வாசிக்க: எசேக்கியேல் 29,30; சங்கீதம் 137; எபிரேயர் 11
வேத வசனம்: எபிரேயர் 11: 6. விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும்
விசுவாசிக்கவேண்டும்.
கவனித்தல்: மலை ஏறுதல் என்பது சாகசம் நிறைந்த மற்றும் ஆபத்தான
பொழுது போக்கு ஆகும். ஆயினும், இது அனேகரது கவனத்தை ஈர்க்கிறது. உலகின் மிக உயரமான
மலையான எவெரெஸ்ட் மலையின் உச்சியிலுள்ள சிகரத்திற்குச் செல்வது அனேக மலை ஏறுபவர்களின்
கனவு ஆக இருக்கிறது. , அனேக சரீரப்பிரகாரமான
முன்னேற்பாடுகள், உடற்பயிற்சிகள், மற்றும் நல்ல ஆரோக்கியம் ஆகியவை ஒருவர் மலை ஏறுவதற்கு
முன்பு தேவையானதாக இருக்கிறது. மறுபுறம், விசுவாசப் பயணம் என்பது மலை ஏறுவதை விட சாகசம்
நிறைந்ததும், அனைவருக்கும் பாதுகாப்பானதுமாக இருக்கிறது. மிகவும் பலவீனமான ஒருவர்
கூட விசுவாசப் பயணத்தில் இணைந்து கொள்ளலாம். தங்கள் பலத்தை இழப்பதற்குப் பதிலாக,
அனேகர் விசுவாசப்பயணத்தின் வல்லமையையும் பலத்தையும் பெற்றுக் கொள்கிறார்கள். தேவனை
நம்பி, அவருக்காக மகத்தான காரியங்களைச் செய்து முடித்த விசுவாச வீரர்கள்களின் பட்டியலை எபிரேயர் 11ம் அதிகாரம் நமக்குத் தருகிறது.
இந்தப் பட்டியலில் பல்வேறு விதமான மனிதர்களை நாம் காண்கிறோம். இந்த தேவ மனிதர்கள்
அனைவரின் வாழ்க்கையிலும் விசுவாசமானது ஒரு பொதுவான காரியமாக இருந்தது. ”விசுவாசத்தினாலே,”
அவர்களால் தங்கள் காலத்தில் நினைத்து பார்க்க முடியாத, நம்ப முடியாத சாதனைகளை செய்ய
முடிந்தது.
கடந்த
நூற்றாண்டில் வாழ்ந்த மாபெரும் மிஷனெரிகளில் ஒருவரான ஜான் பேட்டன் என்பவர், “விசுவாசம்
என்பது உங்கள் எடை முழுவதையும் தேவன் மீது வைத்து இளைப்பாறுதலடைவது” என கூறுகிறார்.
தேவன் மீதான விசுவாசம் நம் கிறிஸ்தவ வாழ்வின் அஸ்திபாரம் ஆகும். விசுவாசத்தினாலேயே,
நாம் இரட்சிப்பைப் பெறுகிறோம். விசுவாசத்தினால், நாமும் நம் வாழ்வில் எதிர்கொள்ளும்
சவால்களை எதிர்கொண்டு வெற்றிபெற முடியும். தேவபக்தியுள்ள வாழ்க்கையை வாழ்வதற்கு தேவன்
மேல் உள்ள நம் விசுவாசமே நம்மை உற்சாகப்படுத்துகிறது. எபிரேயர் 11:6 இல், விசுவாசத்தின்
இரண்டு தன்மைகளை காண்கிறோம்: தேவனிடத்தில் வருகிற எவரும் அவர் இருக்கிறார் என்பதை
விசுவாசிக்க வேண்டும்; தேவனைத் தேடுகிற அனைவருக்கும் அவர் பலனளிக்கிறார். தேவன் இருக்கிறார்
என்பதை நம்பாமல் ஒருவர் தேவனிடம் வரமுடியுமா? தேவனை நம்புகிற ஒருவர் தன் விசுவாசத்தை செயல்களில்
காண்பிப்பார். நாங்கள் தேவனை விசுவாசிக்கிறோம் என்று அனேக கிறிஸ்தவர்கள் சொல்கிறார்கள்.
ஆனால், அவர்களுடைய வாழ்க்கை வேறுவிதமாக காட்டுகிறது. விசுவாச வாழ்க்கை என்பது எல்லாவற்றிற்கும்
தேவனைச் சார்ந்து, அவர் விரும்புகிறதைச் செய்கிற ஒரு வாழ்க்கை ஆகும். அப்படிப்பட்ட,
தேவனைச் சார்ந்து வாழ்கிற ஒரு வாழ்க்கையை வாழ தேவன் நம்மை அழைத்திருக்கிறார். தேவனை
நம்பி, அவருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து வாழ்தல் மாபெரும் மகிழ்ச்சியை நமக்குத்
தந்து, அசாத்தியமானவைகளைச் செய்ய நம்மை பெலப்படுத்துகிறது, மற்றும், முக்கியமாக, தேவனைப்
பிரியப்படுத்துகிறது. நம் கிறிஸ்தவ விசுவாசம் வீண் அல்ல. இது எந்த மலையேறும் அனுபவத்தைக்
காட்டிலும் அதிக கிளர்ச்சியூட்டுகிறதாக இருக்கிறது. நம் விசுவாசப் பயணத்தில், நாம்
ஒருபோதும் தனிமையாயிருப்பதில்லை. தேவன் எப்போதும் நம்முடன் ஒரு துணையாக இருந்து நடந்து
வருகிறார். மேலும், இந்தப் பயணத்தில் நமக்குத் தேவையான பலத்தையும் ஓய்வையும் தருகிறார்.
ஒரு மலையின் உச்சியை அடைந்ததும் மலை ஏறுபவர்கள் தங்கள் உற்சாகத்தை, விருப்பத்தை இழந்து
விடக் கூடும். ”கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலனடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்” (ஏசாயா 40:31). நாம் கர்த்தருடன்
எப்படி நடக்கிறோம்? என்பதை நிதானித்துப் பார்ப்போமாக.
பயன்பாடு: கிறிஸ்தவ விசுவாசம் என்பது புரிந்து கொள்ள மிகவும்
கடினமானதாக இருக்கும் “கம்ப சூத்திரம்” அல்ல. அது தேவனை நம்புகிற, தேவனைச் சார்ந்து
இருக்கிற, தேவனுக்கும் தேவனுடைய வார்த்தைக்கும்
கீழ்ப்படியத் தூண்டுகிற எளிமையான விசுவாசம் ஆகும். கிறிஸ்த்தவ விசுவாசத்தின் முதலும்
முடிவும் தேவனே. விசுவாசத்தினாலே, நான் தேவனுக்காக வாழ்ந்து, என் வாழ்க்கையில் அவர்
சித்தத்தை செய்ய முடியும். ”கிறிஸ்துவுடனேகூடச்
சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்; நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய
குமாரனைப்பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன்” (கலா.2:20).
ஜெபம்: தந்தையாகிய தெய்வமே, உம்மை
நம்புகிற இருதயத்தை எனக்குத் தந்ததற்காக உமக்கு நன்றி. இயேசுவே, விசுவாசத்தினால் வாழ
எனக்கு நீர் உதவுகிறதற்காக உமக்கு நன்றி. கர்த்தாவே, உம் வார்த்தைகளை
அனுதினமும் கேட்டு அதன்படி நடக்க எனக்கு உதவியருளும். பரிசுத்த ஆவியானவரே, எப்பொழுதும்
தேவனைச் சார்ந்து வாழ எனக்கு உம் வல்லமையைத் தந்தருளும். ஆமென்.
- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573
Day – 320
No comments:
Post a Comment