்ந்து செய்யப்பட வேண்டும். நம் கிறிஸ்தவ வாழ்க்கை தேவனை சார்ந்து வாழ்கிற
வாழ்க்கை ஆகும். தேவனே நம் ஆவிக்குரிய முதிர்ச்சிக்கான ஆதாரம் ஆக இருக்கிறார். ஸ்பர்ஜன் அவர்கள் சொல்வது போல, “நாம் தொடர்ந்து
முன்னோக்கிச் செல்ல வேண்டும். கிறிஸ்தவ வாழ்வில் ஆவிக்குரிய நிலையில் வளராமல் ஒரே
இடத்தில் இருத்தல் என்பது இல்லவே இல்லை. நாம் பின்னோக்கிச் செல்லத் துணியாதிருப்போமாக.”
பயன்பாடு: எல்லா கலாச்சாரங்கள் மற்றும்
மதங்களுக்கிடையே பொதுவான பல விஷயங்கள் இருக்கின்றன. அப்பொதுவான விஷயங்கள் சுவராசியமானவையாகவும்,
நம் பரஸ்பர உரையாடல்களுக்கும் மற்றும் சிருஷ்டிகராகிய தேவனை விசுவாசிப்பதற்கும் நல்ல
துவக்கப்புள்ளியாக இருக்கின்றன. ஆயினும், என் இலக்கு கிறிஸ்துவை நோக்கியதாக இருக்க
வேண்டும். தேவனைச் சார்ந்து, நான் முதிர்ச்சியடைய முன்னேறிச் செல்ல வேண்டும். பின்னோக்கிப்
பார்த்தலோ, ஒரே இடத்திலேயே இருந்து கொண்டிருத்தலோ இனி இல்லை. விசுவாசத்திலும் அன்பிலும்
வளரவும், முதிர்ச்சியடையவும் நான் கிறிஸ்துவைப் பின்பற்றுவேன்.
ஜெபம்: தந்தையாகிய தெய்வமே, கிறிஸ்துவுடன்
நான் இருக்கும்படியான உம் பரிசுத்த பரலோக அழைப்பிற்காக உமக்கு நன்றி. கர்த்தாவே, நான் பெற்றுக் கொண்ட அழைப்புக்கு
ஏற்ற ஒரு வாழ்க்கையை வாழ எனக்கு உதவுங்கள். பரிசுத்த ஆவியானவரே, ”கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை
நோக்கி” தொடர்ந்து முன்னேறிச் செல்ல என்னைப் பலப்படுத்தியருளும்.
ஆமென்.
- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573
Day – 315
No comments:
Post a Comment