வாசிக்க: எசேக்கியேல் 25,26; சங்கீதம் 135; எபிரேயர் 9
வேத வசனம்: எபிரேயர் 9: 13. அதெப்படியெனில், காளை வெள்ளாட்டுக்கடா இவைகளின் இரத்தமும், தீட்டுப்பட்டவர்கள்மேல் தெளிக்கப்பட்ட கடாரியின் சாம்பலும், சரீரசுத்தியுண்டாகும்படி பரிசுத்தப்படுத்துமானால்,
14. நித்திய ஆவியினாலே தம்மைத்தாமே பழுதற்ற பலியாக
தேவனுக்கு ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு
ஊழியஞ்செய்வதற்கு உங்கள் மனச்சாட்சியைச் செத்த கிரியைகளறச் சுத்திகரிப்பது எவ்வளவு
நிச்சயம்!
கவனித்தல்:
கடவுளுக்கு முன்பாக வருவதற்கு அல்லது
மதம் சார்ந்த நடைமுறைகளில் பங்கேற்பதற்கு சடங்காச்சாரமாக சுத்தமாக இருவர் இருக்கும்படியான
சுத்திகரிப்பு சடங்குகள் பல மதங்களில் இருக்கின்றன. மோசேயின் நியாயப்பிரமாணத்தின்படி,
சுத்தமாக இருக்கும் ஒருவர் தீட்டுப்பட்டிருக்கும் நபரின் மீது “சுத்திகரிக்கும் ஜலத்தை”
தெளித்த பின்பு தீட்டுப்பட்டவர் சுத்தமானவராக மாறுவார் (எண்.19). ஆயினும், இவை எதுவும்
ஒரு மனிதனின் மனச்சாட்சியை சுத்திகரிப்பதில்லை. ஒருவரின் வெளிப்பிரகாரமான சுத்தத்தில்
இவை சில மாற்றங்களை உண்டு பண்ணலாம். ஆனால் அவை தற்காலிகமானவை. எபிரேய நிருபத்தின்
ஆசிரியர் பழைய ஏற்பாட்டு பலியுடன் கிறிஸ்துவின் இரத்தத்தை ஒப்பிட்டு அதன் வல்லமையை
பற்றி பேசுகிறார். விலங்குகளின் பலியானது சில விளைவுகளைக் கொண்டிருக்குமெனில், இயேசுவின்
இரத்தம் எவ்வளவு அதிக வல்லமையுள்ளதாக இருக்கும் என்று வாதிடுகிறார்.
இயேசுவின் இரத்தத்தைத் தவிர வேறெதுவும் நம்
மனச்சாட்சியை சுத்திகரிக்க முடியாது. ”அதற்கேற்றபடியே
செலுத்தப்பட்டுவருகிற காணிக்கைகளும் பலிகளும் ஆராதனை செய்கிறவனுடைய மனச்சாட்சியைப்
பூரணப்படுத்தக்கூடாதவைகளாம்” என எபி.9:9 கூறுகிறது. ஆனால் கிறிஸ்துவின் இரத்தம் நம் மனச்சாட்சியை சுத்திகரிக்கிறது.
தேவனுக்கு முன்பாக சுத்த மனச்சாட்சியை உடையவரகளாக இருப்பது மிகவும் முக்கியமானது
ஆகும். நாம் நம் மனச்சாட்சியை ஏமாற்றவோ, அதனிடம் பொய் சொல்லி தப்பிக்கவோ முடியாது.
கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களிலும் இருந்து நம்மைச் சுத்திகரிக்கிறது (1 யோவான்
1:7). ”அவர் பிரதான ஆசாரியர்களைப்போல முன்பு சொந்தப்
பாவங்களுக்காகவும், பின்பு ஜனங்களுடைய பாவங்களுக்காகவும் நாடோறும்
பலியிடவேண்டுவதில்லை; ஏனெனில் தம்மைத்தாமே பலியிட்டதினாலே இதை ஒரேதரம்
செய்துமுடித்தார்” (எபி.7:27). திரித்துவத்தின் மூன்று ஆளுமைகளையும் நாம்
எபிரேயர் 9:14இல் காண்கிறோம்: பிதாவாகிய தேவன், குமாரனாகிய கிறிஸ்து, மற்றும் பரிசுத்த
ஆவியானவர். சுத்திகரிப்புச் சடங்குகள் நம்மை இரட்சிப்பதில்லை. கிறிஸ்துவோ நம்மை இரட்சித்து,
ஜீவனுள்ள தேவனுக்கு முன்பாக நாம் ஊழியம் செய்யும்படி நம்மைப் தகுதிப்படுத்துகிறது.
நம் தேவன் ஜீவனுள்ள தேவன். அவர் இன்றும் உயிரோடே இருக்கிறார்! கிறிஸ்துவின் மூலமாக,
நாம் தேவனுடைய பிள்ளைகளாக இருக்கிறோம் (ரோமர் 3:26). கிறிஸ்தவர்களாகிய நாம் சுத்த
மனச்சாட்சியுடன் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியம் செய்ய அழைக்கப்பட்டிருக்கிறோம். ஊழியம்
செய்தல் என்பதைக் குறிக்கும் கிரேக்க வார்த்தையின் பொருளை வார்த்தைக்கு வார்த்தை அப்படியே
எடுத்துக் கொள்வோம் எனில், நாம் உயிர் வாழும் நாட்கள் எல்லாம் ஜீவனுள்ள தேவனுக்கு
ஊழியம் செய்து அவருக்கு ஆராதனை செய்ய வேண்டும். காணிக்கைகளைக் கொடுத்து ஜனங்கள் தேவனைப்
பிரியப்படுத்த முயற்சி செய்து திருப்தியடைந்து கொள்கிறார்கள். அப்படிச் செய்வதன் மூலம்
தற்காலிகமான மகிழ்ச்சியை அவர்கள் அடைகிறார்கள். ஆனால் தேவனுக்கு முன்பாக அவர்கள் வரும்போது
அவர்களுடைய மனச்சாட்சியானது அவர்கள் பலவீனங்களை அவர்களுக்கு நினைவுபடுத்துகிறது. அப்படியானால்,
சுத்த மனசாட்சியுடன் ஜீவனுள்ள தேவனுக்கு நாம் செய்கிற ஊழியமானது எவ்வளவு அதிக மகிழ்ச்சியையும்
இன்பத்தையும் நமக்குக் கொடுக்கும்!
பயன்பாடு: இயேசு கிறிஸ்துவின் இரத்தம் எல்லா பாவங்களிலும்
இருந்து என்னை சுத்திகரிக்கிறது. தேவனுடைய
நிபந்தனையற்ற அன்பு மற்றும் மன்னிப்பு நான் அவருக்கு முன்பாக சுத்த மனச்சாட்சியுடன்
இருக்க என்னைப் பெலப்படுத்துகிறது. ஒன்றுக்கும் உதவாத சடங்காச்சாரங்களைப் பின்பற்ற
அல்லது கடைபிடிப்பதற்காக நான் அழைக்கப்படவில்லை. ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டுமல்ல,
என் வாழ்வில் ஒவ்வொரு நாளிலும், எல்லாப் பகுதிகளிலும் நான் தேவனுக்கு ஊழியம் செய்ய
வேண்டும். என் வாழ்நாளெல்லாம், நான் ஜீவனுள்ள
தேவனையே சேவிப்பேன்.
ஜெபம்: தந்தையாகிய தெய்வமே,
இயேசு கிறிஸ்துவின் தியாகபலியின் மூலமாக சுத்த மனச்சாட்சியைப் பெறுவதற்கான நீர்
உண்டு பண்ணிவைத்திருக்கிற ஏற்ப்பாட்டிற்காக உமக்கு நன்றி. பரிசுத்த ஆவியானவரே, இன்றும்
என்றென்றும் ஜீவனுள்ள தேவனுக்கு உண்மையாக ஊழியம் செய்ய உம் வல்லமையை எனக்குத் தந்தருளும்.
ஆமென்.
- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573
Day – 318
No comments:
Post a Comment