வாசிக்க: எசேக்கியேல் 31,32; சங்கீதம் 138; எபிரேயர் 12
வேத வசனம்: எபிரேயர் 12: 14. யாவரோடும் சமாதானமாயிருக்கவும், பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கவும் நாடுங்கள்; பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லையே.
15. ஒருவனும் தேவனுடைய கிருபையை இழந்துபோகாதபடிக்கும்
யாதொரு கசப்பான வேர் முளைத்தெழும்பிக் கலக்கமுண்டாக்குகிறதினால் அநேகர்
தீட்டுப்படாதபடிக்கும் (எச்சரிக்கையாயிருங்கள்).
கவனித்தல்: இயேசு கிறிஸ்து நமக்காக
எல்லாவற்றையும் ஏற்கனவே செய்து முடித்துவிட்டார், ஆகவே நாம் எதுவுமே செய்யத் தேவை
இல்லை என்று சில கிறிஸ்தவர்கள் நினைக்கின்றனர். நம் இரட்சிப்புக்காக நாம் எதுவுமே
செய்யத் தேவை இல்லை என்பது உண்மைதான். வேறுவிதமாக சொல்வதானால், நம் இரட்சிப்புக்காக
நம்மால் எதையுமே செய்ய முடியாது. ஆயினும், நாம் தேவ கிருபையினால் விசுவாசத்தைக் கொண்டு
நாம் இரட்சிக்கப்பட்ட பின்பு, நாம் அந்த கிருபையில் தொடர்ந்து வாழ வேண்டும். நாம்
கிறிஸ்துவிடம் வந்து அவரை விசுவாசிக்கும்போது, நம் ஆவிக்குரிய தேடல் முடிவுக்கு வருகிறது.
ஆனால், அதுவே நம் தேவ பக்தி நிறைந்த வாழ்க்கையின் ஆரம்பப் புள்ளியாக மாறுகிறது. நாம்
கிறிஸ்துவைப் பின்பற்றி, அவரைப் போல வாழ வேண்டும் (1 யோவான் 2:6). நாம் இதைப் பெறுவதற்கு
எல்லா முயற்சிகளையும் முன்னெடுக்க வேண்டும். நம் விசுவாசம் தேவனைப் பிரியப்படுத்துகிறது
(எபி.11:6). ஆனால், நம் பரிசுத்த வாழ்க்கையே தேவனை தரிசிப்பதற்கு நம்மைத் தகுதியுள்ளவர்களாக்குகிறது.
”இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்” என்று நம் ஆண்டவராகிய இயேசு
சொன்னார் (மத்.5:8). கிறிஸ்தவர்களாகிய நாம் பரிசுத்தமான வாழ்க்கையின் முக்கியத்துவத்தை
உடனே ஏற்றுக் கொள்வோம். நம் தேவன் பரிசுத்தர், ஆகவே நாமும் பரிசுத்தமாக இருக்க வேண்டும்
என்பதை நாம் அறிந்திருக்கிறோம் (1 பேதுரு 1:16). பரிசுத்தமாவதற்கு நாம் நாடும்போது,
நம்மைப் பரிசுத்தமாக்குகிறவர் நம் தேவனாகிய கர்த்தர் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்
(லேவி.20:8; 22:9, 16, 22).
இங்கே, 14ஆம் வசனமானது பரிசுத்தமாக வாழும்படி
மட்டும் வலியுறுத்தவில்லை, அனைவருடனும் சமாதானமாக வாழும்படியும் கூறுகிறது. ”நம்முடைய
கர்த்தராகிய இயேசுகிறிஸ்துமூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம்” (ரோமர் 5:1). ஆயினும், ”யாவரோடும் சமாதானமாயிருக்க” நாம் எல்லா முயற்சிகளையும் செய்ய வேண்டும்.
பரிசுத்தத்தைப் பற்றி பேசுகிற, பரிசுத்தத்தை
குறிக்கோளாக கொண்டு வாழ்கிற, அதற்கு முயற்சி செய்கிற பல கிறிஸ்தவர்கள் மற்றவர்களுடன்
சமாதானமாக இருப்பதற்கு எந்த முயற்சிகளையும் எடுப்பதில்லை. நம் கிறிஸ்தவ நற்குணங்களை
நாம் சமரசம் செய்யத் தேவை இல்லை. அடுத்த வசனத்தில், கலகமுண்டாக்குகிற, அனேகரைத் தீட்டுப்படுத்துகிற
கசப்பு பற்றி நூலாசிரியர் எழுதுகிறார். இங்கே குறிப்பிடப்பட்டிருகிற கசப்பான வேர்
என்பது வேண்டுமென்றே தேவனுக்குக் கீழ்ப்படியாமல், விக்கிரக அல்லது அந்நிய தெய்வத்தை
வணங்குகிறவர்களைக் குறிக்கிறது (உபா.29:18,19). சில நேரங்களில், மற்றவர்கள் நம்மை புண்ப்படுத்தும்போது
(வேதனை அல்லது காயப்படுத்தும்போது) அவர்களை மன்னிப்பது நமக்குக் கடினமானதாக இருக்கலாம்.
அப்படிப்பட்ட தருணங்களில், நம்மைப் பற்றிய நமது எண்ணம் ஒரு விக்கிரகமாக மாறி அவர்களை
மன்னிக்க முடியாதபடி தடை செய்யலாம். நாம் கிறிஸ்துவின் மாதிரியை நினைவு கூர்ந்து
(1 பேதுரு 2:19-24), கிறிஸ்துவுக்குள் தேவன் நம்மை மன்னித்ததுபோல நாம் மற்றவர்களை மன்னிக்க வேண்டும் (எபே.4:32; கொலோ.3:13).
நம் இருதயங்களில் கசப்பு வேரூன்ற நாம் அனுமதிக்கக்
கூடாது. பெரும்பாலான சமயங்களில், மற்றவர்களைப் பற்றிய கசப்புணர்வுடன் இருப்பது
என்பது நமக்கு நாமே கொடுத்துக் கொள்கிற தண்டனையாக, ஒரு அமைதியான ஆட்கொல்லியாக இருக்கிறது.
”மன்னிக்க முடியாத இருதயம் பிசாசின் விளையாட்டுக்களமாக இருக்கிறது” என்று வாரன் வியர்ஸ்பி
எச்சரிக்கிறார். நம் இருதயங்கலில் ஏதேனும் கசப்பை நாம் வைத்திருப்போமானால், அது எந்த நன்மையையும்
நமக்குத் தருவதில்லை. மாறாக, அது பிரச்சனைகளை
உண்டாக்கி, மற்றவர்களையும் பாதிக்கிறது. ”ஒருவனும் தேவனுடைய கிருபையை இழந்துபோகாதபடிக்கு” என்று சொல்லி இதற்கு எதிராக நூலாசிரியர் ஒரு உறுதியான எச்சரிக்கையை தருகிறார். தேவனுடைய
கிருபையானது, நாம் மற்றவர்களுடன் ஒப்புரவாகவும், நம் கடந்த கால காயங்களை விட்டுக்
கடந்து செல்லவும் உதவுகிறது.
பயன்பாடு: நான் பரிசுத்தமாக இருக்கும்படி
தேவன் என்னைத் தெரிந்தெடுத்திருக்கிறார் (எபே.1:4). தேவன் மீதான என் அன்பானது அவருக்காக
பரிசுத்தமாக வாழும்படி என்னைத் தூண்டுகிறது. மக்கள் மீதான என் அன்பு நான் அனைவருடனும் சமாதானத்தை
நாடும்படி என்னை உற்சாகப்படுத்துகிறது. என் வெறுப்பு, மற்றவர்களைப் பற்றிய கசப்பான
உணர்வுகளை அல்ல, கிறிஸ்துவின் சமாதானம் என் இருதயத்தை ஆளை நான் அனுமதிக்க வேண்டும். நான் கர்த்தருக்கேற்ற, தேவ கிருபைக்கேற்ற ஒரு வாழ்க்கையை
வாழ்வேன்.
ஜெபம்: தந்தையாகிய தெய்வமே, பரிசுத்தமான ஒரு வாழ்க்கையை
வாழ நீர் என்னை அழைத்ததற்காக உமக்கு நன்றி. இயேசுவே, அன்பையும் பரிசுத்தத்தையும் கடைபிடிக்க
எனக்கு உதவியருளும். பரிசுத்த ஆவியானவரே, தேவபக்திக்குரியவைகளை நாடுவதில் தீவிரமாகவும்,
விடாமுயற்சியுடனும் இருக்க எனக்கு உம் பலத்தைத் தந்தருளும். ஆமென்.
- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573
Day – 321
No comments:
Post a Comment