வாசிக்க: எசேக்கியேல் 1-2; சங்கீதம் 123; தீத்து 1
வேத வசனம்: சங்கீதம் 123: 1. பரலோகத்தில்
வாசமாயிருக்கிறவரே, உம்மிடத்திற்கு என் கண்களை ஏறெடுக்கிறேன்.
2. இதோ, வேலைக்காரரின்
கண்கள் தங்கள் எஜமான்களின் கையை நோக்கியிருக்குமாப்போலவும், வேலைக்காரியின் கண்கள் தன் எஜமாட்டியின் கையை நோக்கியிருக்குமாப்போலவும், எங்கள் தேவனாகிய கர்த்தர் எங்களுக்கு இரக்கஞ்செய்யும்வரைக்கும், எங்கள் கண்கள் அவரை நோக்கியிருக்கிறது.
கவனித்தல்: கண்களால் தொடர்பு கொள்தல் (Eye contact ) என்பது வார்த்தைகளைப் பயன்படுத்தாமலேயே தகவல் பரிமாறிக் கொள்ளும் ஒரு தொடர்பு
(nonverbal form of communication) ஆகும். கண்களால் தொடர்பு
கொள்தல் என்பது உரையாடல்களில் அதில் கலந்து கொள்கிறவர்களின் விருப்பம், கவனம், மற்றும்
ஈடுபாடு ஆகியவற்றை கண் தொடர்பு வெளிப்படுத்துகிறது. கிறிஸ்தவத்தில், ஜெபம் என்பது தேவனுடன்
பேசுகிற ஒரு தகவல் தொடர்பு ஆகும். ஆயினும், நாம் ஜெபிக்கும்போது தலைகளைத் தாழ்த்தி,
கண்களை மூடிக் கொள்கிறோம். நாம் ஜெபிக்கும்போது கண்களை மூட வேண்டும் என்று வேதாகமத்தில்
சொல்லப்படவில்லை என்பது சுவராசியமானதாகும். ஜெபிக்கும்போது கண்களை மூடும் கிறிஸ்தவப்
பழக்கத்திற்கு ஆதரவாக பல்வேறு காரணங்களை மக்கள் கூறுகின்றனர். கண்களை மூடுதல் என்பது
ஜெபத்தில் கவனச் சிதறல் ஏற்படுவதை தவிர்த்து, நம் சிந்தனைகளையும் மனதையும் தேவனை நோக்கி
திருப்ப உதவுகிறது என்று சிலர் கூறுகின்றனர். நம் ஜெபத்தின் நோக்கம் தேவனுடன் உறவாடுவதேயன்றி,
நம் ஜெப நிலை அல்லது நாம் ஜெபிக்கும்போது செய்யும் செயல்கள் அல்ல என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். எருசலேமில்
உள்ள தேவாலயத்திற்குச் செல்ல சீயோன் மலையில் ஏறும்போது பயணிகள் பாடும் புனிதப் பயணப்
பாடல்களில் சங்கீதம் 123ம் ஒன்று ஆகும். இந்தப்
புனிதப் பயணம் செய்பவர்கள் நீண்ட தொலைவில் இருந்து வந்து, தங்களுடைய பிரச்சனைகளுக்கு
தேவனுடைய உதவியை எதிர் நோக்கி ஜெபிக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்துகிறது. ஜனங்கள்
தங்கள் எதிரிகளான அகங்காரிகளால் நிந்தனையையும் இகழ்ச்சியையும் பெற்றனுபவித்தார்கள்
என்று சங்கீதக்காரன் சங்.123இல் வெளிப்படுத்துகிறார். தன் ஜனங்களின் நிலையைப் பற்றிச்
சொல்லி தேவனுடைய இரக்கத்திற்காக சங்கீதக்காரன் ஜெபிக்கிறார்.
சங்கீதம் 123இன் முதல்
இரண்டு வசனங்களில், சங்கீதக்காரன் தன் ஜெபத்தைப் பற்றிய நல்ல புரிதலை நாம் பெறும்படி
கண்கள் என்ற வார்த்தையை நான்கு முறை பயன்படுத்தி இருக்கிறார். வேலைக்காரர்களின்/வேலைக்காரியின்
கண்கள் தங்கள் எஜமான்கள்/எஜமாட்டிகளின் கையை நோக்கி இருக்கும், ஆனால் சங்கீதக்காரனோ
எல்லாவற்றையும் அருளுகிற தேவனுடைய முகத்தைத் தேடுகிறார். தனக்குத் தேவையானது எல்லாம்
தேவனே என்பதை அவர் சொல்கிறார் எனச் சொல்லலாம். தேவன் தம் ஜனங்கள் தம் முகத்தைத் தேடி
அனுதினமும் உறவாட வேண்டும் என்று விரும்புகிறார்;
ஆனால் ஜனங்களோ ஆசீர்வாதங்களைப் பெற வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் எப்போதும் தேவனுடைய
கரங்களையே நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று ஒரு தேவ மனிதர் சமீபத்தில்
தன் கவலையைப் பகிர்ந்து கொண்டார். “முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும்
அவருடைய நீதியையும் தேடுங்கள்” என்று இயேசு நமக்குப் போதித்திருக்கிறார் (மத்.6:33).
சங்கீதக்காரன் தனக்கு மட்டும் ஜெபிக்கவில்லை; அவர் தன் மக்களுக்காகவும் சேர்ந்து ஜெபிக்கிறார்.
”எங்கள் தேவனாகிய கர்த்தர் எங்களுக்கு இரக்கஞ்செய்யும்வரைக்கும்”
என்று அவர் சொல்கிறார். இதன் பொருள் என்னவெனில் தேவன் தன் ஜெபத்திற்குப் பதிலளிக்கும்
வரைக்கும் அவர் பொறுமையுடன் தேவனுக்காகக் காத்திருப்பார் என்பதாகும். நாம் தாழ்மையுடம், “என்மேல்
கிருபையாயிரும்” என்று ஜெபிக்கும்போது, தேவன் எப்பொழுதுமே அப்படிப்பட்ட ஜெபங்களுக்கு
பதிலளிக்கிறார் (லூக்.11:10-14). நாம் நம் தேவனாகிய கர்த்தரை நோக்கிப் பார்க்கும்போது,
நாம் நம்பிக்கையையும், பலத்தையும், மன உறுதியையும், மற்றும் விடுதலையையும் கண்டடைகிறோம்.
தேவனே நம் பலமும் நம்பிக்கையுமானவர். நாம்
அனுதினமும் அவருடைய முகத்தை ஆர்வத்துடன் தேடுவோமாக.
பயன்பாடு: நான் தேவனுடைய முகத்தை எப்பொழுதும் தேடுவேன். கர்த்தர்
என் சகாயர்; ”வானத்தையும் பூமியையும் உண்டாக்கின
கர்த்தரிடத்திலிருந்து எனக்கு ஒத்தாசை வரும்” (சங்.121:2). நான்
நிந்தனையையும் இகழ்ச்சியையும் எதிர்கொள்ள நேரிடும்போது, ”கர்த்தர்
எனக்குச் சகாயர், நான் பயப்படேன், மனுஷன் எனக்கு என்னசெய்வான்” என்று சொல்வேன் (எபி.13:6). என் கண்கள் என் பிரச்சனைகள் மற்றும் எதிரிகள் மீது
அல்ல, தேவனை நோக்கி இருக்கிறது.
ஜெபம்: சர்வ வல்லமையுள்ள தேவனே,
என் ஜெபங்களைக் கேட்டு, எவ்வித பாரபட்சமும் இன்றி அவைகளுக்குப் பதிலளிப்பதற்காக உமக்கு
நன்றி. கர்த்தாவே, உமக்கு முதலிடம் கொடுத்து முதலாவதாக உம்மைத் தேடுகிற இருதயத்தை
எனக்குத் தந்து, தேவனைச் சார்ந்து வாழும் ஒரு வாழ்க்கையை வாழ எனக்கு உதவியருளும்.
ஆமென்.
- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573
Day – 306
No comments:
Post a Comment