வாசிக்க: எசேக்கியேல் 9,10; சங்கீதம் 127; எபிரேயர் 1
வேத வசனம்: எபிரேயர் 1: 3. இவர் அவருடைய மகிமையின் பிரகாசமும், அவருடைய தன்மையின் சொரூபமுமாயிருந்து, சர்வத்தையும் தம்முடைய வல்லமையுள்ள வசனத்தினாலே தாங்குகிறவராய், தம்மாலேதாமே நம்முடைய பாவங்களை நீக்கும் சுத்திகரிப்பை உண்டுபண்ணி, உன்னதத்திலுள்ள மகத்துவமானவருடைய வலதுபாரிசத்திலே உட்கார்ந்தார்.
4. இவர் தேவதூதரைப்பார்க்கிலும் எவ்வளவு விசேஷித்த
நாமத்தைச் சுதந்தரித்துக்கொண்டாரோ, அவ்வளவு அதிகமாய்
அவர்களிலும் மேன்மையுள்ளவரானார்.
கவனித்தல்: இயேசுவைப் பற்றி மக்கள் பலவித கருத்துகளை உடையவர்களாக
இருக்கிறார்கள். சிலர் அவர் ஒரு மாபெரும் போதகர் என்றும், வேறு சிலர் அவர் ஒரு தீர்க்கதரிசி
என்றும், சிலர் அவரை ஒரு மதத் தலைவர் என்றும் கூறுகிறார்கள். யூதர்களின் பொறாமையினால்
தவறாகக் குற்றம் சாட்டப்பட்டு, ரோமர்களால் கொலை செய்யப்பட்டவர் என இயேசுவைப் பற்றி
சில கருதுகின்றனர். ஜனங்கள் பொதுவாக இயேசுவின்
மனித தன்மை குறித்து ஒருபோதும் கேள்வி எழுப்புவதில்லை. ஆனால், இயேசு ஒரு மனிதனை விட
மேலானவர் என்பதை ஏற்றுக் கொள்வது பலருக்குக் கடினமானதாக இருக்கிறது. “உண்மையில் இயேசு
யார்?” என்பதை அறிந்து கொள்வது நம் கிறிஸ்தவ விசுவாசத்தின் அடிப்படையாக இருக்கிறது.
இயேசு கிறிஸ்துவில் உள்ள விசுவாசத்தில் உறுதியாக இருக்கும்படி முதலாவதாக யூதக்கிறிஸ்தவர்களுக்காக
எழுதப்பட்ட புத்தகமக எபிரேய நிருபம் இருந்த போதிலும், இயேசுவின் ஆளுமையைப் புரிந்து
கொள்ள இது உதவுகிறது. எபிரேயருக்கு எழுதின நிருபத்தில் “பெரிய,” “மேன்மையான”, “நன்மையான”
என்ற பொருள் தரும் கிரேக்க வார்த்தைகளை 15 முறை வருவதால், ”மேன்மையானவைகளின் புத்தகம்” (the
book of better things) என்று இது அழைக்கப்படுகிறது.
மூன்றாம் வசனம் இயேசுவின்
தெய்வீகத்தைக் குறித்து வெளிப்படையாகக் கூறுகிறது. இது இயேசுவின் மனித தன்மை மற்றும்
தெய்வீக தன்மை இரண்டையும் உறுதிப்படுத்துகிறது. இறையியலின் படி, கிறிஸ்தவ சபையின் அடிப்படை
உபதேசங்களில் ஒன்றான, கிறிஸ்துவின் இரு தன்மையையும்
சேர்ந்த தெய்வீகத்தை (the hypostatic union of Christ) இது குறிக்கிறது. ஸ்பர்ஜன்
இந்த வசனத்திற்கு பின்வரும் சிறந்த விளக்கத்தைக் கொடுக்கிறார்: “தேவன் என்னப்படுவது
என்னவாக இருந்தாலும், கிறிஸ்துவும் அவ்வாறே இருக்கிறார். தேவனுடைய தன்மையின் சொரூபம்,
தெய்வீகத்தின் தெய்வீகமானது கிறிஸ்து இயேசுவின் இருக்கிறது.” பிதாவைக் காண்பிக்க வேண்டும்
என பிலிப்பு இயேசுவிடம் வேண்டிக்கொண்டபோது, ”நான் பிதாவிலும், பிதா என்னிலும் இருக்கிறதை நீ விசுவாசிக்கிறதில்லையா?” என்று இயேசு பதில்
சொன்னார் (யோவான் 14:10). ”சர்வத்தையும்
தம்முடைய வல்லமையுள்ள வசனத்தினாலே தாங்குகிற” இயேசு எல்லாவற்றிலும்
நம்மைத் தாங்க வல்லவராக இருக்கிறார். நம் மீது அவர் கொண்ட அன்பின் காரணமாக, அவர் நம்
பாவங்களைச் சுமந்து, நம் சுத்திகரிப்பிற்கான வழியை உண்டுபண்ணினார். இப்பொழுது அவர்
சகல அதிகாரம் மற்றும் வல்லமையுடன் பிதாவாகிய தேவனின் வலது பாரிசத்தில் அமர்ந்திருக்கிறார்.
இயேசுவின் வல்லமை மற்றும் அவர் முக்கியமான தனித்தன்மை வாய்ந்த மற்றும் தனி ஒருவர்,
என்பதையும் பிதாவாகிய தேவனுடன் இயேசு ஒன்றாக இருக்கிறார் என்பதையும் இந்த வசனம் நமக்கு
வெளிப்படுத்துகிறது. நான்காம் வசனத்தில், கிறிஸ்துவின் மேன்மையைப் பற்றிய முதலாவது
ஒப்பிடுதலை நாம் காண்கிறோம். தேவ தூதர்கள் யாவும் தேவனால் சிருஷ்டிக்கப்பட்டவர்கள்.
ஆனால், குமாரனோ எல்லா தேவ தூதர்களைக் காட்டிலும் மேன்மையுள்ளவராக, மிகச் சிறந்தவராக,
மிகப்பெரியவராக இருக்கிறார். இந்த அதிகாரத்தின் மீதமுள்ள வசனங்கள் இயேசுவைப் பற்றிய
இந்த அடிப்படை சத்தியத்தை நிரூபிக்கிறது. தேவ தூதர்கள் என்பவர்கள் இரட்சிப்பைப் பெறுகிறவர்களுக்கு
ஊழியம் செய்யும் பணிவிடை ஆவிகள் ஆவர். ஆனால் இயேசுவோ “உலக இரட்சகராக” இருக்கிறார்.
கிறிஸ்து இயேசுவில் நாம் சகலத்தையும் உடையவர்களாக இருக்கிறோம். ”இயேசுகிறிஸ்து
நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்” (எபி.13:8). நாம் அவரை எப்பொழுதும் நம்பலாம். இயேசு கிறிஸ்துவில்
நாம் கொண்டிருக்கும் விசுவாசம் வீணானதோ, கற்பனையானதோ, அல்லது எவருக்கும் பயனற்ற
ஒன்றோ அல்ல.
பயன்பாடு: நான் என் சிருஷ்டிகரின் கரங்களில் இருக்கிறேன். இயேசுவின்
வார்த்தைகள் வல்லமையுள்ளவை; அவை ”ஆவியாயும்
ஜீவனாயும்” இருக்கின்றது (யோவான் 6:63). இயேசுவிடம் “நித்திய ஜீவ வசனங்கள் உண்டு (யோவான் 6:68). இயேசுவே என் வாழ்வின் மிகச் சிறந்த பங்காக இருக்கிறார்.
நான் அவருடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்து, கர்த்தருக்கேற்ற படி வாழ்வேன். வேறு
எவரைக் காட்டிலும் மேன்மையான வாழ்க்கையைப் பற்றிய நம்பிக்கையை இயேசு எனக்குத் தருகிறார்.
ஜெபம்: இயேசுவே, அனுதினமும்
உம்மை அதிகமதிகமாக அறிந்து கொள்ள நீர் தரும் வாய்ப்புகளுக்காக உமக்கு நன்றி. கர்த்தாவே,
என் கிறிஸ்தவ விசுவாசத்தில் உறுதியாக நிற்கவும், உமக்காக வாழவும் எனக்குப் பலன் தாரும்.
ஆமென்.
- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573
Day – 310
No comments:
Post a Comment