வாசிக்க: எசேக்கியேல் 17,18; சங்கீதம் 131; எபிரேயர் 5
வேத வசனம்: எபிரேயர் 5: 7. அவர் மாம்சத்திலிருந்த நாட்களில், தம்மை மரணத்தினின்று இரட்சிக்க வல்லமையுள்ளவரை நோக்கி, பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் விண்ணப்பம்பண்ணி, வேண்டுதல்செய்து, தமக்கு உண்டான பயபக்தியினிமித்தம் கேட்கப்பட்டு,
8. அவர் குமாரனாயிருந்தும் பட்டபாடுகளினாலே
கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்(டார்).
கவனித்தல்: பழைய ஏற்பாட்டின்படி, பிரதான ஆசாரியன் மட்டுமே
மகா பரிசுத்த ஸ்தலத்தில் பிரவேசித்து ஜனங்களுக்காக வேண்டுதல் செய்யவும், அவர்களுக்கு
பாவ நிவாரணத்தையும் உண்டு பண்ண முடியும். எபிரேயர் நான்காம் அதிகாரத்தில் இருந்து,
இயேசுவின் ஆசாரியத்துவத்தின் மேன்மையைப் பற்றி நூலாசிரியர் சித்தரிக்கிறார். பிரதான
ஆசாரியன் ஜனங்களுக்காக பலியிட்டு, வேண்டுதல் செய்வான். ஆயினும், அதைச் செய்வதற்கு
முன்பு, அவன் தன் பாவங்களுக்காக பலிகளைச் செலுத்துவான். ஆனால் இயேசுவுக்கு அவருடைய
பாவங்களுக்காக பலி செலுத்த வேண்டியதில்லை, ஏனெனில் அவர் பாவமற்றவர். இயேசுவானவர் ”எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியர்” ஆவார் (எபி.4:15). அப்படியானால், இயேசு ஏன் ஜெபித்தார்?
இயேசு கடவுள் என்றால், அவர் யாரிடம் ஜெபித்தார்? என்று சிலர் கேட்கின்றனர். ஏழாம்
வசனத்தின் ஆரம்ப சொற்களில் நாம் இதற்கான பதிலைக் காண்கிறோம். “அவர்
மாம்சத்திலிருந்த நாட்களில்” என்பது இயேசு இந்த உலகத்தில் வருவதற்கு முன்பே
இருந்த அவரது தெய்வீகத்தையும் மற்றும் மனித இயல்பையும் குறிக்கிறது.
இயேசு பல்வேறு சந்தர்ப்பங்களில்
ஜெபித்தார். ஆனால், இங்கு “விண்ணப்பம்பண்ணி, வேண்டுதல்செய்து” என்று வருவது இயேசுவின் சிலுவை மரணத்திற்கு முன்பு கெத்செமனே எனும் இடத்தில் செய்த ஜெபத்தைக் குறிக்கிறது (மத்.26:36-39;
லூக்கா 22:42-44). இயேசு எல்லாருக்காகவும் தம்மைத்தாமே பாவ நிவாரண பலியாக ஒப்புக்
கொடுப்பதற்கு முன்பு முழு மனுக்குலத்திற்காகவும் ஜெபித்தார். எல்லா மனிதர்களின் பாவத்தை
தன் மேல் சுமக்கும் வேதனையானது அவரை ”பலத்த சத்தத்தோடும்
கண்ணீரோடும்” ஜெபிக்கப் பண்ணியது. இயேசு மரணத்தில் இருந்து தப்பிப்பதற்காக அல்லது மரணத்தை
தவிர்ப்பதற்காக ஜெபிக்க வில்லை. மாறாக, மரித்த நிலையிலேயே தொடர்ந்து இராதபடிக்கு ஜெபித்தார்.
வேறுவிதமாகச் சொல்வதானால், இயேசுவின் ஜெபமானது அவருடைய உயிர்த்தெழுதலைப் பற்றியதாக
இருந்தது. அவர் முற்றிலுமாக தம் பரம பிதாவின் சித்தத்திற்கு தன்னை ஒப்புக்கொடுத்தார்.
அவருடைய ஜெபம் கேட்கப்பட்டது. நம் பாவங்களுக்கான விலை சிலுவையில் செலுத்தி தீர்க்கப்பட்டது.
மேலும், இயேசுவை தேவன் மரித்தோரிலிருந்து உயிரோடே எழுப்பினார். நம் பிரதான ஆசாரியராகிய
இயேசு, நமக்காக ஜெபிக்க மட்டுமல்ல, மனிதர்களின் பாவங்களுக்கான பரிகார பலியாக தம்மைத்
தாமே ஒரே தரம் ஒப்புக் கொடுத்தார். இயேசு கீழ்ப்படிதலைக்
கற்றுக்கொண்டார் என்றால் அவர் முன்பு கீழ்ப்படியாதவராக இருந்தார் என்று அர்த்தம்
அல்ல. மாறாக, பாடுகளின் மத்தியிலும் தேவனுக்குக் கீழ்ப்படியும் அவருடைய அனுபவத்தைக்
குறிக்கிறது. ”அவர்(இயேசு) மனுஷரூபமாய்க்
காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்” என்று பிலிப்பியர் 2:8 கூறுகிறது.
பாவமற்ற பரிசுத்த மகா பிரதான ஆசாரியர் நமக்கு இருக்கிறார். ”ஆதலால், நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில்
சகாயஞ்செய்யுங்கிருபையை அடையவும், தைரியமாய்க்
கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம்” (எபி.4:16).
பயன்பாடு: ” பிள்ளைகள்
மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க, அவரும் அவர்களைப்போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார்” என்று எபிரேயர் 2:14 கூறுகிறது. பசி, பாடுகள் மற்றும் பிரியமானவர்களின் இழப்பினால்
உண்டாகும் வேதனை, போராட்டங்கள், மற்றும் பாவச் சோதனைகளை இயேசு அறிந்திருக்கிறார்.
ஆயினும் அவர் பாவமற்றவராக இருக்கிறார். நான் தேவனுக்குக் கீழ்ப்படியும் போது, நான்
அவருடைய வல்லமையை என் வாழ்வில் அனுபவிக்கிறேன். ஜெபம் மற்றும் கீழ்ப்படிதலில் நான்
இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்ற வேண்டும்.
ஜெபம்: தந்தையாகிய தெய்வமே, எங்களை இரட்சிக்க உம் குமாரனாகிய
இயேசுவை அனுப்பிய உம் அன்புக்காக நன்றி. இயேசுவே, எப்பொழுதும் ஜெபிக்கவும், உம் வார்த்தைகளின்
படி வாழ அனுதினமும் எனக்கு உதவியருளும். ஆமென்.
- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573
Day – 314
No comments:
Post a Comment