வாசிக்க: எசேக்கியேல் 37,38; சங்கீதம் 141; யாக்கோபு 2
வேத வசனம்: யாக்கோபு 2: 14. என் சகோதரரே, ஒருவன் தனக்கு விசுவாசமுண்டென்று சொல்லியும், கிரியைகளில்லாதவனானால் அவனுக்குப் பிரயோஜனமென்ன? அந்த விசுவாசம் அவனை இரட்சிக்குமா?
கவனித்தல்: சில நேரங்களில் தங்கள் வாழ்க்கைக்கும் பெயருக்கும் எந்த சம்பந்தமும்
இல்லாத முரண்பாடான பெயர்களை உடையவர்களை நாம் பார்க்கிறோம். உதாரணமாக, மகாராஜா என்ற
பெயரை உடைய, ஆனால் குடியிருப்பதற்கு ஒரு சிறிய வீடு கூட இல்லாத (வீடற்ற) ஒருவரை நாம்
பார்க்கக் கூடும். சில கிறிஸ்தவர்கள் யாக்கோபு 2:14 ஐ தவறாகப் புரிந்து கொண்டு, அதை
முரண்பாடானதாகக் காண்கின்றனர். யாக்கோபு 2:14 ஐ அது சொல்லப்பட்ட சூழலுக்கு வெளியே
வைத்து ஒருவர் வாசித்தால், அவர் அதைத் தவறாகப் புரிந்துகொண்டு, தவறான வியாக்கியானம்
கொடுக்கக் கூடும். இங்கே, கிரியைகளினால் நாம் இரட்சிக்கப்படுகிறோம் என்று யாக்கோபு
கூறவில்லை. நாம் ”கிரியைகளினாலல்ல,” விசுவாசத்தினால் கிருபையினாலேயே இரட்சிக்கப்படுகிறோம்
என்பதில் சந்தேகமேயில்லை (எபேசியர் 2:8,9). யாக்கோபு 2:14-26 ஐ வாசிக்கும்போது, யாக்கோபின்
வாதத்தின் கருத்தானது பெயரளவு விசுவாசத்திற்கு எதிரானது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.
இரட்சிக்கும் விசுவாசத்தைப் பற்றி அவர் பேசவில்லை. மாறாக, விசுவாசத்தை வாழ்க்கையின்
வழிமுறையாக கைக்கொள்வதைப் பற்றிப் பேசுகிறார். இயேசு கிறிஸ்துவின் மீதுள்ள விசுவாசத்திற்காக
பாடுகளையும் உபத்திரவங்களையும் அனுபவித்துக் கொண்டிருந்த யூதக் கிறிஸ்தவர்களுக்கு
யாக்கோபு இந்த நிருபத்தை எழுதுகிறார் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது (யாக்.1:1,2).
விசுவாசத்தினாலல்ல, கிரியைகளினாலேயே நாம் இரட்சிக்கப்படுகிறோம் என்று அவர்கள் விசுவாசித்திருந்தால்,
அவர்கள் எந்த உபத்திரவத்தையும் அனுபவித்திருக்க மாட்டார்கள். ஏனெனில், நியாயப்பிரமாணம்
போதிப்பதும் அதுவே.
இந்த வேதப் பகுதியின் சரியான பொருளை அறிந்து
கொள்வதற்கான முக்கியமான திறவுகோல் வார்த்தை என்னவெனில், “அந்த விசுவாசம்” என்பதாகும்.
19ஆம் வசனத்தில், ”தேவன் ஒருவர் உண்டென்று விசுவாசிக்கிறாய், அப்படிச் செய்கிறது நல்லதுதான்; பிசாசுகளும் விசுவாசித்து, நடுங்குகின்றன” என்று அவர் சொல்கிறார். நாமெல்லாரும்
அறிந்திருக்கிறபடி, பிசாசுகளின் நம்பிக்கை உயிரற்றதும், பயனற்றதுமாக இருக்கிறது. இரட்சிக்கும் விசுவாசமானது நாம் விசுவாச அறிக்கையை
செய்தவுடன் முடிந்து விடுவதில்லை. அது நம் விசுவாசத்தை கடைபிடிக்கவும், நம் வாழ்க்கையில்
வாழந்து காட்டவும் நம்மை அழைக்கிறது. நம் கிரியைகள் ஒருபோதும் நம் இரட்சிப்பிற்கான
ஆதாரமாக இருக்க முடியாது. செயல்களில் காட்டப்படாத விசுவாசம் விசுவாசமே அல்ல. தேவன்
மேல் உள்ள நம் விசுவாசமானது உண்மையானதும் உயிருள்ள விசுவாசமாகவும் இருக்கிறது. நம்
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுடன் நாம் நடக்கையில் அனுதினமும் நம் வாழ்வில் எல்லாப்
பகுதிகளிலும் கடைப்பிடிக்கப்படுகிறது. தேவனை விசுவாசித்து, தன் விசுவாசத்தை வாழ்க்கைமுறையாகக்
கொண்டவரே ஒரு கிறிஸ்தவர் ஆவார். கிறிஸ்துவைக் குறித்து அறிகிற அறிவின் வாசனையை நம்
வாழ்க்கை மூலமாக எல்லா இடங்களிலும் பரப்ப தேவன் நம்மைப் பெலப்படுத்துவாராக (2 கொரி.2:14).
பயன்பாடு: நான் ஜீவனுள்ள தேவனை விசுவாசிப்பதற்கு
அழைக்கப்பட்டிருக்கிறேன். நான் கிரியைகளினாலே அல்ல, விசுவாசத்தினாலேயே நீதிமானாக்கப்பட்டிருக்கிறேன்.
ஆயினும், தேவன் மேல் உள்ள என் விசுவாசமானது தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து
நற்காரியங்களைச் செய்யும்படி என்னை உற்சாகப்படுத்துகிறது (எபே.2:10). நான் கிறிஸ்துவில்
நிலைத்திருக்கையில், நான் மற்றவர்களுக்கு பயனுள்ளவனாகவும், நல்ல கனிகளைத் தருகிறவனாகவும்
இருக்கிறேன் (யோவான் 15:5). நான் “நற்கிரியைகளைச் செய்ய ஜாக்கிரதையாயிருக்க” வேண்டும், ஏனெனில் அவை ”நன்மையும் மனுஷருக்குப் பிரயோஜனமுமானவைகள்” (தீத்து 3:8,14).
ஜெபம்: நல்ல தேவனே, என் வாழ்க்கையில்
நீர் செய்து வருகிற நற்காரியங்களுக்காக உமக்கு நன்றி. கர்த்தாவே, உம் இரட்சிப்புக்காக
நன்றி. பரிசுத்த ஆவியானவரே, என் செயல்கள் மூலமாக ஜனங்கள் தேவனைக் கண்டுகொள்ள உதவும்படி
ஒரு விசுவாச வாழ்க்கையை வாழ எனக்கு உம் பலத்தைத் தந்தருளும். ஆமென்.
- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573
Day – 324
No comments:
Post a Comment