Saturday, November 6, 2021

அன்பு உறவுகளை சரிசெய்து புதுப்பிக்கிறது

வாசிக்க: எசேக்கியேல் 7,8; சங்கீதம் 126; பிலமோன் 1

வேத வசனம்  பிலமோன் 1: 8. ஆகையால், பவுலாகிய நான் முதிர்வயதுள்ளவனாகவும், இயேசுகிறிஸ்துவினிமித்தம் இப்பொழுது கட்டப்பட்டவனாகவும் இருக்கிறபடியால்,
9.
நீர் செய்யத்தக்கதை உமக்குக் கட்டளையிடும்படிக்குக் கிறிஸ்துவுக்குள் நான் துணியத்தக்கவனாயிருந்தாலும், அப்படிச்செய்யாமல், அன்பினிமித்தம் மன்றாடுகிறேன்.
10. என்னவென்றால், கட்டப்பட்டிருக்கையில் நான் பெற்ற என் மகனாகிய ஒநேசிமுக்காக உம்மை மன்றாடுகிறேன்.
11. முன்னே அவன் உமக்குப் பிரயோஜனமில்லாதவன் இப்பொழுதோ உமக்கும் எனக்கும் பிரயோஜனமுள்ளவன்.

கவனித்தல்:  அனேகர் தங்கள் பிரச்சனைகள் அல்லது வசிக்கும் இடத்தில் இருந்து விலகி ஓடி கஷ்டங்களில் இருந்து தப்பித்துக் கொள்ள முடியும் என்று நினைக்கிறார்கள். நான் எங்காவது போ ஒரு அமைதியான வாழ்க்கையை வாழ விரும்புகிறேன் என்று  மற்றவர்கள் சொல்வதை சமயங்களில் நாம் கேட்கக் கூடும். அவர்கள் விலகி ஓடினால், அது அவர்களுக்கு ஒரு தற்காலிகமான நிம்மதியை கொடுக்கக் கூடும். ஆனால் அது நிரந்தரத் தீர்வைக் கொடுப்பதில்லை. ஒநேசிமு தன் எஜமானாகிய பிலமோனிடம் இருந்து ரோமாபுரிக்கு ஏன் தப்பித்து ஓடினார் என்பது நமக்குத் தெரியாது. அந்தக் காலத்தில் இருந்த சட்டதிட்டங்களின் படி, ஒநேசிமுவை அவருடைய எஜமான் கண்டுபிடித்தால் மிகக் கடுமையான தண்டனையைப் பெற வேண்டியதாயிருக்கும். ஆனால் ஒநேசிமுவை தேவன் கண்டுகொண்டார்; பவுல் ரோமச் சிறையில் இருக்கும்போது, பவுலின் ஊழியம் மூலமாக ஒநேசிமும் கிறிஸ்தவராக மாறினார். ஒநேசிமு முன்பு பயனற்றவராக, பிரயோஜனமில்லாதவராக இருந்தார். ஆனால் கிறிஸ்துவில் தன் புதிய வாழ்க்கையில் அவர் அனைவருக்கும் பயனுள்ளவராக உதவி செய்கிறவராக மாறினார். பிலமோனுக்கு பவுல் எழுதின நிருபமானது கிறிஸ்தவ அன்பு மற்றும் வாழ்க்கைக்குத் தேவையான பல நடைமுறை மற்றும் விலையேறப்பெற்ற செய்திகளை உள்ளடக்கியதாக இருக்கிறது.

பவுல் கிறிஸ்துவின் நிமித்தம் கட்டப்பட்டவராக இருந்தார். ஆனால் அது அவருடைய சுவிசேஷ வேலையை தடுத்து நிறுத்தவில்லை. ”இந்தச் சுவிசேஷத்தினிமித்தம் நான் பாதகன்போலக் கட்டப்பட்டு, துன்பத்தை அநுபவிக்கிறேன்; தேவவசனமோ கட்டப்பட்டிருக்கவில்லை” என்று 2 தீமோ.2:9 இல் அவர் கூறுகிறார். பவுலின் மூலமாக, எஜமானும் அடிமையும் இரண்டுபேருமே கிறிஸ்துவைப் பற்றும் இரட்சிப்பை அறிகிற அறிவைக் கண்டடைந்தனர். ஒநேசிமுவை ஏற்றுக் கொள் என்று பவுல் பிலமோனுக்குக் கட்டளையிட முடியும் என்றாலும் கூட, அன்பின் நிமித்தம் மன்றாடுகிறார். ஒநேசிமு பயனற்றவர் என்பதற்காக பவுல் அவரை பிலமோனிடம் அனுப்பாமல், பிலமோனுக்கு அவர் உதவி செய்யும்படி அனுப்புகிறார். ஒநேசிமுவை தன்னுடனே கூட வைத்துக் கொண்டிருப்பதைக் காட்டிலும், அன்பையும் உறவையும் மறுபடியும் புதுப்பிப்பதற்கு பவுல் முக்கியத்துவம் கொடுத்தார். ஒநேசிமுவை பவுல் ஒரு அடிமையாக திரும்ப அனுப்பாமல், “பிரியமுள்ள சகோதரனாகவுமிருக்கும்படிக்கும்,” ஐக்கியம் கொள்ளும்படிக்கும் அனுப்பினார். அது மட்டுமல்ல, பிலமோன் பவுலை எப்படி ஏற்றுக் கொள்வாரோ அதே விதத்தில் தன் ஆவிக்குரிய மகனாகிய ஒநேசிமுவையும் ஏற்றுக் கொள்ளும்படி ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறார். மேலும், பிலமோனுக்கு ஒநேசிமு ஏதேனும் கடன்பட்டிருந்தால் அதைக் கொடுப்பதற்கும் பவுல் விருப்பமுள்ளவராயிருந்தார். கிறிஸ்துவின் தியாகம், அன்பு பற்றிய அவருடைய போதனை பற்றி இந்த நிருபமானது பல காரியங்களை நமக்கு நினைவுபடுத்துகிறது. நம்மை நாமே நிதானித்துப் பார்ப்போம்: நாம் மற்ற கிறிஸ்தவர்களிடம், போதகர்களிடம், தலைவர்களிடம் எப்படி நடந்து கொள்கிறோம்? நம் உறவுகள் அன்பின் அடிப்படையில் அமைந்தவையாக இருக்கின்றதா? கிறிஸ்து நம்மை நேசித்து, மன்னித்து, ஏற்றுக்கொண்டது போல, நாம் ஒருவரை யொருவர் மன்னிக்கவும் ஏற்றுக் கொள்ளவும் தயாராக இருக்கிறோமா? பிலமோனுக்கு எழுதிய இந்த அன்பின் கடிதத்தில் இருந்து இன்னும் நாம் அதிகமாக கற்றுக்கொள்ள வேண்டிய காரியம் என்னவென்று கர்த்தரிடம் கேட்போம்.

பயன்பாடு: என் கிறிஸ்தவ வாழ்வும் அன்பை அஸ்திபாரமாகக் கொண்டதாக இருக்க வேண்டும்.   நான் கிறிஸ்துவில் நிலைத்திராமல், அன்பை வெளிக்காட்ட முடியாது. என் கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில், நான் கசப்பையோ அல்லது வெறுப்பையோ எவர் மீதும் வைத்துக் கொண்டிருக்கக் கூடாது. கிறிஸ்துவில் எல்லோருமே பயனுள்ளவர்களும் உதவி கரமானவர்கள்.  கிறிஸ்து மற்றவர்களை பார்க்கிற படியே நானும் பார்க்க வேண்டும். கிறிஸ்துவின் அன்பும் சமாதானமும் என் இருதயத்தை ஆளுகை செய்கிறது.

ஜெபம்:  தந்தையாகிய தெய்வமே, அன்பிலே நடக்க ஆழந்த அகவுணர்வூட்டும் வழிநடத்துதலைத் தரும் செய்திகளுக்காக உங்களுக்கு நன்றி. இயேசுவே, உம் அன்பின் பிரமாணத்தைப் பின்பற்றுவதற்கு உம் சிலுவையின் அருகில் வைத்துக் கொள்ளும். பரிசுத்த ஆவியானவரே, அன்பிலும் விசுவாசத்திலும் நான் அனுதினமும் வளர எனக்கு உதவியருளும். ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

Day – 309

No comments: