வாசிக்க: எசேக்கியேல் 35,36; சங்கீதம் 140; யாக்கோபு 1
வேத வசனம்: யாக்கோபு 1: 19. ஆகையால், என் பிரியமான சகோதரரே, யாவரும் கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும், கோபிக்கிறதற்குத்
தாமதமாயும் இருக்கக்கடவர்கள்;
20. மனுஷருடைய கோபம் தேவனுடைய நீதியை நடப்பிக்கமாட்டாதே.
கவனித்தல்: மன உறுதி, நினைத்ததை செய்து
முடிக்கும் ஆற்றல் ஆகியவற்றைப் பெறவும், மற்றும் உலகப் பிரகாரமான கவர்ச்சிகளை எதிர்த்து
நிற்பதற்காக இந்தியாவில் மவுன விரதம் சிலர்
இருப்பதுண்டு. பொதுவாக, அவர்கள் மற்றவர்களிடம் இருந்து தங்களைத் தனிமைப்படுத்திக்
கொண்டு, தங்கள் மவுன விரதத்தை அனுசரிப்பதற்காக எவருடனும் பேச மாட்டார்கள். ஆயினும்,
அவர்களின் மவுன விரதம் முடிந்த உடனே, அவர்கள் முன்பு இருந்த வழக்கமான வாழ்விற்கு திரும்பிவிடுவார்கள்.
இப்படிப்பட்ட துறவற பழக்கங்கள் சில பலன்களைக் கொடுத்தாலும், அவை தற்காலிகமானவையே. யாக்கோபு
1:19இல், கிறிஸ்தவர்கள் அடிக்கடி குறிப்பிடும் மூன்று விதிகளை நாம் வாசிக்கிறோம். நம்
அனுதின வாழ்வில் இவைகளைக் கைக்கொண்டால், அவை அனேக
நன்மைகளைக் கொடுக்கும் என்பதில் சந்தேகமே
இல்லை. ஆயினும், நம்மில் பலர் இந்த வசனம் சொல்லப்பட்ட சூழ்நிலையை கவனிக்கத்
தவறிவிடுகிறோம். தேவனுடைய் வார்த்தையைப் பெறும் மனப்பான்மை தொடர்பாக, இந்த மூன்று
அறிவுரைகளையும் சத்திய வசனத்தினாலே மறுபிறப்படைந்தவர்களுக்கு முதலாவதாக யாக்கோபு எழுதுகிறார்.
யாக்கோபு 1:19 முழு நிருபத்திற்கும் ஒரு சுருக்கமான உரையை தருவதாக சில அறிஞர்கள் நம்புகின்றனர்:
கேட்பதற்கு தீவிரமாக இருத்தல் (யாக்.1:21-2:26); பேசுகிறதற்கு பொறுமை (யாக்.3:1-18);
கோபிக்கிறதற்கு தாமதம் (யாக்.4:1-5:18). இந்த மூன்று விதிகளையும் நாம் முறையாகப் பின்பற்றினால்,
இவை தேவனுடைய வார்த்தையைப் பெற்றுக் கொள்ள நமக்கு உதவுகின்றன.
பழைய ஏற்பாட்டு ஞான நூல்களில் ஒன்றாகிய நீதிமொழிகள்
புத்தகத்தில், கட்டுப்பாடற்ற வார்த்தைகளினால் உண்டாகும் ஆபத்துகளைப் பற்றி எச்சரிக்கிற
மற்றும் கட்டுப்பாடான பேச்சுகளினால் வரும் நன்மைகளைப் பற்றியும் சொல்கிற அனேக வசனங்களை
நாம் காண்கிறோம் (நீதி.10:19; 13:3; 17:28; 29:20). ”நாம் அதிகம் கேட்டு, கொஞ்சமாகப் பேசவேண்டும் என்பதற்காகவே
கடவுள் நமக்கு இரண்டு காதுகளையும் ஒரு வாயையும்
கொடுத்திருக்கிறார்” என்று ஒரு பழங்கால பழமொழி கூறுகிறது. நாம் வேதாகமத்தை வாசிக்கும்
போது, தேவனுக்குச் செவி கொடுக்கிறோமா? நாம் அன்றைய நாளுக்கான வேதவாசிப்புப் பகுதியை
வேகமாக வாசித்து முடிக்கிறோமா? அல்லது தேவன் நம்மிடம் சொல்வதைக் கேட்பதற்கு கவனம்
செலுத்துகிறோமா? நாம் எதைக் கேட்கிறோம், எப்படிக் கேட்கிறோம் என்ற இரண்டுமே தேவனுக்கு
முக்கியமானவை ஆகும் (மாற்கு 4:24; லூக்கா 8:18). வாரன் வியர்ஸ்பி என்ற தேவ மனிதர்
சொல்வதைப் போல, “ஒரு வேலைக்காரன் தன் எஜமானரின் சத்தத்திற்கு உடனே செவிகொடுப்பது போல,
மற்றும் ஒரு தாய் தன் குழந்தையின் சிறிய சிணுங்கல் சத்தம் கேட்டும் விரைந்தோடுவது
போல, தேவன் சொல்கிறதை உடனே கேட்பதற்கு தீவிரமானவராக ஒரு விசுவாசி இருக்க
வேண்டும்.”
ஜனங்கள் மற்றவர்கள்
சொல்வதைக் கேட்பதற்கு பொறுமையற்றவர்களாக இருக்கிறார்கள். செவிகொடுப்பதற்குப் பதிலாக,
அவர்கள் பேசவோ அல்லது என்ன பேச வேண்டும் என்று யோசித்துக் கொண்டோ இருக்கிறார்கள்.
எல்லோரும் பேசிக்கொண்டிருந்தால், ஒருவருக்கும் கேட்காது, கேட்க மாட்டார் என்பதை நாம்
அறிந்து கொள்ள வேண்டும். ஜெபிக்கும்போது, அநேக கிறிஸ்தவர்கள் தேவன் சொல்வதைக் கேட்பதில்லை
அல்லது தேவன் அவர்களுடன் பேசும்படி காத்திருப்பதில்லை. நாம் தேவனுடன் பேசுவதைக் காட்டிலும் அதிகமாக, தேவனுக்கு செவிகொடுக்க
வேண்டும். தாங்கள் பேசுவது கேட்கப்படவில்லை என்று
உணரும்போது அல்லது தேவனுடைய வார்த்தை அவர்களின் பாவ நிலையை எதிர்த்து உணர்த்தும் போது, ஜனங்கள் கோபமடைகின்றனர். ”நம்
கோபம் மற்றும் சினம் ஆகியவை, மற்றவர்களின் நலனை மையமாகக் கொண்டவர்களிடம் இருந்து அல்ல,
பெரும்பாலும சுயத்தை மையமாகக் கொண்டவர்களாக இருப்பதில் இருந்தே வருகிறது என பாஸ்டர் டேவிட் கூஜிக் (David Guzik)) கூறுகிறார்.
நாம் கேட்பதற்கு தீவிரமாயும், பேசுகிறதற்கு பொறுமையாகவும் இருக்கக் கற்றுக் கொள்ளும்போது, நாம் கோபம் கொள்ள தாமதிக்கிறவர்களாக
மாறிவிடுகிறோம். மனித உணர்வின் வெளிப்பாடான கோபத்தை நாம் ஒருபோதும் வெளிப்படுத்தக்
கூடாது என வேதாகமம் கூற வில்லை. ”நீங்கள் கோபங்கொண்டாலும்
பாவஞ்செய்யாதிருங்கள்; சூரியன்
அஸ்தமிக்கிறதற்கு முன்னாக உங்கள் எரிச்சல் தணியக்கடவது; பிசாசுக்கு இடங்கொடாமலும் இருங்கள்” என்று எபேசியர்
4:27-27இல் பவுல் கூறுகிறார். நம் கோபமானது மாம்சத்தின் கிரியையாக மாறும்போது, நாம்
தேவனுடைய இராஜ்ஜியத்தில் பிரவேசிப்பதை அது தடுத்து விடும் (கலா.5:20, 21). நாம் தேவனுடைய
வார்த்தையைப் பெற்றுக் கொள்ள திறந்த மனதுடையவர்களாக இருக்க வேண்டும் என யாக்கோபு
1:19-20 ல் உள்ள வேத பகுதியானது சுருக்கமாகக் கூறுகிறது.
பயன்பாடு: நான் தேவனுடைய வார்த்தையை
அசட்டை செய்யக் கூடாது. தேவன் அனுதினமும் என்னுடன் பேச விரும்புகிறார். அவர் பரிசுத்த
வேதாகமம் மூலமாக என்னுடன் பேசுகிறார். நான்
வேதாகமத்தை வாசிக்கத் திறக்கும்போது, நான் தேவனுடைய வார்த்தையைக் கேட்பதற்கு திறந்த
மனதுள்ளவனாக இருக்க வேண்டும். தேவன் என்னுடன் பேசும்போது, எந்த சாக்குப் போக்கும் சொல்லாமல் நான் கீழ்ப்படிவேன்.
ஜெபம்: அன்பின் தேவனே, வேதாகமம் மூலமாக என்னுடன் பேசுவதற்காக
உமக்கு நன்றி. கர்த்தாவே, ”நவமான இருதயத்தையும் புதிய ஆவியையும்” எனக்குத் தாரும்.
”கல்லான இருதயத்தை…எடுத்துப்போட்டு, சதையான இருதயத்தை” எனக்குத் தாரும் (எசேக்கியேல். 36:26). பரிசுத்த ஆவியானவரே,
தேவனுடைய வார்த்தையைக் கேட்க என் இருதயத்தைத்
திறந்தருளும், அவைகளுக்குக் கீழ்ப்படிய உம் பலத்தை எனக்குத் தந்தருளும். ஆமென்.
- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573
Day – 323
No comments:
Post a Comment