வாசிக்க: எசேக்கியேல் 39,40; சங்கீதம் 142; யாக்கோபு 3
வேத வசனம்: யாக்கோபு 3: 8. நாவை அடக்க ஒரு மனுஷனாலும் கூடாது; அது அடங்காத பொல்லாங்குள்ளதும் சாவுக்கேதுவான விஷம்
நிறைந்ததுமாயிருக்கிறது.
9. அதினாலே நாம் பிதாவாகிய தேவனைத் துதிக்கிறோம்; தேவனுடைய சாயலின்படி
உண்டாக்கப்பட்ட மனுஷரை அதினாலேயே சபிக்கிறோம்.
10. துதித்தலும் சபித்தலும் ஒரே வாயிலிருந்து புறப்படுகிறது. என் சகோதரரே, இப்படியிருக்கலாகாது.
கவனித்தல்: விலங்குகளின் கண்காட்சிகள் மற்றும் சர்க்கஸ் நிகழ்ச்சிகளில், மீன்களில் இருந்து,
பறவைகள் மற்றும் மிகப்பெரிய உருவம் கொண்ட யானைகள் போன்ற விலங்குகள் தங்கள் பயிற்சியாளர்களுக்குக்
கீழ்ப்படிவதை அல்லது அவைகளின் அற்புதமான செயல்களை நாம் காண்கிறோம். உதாரணமாக, ஒரு
யானை சிறிய ஸ்டூலில் ஏறி நிற்பது, பயங்கரமான விலங்குகளான சிங்கம் மற்றும் புலிகளின்
கீழ்ப்படிதல், மற்றும் அவைகளின் விளையாட்டுத்தனமான செய்கைகள் நம்மை ஆச்சரியப்படுத்துகின்றன.
இது போன்ற நிகழ்ச்சிகளில் விபத்துகள் நடப்பது மிகவும் அரிது; பெரும்பாலும் அவை மனித
தவறுகளாலேயே நடக்கின்றன. விலங்குகளை நாம் அவைகளின் இயல்பான சுபாவத்திற்கு எதிராக காரியங்களைச்
செய்யும்படி பயிற்றுவிக்க முடியும் போது, மனிதர்களாகிய நாம் நம் வார்த்தைகளையும் சிந்தனைகளையும்
கட்டுப்படுத்த போராடிக் கொண்டிருக்கிறோம். விலங்கு ஒன்றை கட்டுப்படுத்துவது என்பது
கடுமையான மற்றும் தொடர்ச்சியான பயிற்சி மற்றும் முயற்சிகளினால் சாத்தியமாகக் கூடிய
கலை ஆகும். ஆனால், தேவனுடைய ஒழுங்கு மற்றும்
பயிற்சிக்குள் வராத பட்சத்தில் “ஒரு மனுஷனாலும்” தன் நாவை முழுமையாக அடக்க முடியாது.
நம் நாவை நாம் எப்படி தவறாகப் பயன்படுத்துகிறோம்
என்பதை 9 மற்றும் 10ஆம் வசனங்களில் யாக்கோபு கூறுகிறார். நம் நாவினாலே, நாம் தேவனை
துதிக்கிறோம், அதன் பின்னர் தேவனுடைய சாயலில் உண்டாக்கப்பட்டிருக்கிற மனிதனை நாம்
சபிக்கிறோம். ”இது இவருக்கு (இவளுக்கு, இவர்களுக்கு) தேவையான ஒன்றுதான்,” அவனுக்கு
(அவளுக்கு) இதை யாராவது ஒருத்தர் சொல்ல வேண்டியதாயிருக்கிறது, ஆகவே நான் சொன்னேன்,
“ என்பன போன்ற பல காரணங்களை நாம் சொல்லி நாம் பேசிய வார்த்தைகள் சரிதான் என்று வாதாடலாம்.
ஒரே நாவில் இருந்து துதித்தலும் சபித்தலும் வரக் கூடாது என்பதை யாக்கோபு மிகவும்
அழுத்தமாக “இப்படியிருக்கலாகாது” என்றுக் கூறுகிறார். சபையின் தூண்களாகக்
கருதப்பட்ட ஆதிச்சபைத் தலைவர்களில் ஒருவராக யாக்கோபு இருந்தாலும், தன் நிருபத்தை வாசிப்பவர்களை
குற்றம் சாட்டி குறை கூறாமல், அவர்களுடனே தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறார். யாக்கோபு
3:2இல், “நாம் எல்லாரும் அநேக
விஷயங்களில் தவறுகிறோம்” என்று அவர் கூறுவதை நாம் வாசிக்கிறோம். ஆயினும், நம் மனிதப் பலவீனங்கள் நம்மை
தீட்டுப்படுத்த, கறைப்படுத்த நாம் அனுமதிக்கக் கூடாது.
”மனுஷர்
பேசும் வீணான வார்த்தைகள் யாவையும் குறித்து நியாயத்தீர்ப்புநாளிலே
கணக்கொப்புவிக்கவேண்டும்” என்று இயேசு நம்மை எச்சரிக்கிறார் (மத்,12:36). “வாயிலிருந்து புறப்படுகிறவைகள் இருதயத்திலிருந்து புறப்பட்டுவரும்; அவைகளே மனுஷனைத் தீட்டுப்படுத்தும்” என்று மத்தேயு 15:18
இல் இயேசு கூறுகிறார். சில சமயங்களில் நாம் கட்டுப்பாடிழந்து, நாவடக்கமின்றி தேவையற்ற,
முறையற்ற வார்த்தைகளை நாம் பேசிவிடக் கூடும். ”மரணமும் ஜீவனும்
நாவின் அதிகாரத்திலிருக்கும்; அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் கனியைப் புசிப்பார்கள்” (நீதி,18:21). கர்த்தாவே, என் வாய்க்குக் காவல் வையும்; என் உதடுகளின்
வாசலைக் காத்துக்கொள்ளும் (சங்.141:3) என்று தாவீது ஜெபித்தது போல நாமும் ஆண்டவரிடம்
ஜெபிக்கலாம்.
பயன்பாடு: மற்றவர்களை ஆசீர்வதிக்கும்படியே
இயேசு என்னை அழைத்திருக்கிறார் (லூக்கா 6:28; ரோமர் 12:14). என் வார்த்தைகளால் நான்
தேவனுக்கு விரோதமாகப் பாவம் செய்யாதபடிக்கு என் இருதயத்தை நான் தேவனுடைய வார்த்தைகளால்
நிரப்ப வேண்டும். ”கெட்ட வார்த்தை” எதுவும் என் வாயில் இருந்து வர நான் அனுமதிக்கக்
கூடாது; கேட்கிறவர்களுக்குப் பிரயோஜனம் உண்டாகும்படி பக்திவிருத்திக்கேதுவான வார்த்தைகளை
மட்டுமே நான் பேச வேண்டும் (எபே.4:29). கிறிஸ்துவில் மற்றவர்களை உற்சாகப்படுத்துகிற,
பக்திவிருத்தி உண்டாக்குகிற, வளரச் செய்கிற வார்த்தைகளை நான் பேசுவேன்.
ஜெபம்: தந்தையாகிய தெய்வமே,
நீர் எனக்குத் தந்திருக்கிற ஜீவ வார்த்தைக்காக உமக்கு நன்றி. இயேசுவே, உம் துணையின்றி
நான் எதையும் செய்ய இயலாது. கர்த்தாவே, என் முழு இருதயத்தாலும் வார்த்தைகளாலும் மற்றவர்களை
ஆசீர்வதிக்க எனக்கு உதவும். பரிசுத்த ஆவியானவரே, எப்பொழுதும் ஆவியின் நிறைந்திருக்கவும், தேவ பக்திக்கேதுவான, கிருபை நிறைந்த வார்த்தைகளைப்
பேச என் வாய்க்குக் காவல் வைத்தருளும். ஆமென்.
- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573
Day – 325
No comments:
Post a Comment