வாசிக்க: தானியேல் 3,4; சங்கீதம் 148; 1 பேதுரு 4
வேத வசனம்: தானியேல் 3: 16. சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்கள் ராஜாவை நோக்கி: நேபுகாத்நேச்சாரே, இந்தக் காரியத்தைக்குறித்து உமக்கு உத்தரவு சொல்ல எங்களுக்கு அவசியமில்லை.
17. நாங்கள் ஆராதிக்கிற எங்கள் தேவன் எங்களைத் தப்புவிக்க
வல்லவராயிருக்கிறார்; அவர் எரிகிற அக்கினிச்சூளைக்கும், ராஜாவாகிய உம்முடைய கைக்கும் நீங்கலாக்கி விடுவிப்பார்.
18. விடுவிக்காமற்போனாலும், நாங்கள் உம்முடைய தேவர்களுக்கு ஆராதனை செய்வதுமில்லை, நீர் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்வதுமில்லை என்கிறது ராஜாவாகிய
உமக்குத் தெரிந்திருக்கக்கடவது என்றார்கள்.
கவனித்தல்: தமிழ்நாட்டில் குறிப்பிட்ட சில பெண் தெய்வங்களை
வணங்குபவர்கள் தீமிதி திருவிழாவை வருடந்தோறும் நடத்துகிறார்கள். எவ்வித பாதிப்புமின்றி
நெருப்புக்கனலின் மேல் நடப்பதற்கு தங்கள் தெய்வங்கள் உதவுவதாக பக்தர்கள் நம்புகின்றனர்.
தீமிதித்தல் பயம் மற்றும் நெருப்பு மீது வெற்றிபெறுகிற
உணர்வையும், சுயநம்பிக்கை மற்றும் கடவுள் நம்பிக்கை பற்றிய உறுதியையும் பக்தர்களுக்குக்
கொடுப்பதாக மக்கள் நம்பினாலும், தீக்கதிர்களின் வெப்பத்தைக் கடத்தும் திறன் மிகக்
குறைவு என்பதால், தீமிதித்தல் என்பது எவரும் செய்யக் கூடிய ஒன்றே என்று அறிவியலார்
கூறுகின்றனர். தீ மிதிக்கும்போது பொதுவாக பக்தர்கள் வேகமாக நடப்பதை அல்லது ஓடுவதை
நீங்கள் பார்த்திருக்கக் கூடும்.
சாத்ராக், மேஷாக், மற்றும் ஆபேத்நேகோ என்பவர்களின் கதை மிகவும்
உற்சாகமளிக்கிறதும், தேவனை மட்டுமே ஆராதித்து உபத்திரவங்களுக்கு எதிராக தைரியமாக நிற்க
மன உந்துதலைத் தருகிற ஒரு சம்பவம் ஆகும். இங்கு, ராஜாவின் கோபத்தின் நிமித்தமாக, அந்த
அக்கினிச் சூளையானது ஏழுமடங்குஅதிக சூடாக்கும்படி உத்தரவிடப்பட்டது. மிகவும் வலிமை
வாய்ந்த இராணுவ வீரர்கள் கூட அந்த அக்கினியின் உஷ்ணத்திற்கு தாக்குப்பிடித்து நிற்க
முடியவில்லை; அந்த இளம் வாலிபர்களை நெருப்பில் போட அவர்கள் தூக்கிக் கொண்டு வந்தபோது,
வலிமையான அந்த ராணுவ வீரர்கள் அனைவரும் மரித்துப் போயினர். ஆனால் சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்னும் அந்த மூன்று
பேரோ, ”விடுதலையாய் அக்கினியின் நடுவிலே” உலாவிக் (நடந்து) கொண்டிருந்தார்கள்.
அவர்களுடனே நடந்து கொண்டிருந்த நான்காவது ஆளைக் கண்டபோது ராஜா ஆச்சரியமடைந்தான். அவர்கள்
கட்டப்பட்டவர்களாக எரிகிற அக்கினியில் தூக்கி போடப்பட்டார்கள். அவர்களைக் கட்டியிருந்த கயிறுகள்
தான் அக்கினிச் சூளையில் அகற்றப்பட்டது; அவர்களோ அக்கினிச் சூளையில் நடந்து கொண்டிருந்தனர்.
ஆயினும், நெருப்பானது அவர்களுடைய சரீரத்திற்கோ, உடைகளுக்கோ எவ்வித சேதத்தையும்
உண்டுபண்ணவில்லை. இது எப்படி சாத்தியம்?
என்று நாம் கேட்கக் கூடும். அவர்கள் தேவனோடே நடந்தார்கள். அவர்கள் அக்கினியில் இருந்து
வெளியே வரும்படி, ராஜா அவர்களை கூப்பிட வேண்டியதாயிருந்தது.
ராஜாவின் உணவினால் தங்களைத் தீட்டுப்படுத்திக் கொள்ளக்
கூடாது என்று அவர்கள் எடுத்த தீர்மானத்தில் இருந்து அவர்களின் கதை துவங்குகிறது. இங்கே,
ராஜாவுக்கு முன்பாக, அவர்கள் தங்கள் விசுவாசத்தையும், தேவன் மீதான அர்ப்பணிப்பையும்
வெளிப்படுத்தினார்கள். ராஜாவாகிய நேபுகாத்நேச்சாருக்கு அ வர்கள் பயப்படாமல், தேவனுக்கு
பயந்து, தேவனுடைய பிரமாணத்தைப் பின்பற்றுவதற்கு கவனமுள்ளவர்களாக அவர்கள் இருந்தார்கள்.
தேவன் விடுவிக்க வல்லவர் என்பதை அவர்கள் விசுவாசித்தார்கள். ”விடுவிக்காமற்போனாலும்…ராஜாவாகிய உமக்குத் தெரிந்திருக்கக்கடவது” என்று அவர்கள் சொன்ன
போது, ராஜாவின் கடவுளுடைய சிலைக்கு முன்பதாக வணங்குவதற்குப் பதிலாக தேவனை ஆராதிப்பதற்கு
அவர்கள் மிகவும் தீர்மானமுள்ளவர்களாக இருந்ததை வெளிப்படுத்தினார்கள். ”அன்றியும்
கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும்
துன்பப்படுவார்கள்” என்று பவுல் கூறுகிறார் (2 தீமோ.3:12; பிலி.1:29). தன்னைப் பின்பற்றுகிறவர்கள் பிரச்சனையில்லாத ஒரு
வாழ்க்கையை வாழ்வார்கள் என்று இயேசு ஒருபோதும் வாக்குக் கொடுக்கவில்லை. “என்னிமித்தம் உங்களை
நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் உங்கள்பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால்
பாக்கியவான்களாயிருப்பீர்கள்” என்று சொல்லி, “மகிழ்ந்து களிகூருங்கள்” என இயேசு நமக்குப்
போதித்திருக்கிறார் (மத்.5:11-12). அப்போஸ்தலர்கள் தாங்கள் பட்ட பாடுகளில் மகிழ்ந்து,
கிறிஸ்துவினிமித்தம் பாடுபட நேர்ந்தால் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என சபைக்குப்
போதித்தார்கள் (அப்.5:40-41; ரோமர் 5:3, 1 பேதுரு 4: 12-14). சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்கள் அக்கினியில் நடக்கும்போது தேவனைப் பாடித் துதித்துக்
கொண்டிருந்தார்கள் என்று செப்துவஜிந்த் மொழிபெயர்ப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
“நீ அக்கினியில்
நடக்கும்போது வேகாதிருப்பாய்; அக்கினிஜுவாலை உன்பேரில் பற்றாது” (ஏசாயா 43:1-2)
என்று வாக்குப் பண்ணின தேவன், இம்மூவருடனே நடந்து கொண்டிருந்தார். அப்போது அந்த எரிகிற
அக்கினிச் சூளையானது தேவனை ஆராதிக்கிற இடமாக மாறியது. நாம் விசுவாசத்தில் நடக்கும்போது,
தேவன் நம்முடனே நடப்பதை நாம் காண முடியும்.
பயன்பாடு: ”என்னையன்றி உனக்கு
வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம்” என்று தேவன் எனக்குக்
கட்டளையிட்டிருக்கிறார் (யாத்.20:3). தேவனைத் தவிர வேறு எதையாகிலும் நான் வணங்கும்படி
பிசாசானவன் என் முன் சோதனையைக் கொண்டு வரும்போது, நான் அவனுக்கு எதிர்த்து நின்று,
”அப்பாலே போ சாத்தானே; உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே” என்று இயேசுவைப் போல நான் பேசவேண்டும் (மத்.4:10, உபா.6:13-15). என் அன்பு, ஆராதனை, என் வாழ்க்கை மற்றும் என் அனைத்தும்
தேவன் ஒருவருக்கே உரியவை; மற்ற எதுவும் எனக்கு முக்கியமானவை அல்ல. விசுவாசத்தினாலே,
நான் தேவனுடன் நடந்துகொண்டிருக்கிறேன். நான் தேவனுடைய வழிகளில் நடப்பதற்கான பலத்தை
தேவன் எனக்குத் தருகிறார். அவர் என்னை விடுவிக்க வல்லவராக இருக்கிறார்.
ஜெபம்: தந்தையாகிய தெய்வமே, உமக்கும் உம் வார்த்தைக்கும்
உண்மையுடன் இருக்கும்படி நினைவுபடுத்துகிறதற்காக உமக்கு நன்றி. இயேசுவே, பிசாசை எதிர்த்து
நிற்க உம் வல்லமையைத் தந்தருளும். பரிசுத்த ஆவியானவரே, என் விசுவாசம் சோதிக்கப்படும்போது,
நீர் தரும் வார்த்தைகளைப் பேசவும் கிறிஸ்துவுக்காக நிற்கவும் உம் ஞானத்தையும் சக்தியையும்
தந்தருளும். ஆமென்.
- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573
Day – 331
No comments:
Post a Comment