வாசிக்க: எசேக்கியேல் 45,46; சங்கீதம் 145; 1 பேதுரு 1
வேத வசனம்: 1 பேதுரு 1: 3. நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம்
உண்டாவதாக;
4. அவர், இயேசுகிறிஸ்து
மரித்தோரிலிருந்து எழுந்ததினாலே, அழியாததும்
மாசற்றதும் வாடாததுமாகிய சுதந்தரத்திற்கேதுவாக, ஜீவனுள்ள நம்பிக்கை உண்டாகும்படி, தமது மிகுந்த இரக்கத்தின்படியே நம்மை மறுபடியும் ஜெநிப்பித்தார்.
கவனித்தல்: ”நம்பிக்கைதான் வாழ்க்கை;
நம்பிக்கை இல்லாமல் எவரும் இந்த உலகத்தில் வாழமுடியாது” என்று மக்கள் சொல்வதை அடிக்கடி
நாம் கேட்கிறோம். எந்தவிதமான நிச்சயமுமின்றி, ஒரு காரியம் நடைபெறவேண்டும் அல்லது
உண்மையாக வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர் மற்றும் எதிர்பார்க்கின்றனர். ஆனால்,
வேதாகமம் கூறும் நம்பிக்கை உலகத்தில் இருந்து நாம் கேட்கும் நம்பிக்கை பற்றிய கருத்து
அல்லது அர்த்தத்தில் இருந்து வித்தியாசனமானது
ஆகும். உலகப்பிரகாரமான
நம்பிக்கையானது, “நிச்சயமில்லாத நன்மை” ஆக இருக்கையில், வேதாகம நம்பிக்கையானது ஜான்
பிளன்சர்ட் சொல்வது போல, “நிபந்தனையற்ற நிச்சயத்தன்மை உடையதாக” இருக்கிறது. ”நம்பிக்கை
என்பது கிறிஸ்தவ விசுவாசத்திற்கு ஒத்த கருத்துடையதாக இருக்கிறது; ஏனெனில் இயேசு கிறிஸ்துவை
ஆண்டவரும் இரட்சகருமாக ஏற்றுக் கொள்வதற்கான விசுவாசிகளின் நோக்கமானது நரகத்துக்கு தப்பி
நித்திய மகிமைக்கும் பிரவேசிப்பதைப் பற்றிய எதிர்பார்ப்பாக இருக்கிறது” என்று ஜான் மெக்ஆர்தர் என்பவர் எழுதுகிறார். அப்போஸ்தலனாகிய பேதுரு எழுதிய முதலாவது நிருபத்தில்,
நம்பிக்கை என்பது பாடுகளின் மத்தியில் இருக்கிற கிறிஸ்தவர்களுக்கு நினைவுபடுத்தும்
குறிப்பிடத்தக்க ஒரு கருப்பொருளாக இருக்கிறது. சில அறிஞர்கள் பேதுருவின் முதலாவது
நிருபத்தை நம்பிக்கையின் கடிதம் என அழைக்கின்றனர். இங்கு மறுபடியும் பிறந்த அனுபவத்தைப் பெற்ற ஒவ்வொரு கிறிஸ்தவருக்கும்
இருக்கும் ஜீவனுள்ள நம்பிக்கை பற்றி பேதுரு பேசுகிறார். நம் இரட்சிப்பு, கிறிஸ்துவில்
மறுபிறப்பு தேவன் நமக்குத் தரும் பரிசு ஆகும். ”ஜீவனுள்ள நம்பிக்கை
உண்டாகும்படி, தமது மிகுந்த இரக்கத்தின்படியே நம்மை மறுபடியும்
ஜெநிப்பித்தார்” என்று பேதுரு கூறுகிறார். அப்போஸ்தலனாகிய பவுல் சொல்வது
போல, நாம் “அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும்” மரித்துப் போனவர்களாகவும்,
”சுபாவத்தினாலே மற்றவர்களைப்போலக் கோபாக்கினையின்
பிள்ளைகளாயிருந்தோம்: (எபே.2:1-5). ஒரு காலத்தில், நாம் “நம்பிக்கையில்லாதவர்களும், இவ்வுலகத்தில் தேவனற்றவர்களுமாக” இருந்தோம் (எபே.2:12). ஆனால்,
இப்பொழுதோ கிறிஸ்து இயேசுவில் ஜீவனுள்ள நம்பிக்கை உடையவர்களாக இருக்கிறோம்.
இயேசு கிறிஸ்துவின்
மீதான நம் விசுவாசமே நம் நம்பிக்கையின் அஸ்திபாரமாக இருக்கிறது. ஒரு பாமாலைப் பாடலில்
உள்ளது போல, நாம் உறுதியான கற்பாறையாகிய கிறிஸ்துவின் மீது நிற்கிறோம், மற்ற நிலமனைத்தும்
புதைமணலே ஆகும். இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் நம் விசுவாசத்தின் அஸ்திபாரம்
ஆகும். நம் ஜீவனுள்ள நம்பிக்கையும் கிறிஸ்தவ விசுவாசமும் ஒன்றொடொன்று தொடர்புடையதும்,
பிரிக்க முடியாததும் ஆகும். உலகப் பிரகாரமான சுதந்திரம் நிலையானது அல்ல; அது பூச்சியினாலும்
துருப்பிடிப்பதினாலும் அழிந்தும், மற்றவர்களால் திருடப்பட்டும் போகலாம் (மத்.
6:19). ஆனால் நம் புது பிறப்பு அல்லது மறுபிறப்பின் அனுபவமானது ஒருபோதும் ”அழியாததும் மாசற்றதும் வாடாததுமாகிய” சுதந்திரத்தைப் பெற நம்மை நடத்துகிறது.
கிறிஸ்துவுக்குள் நமக்கு இருக்கும் சுதந்திரம் நித்தியமானது ஆகும். தேவன் நமக்காக
அதைப் பாதுகாத்து வைத்திருக்கிறார். நாம் மறுபடியும் பிறக்கும்போது, தேவனுடைய பிள்ளைகளாகவும்,
தேவனுக்கு சுதந்திரராகவும் ஆகிறோம் (ரோமர் 8:14-17). நாம் தேவனுடைய பிள்ளைகள் என்பதை
அறிந்து கொள்ளும்போது, தேவனைத் துதிப்பதுதான் நம் இயல்பான பதிலாக இருக்கும். ஏனெனில்
அது தகுதியில்லாத நமக்கு தேவன் அருளும் கிருபையின் பரிசு ஆகும். ”நம்முடைய
கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக”
என்று சொல்லும்போது, பேதுரு அதையே செய்கிறார், இயேசுவே நம் நம்பிக்கை (1 தீமோ.1:1);
அவர் மூலமாக நாம் ஜீவனுள்ள நம்பிக்கை உடையவர்களாக இருக்கிறோம்; இயேசுவின் இரண்டாவது
வருகையானது அனைத்து கிறிஸ்தவர்களும் விரும்புகிற ஆனந்த பாக்கியம் (ஆசீர்வாதமான நம்பிக்கை)
ஆகும் (தீத்து 2:13). காம்பஸ் குருசேட் அமைப்பின் நிறுவனர் பில் பிரைட் அவர்கள் சொல்வது
போல, ”தேவனுடன் இருக்கும்போது, வாழ்க்கையானது முடிவிலா நம்பிக்கை உடையதாக இருக்கிறது.
தேவன் இல்லை எனில், வாழ்க்கையானது நம்பிக்கையற்ற முடிவாக இருக்கிறது.” நாம் நம் வாழ்வில்
இப்படிப்பட்ட ஆசீர்வாதமான ஜீவ நம்பிக்கை உடையவர்களாக இருக்கிறோமா? இது மனிதனுக்கு தேவன்
கொடுத்த அற்புதப் பரிசு ஆகும். வெற்றிகரமாக கிறிஸ்தவ வாழ்விற்கு இந்த ஜீவனுள்ள நம்பிக்கை
நமக்கு உதவுகிறது.
பயன்பாடு: கிறிஸ்துவில் நான் ஒரு
புதிய வாழ்வை உடையவனாக இருக்கிறேன். நம்புகிறதற்கு ஏதும் இல்லாதிருந்தும் நம்புவதற்கு
தேவன் மேல் உள்ள என் விசுவாசம் என்னைப் பலப்படுத்துகிறது. தேவன் எனக்குத் தந்திருக்கிற
ஜீவனுள்ள நம்பிக்கையானது அவருடைய மகிமைக்காக வாழ எனக்கு உதவுகிறது. பரலோகத்தில் தேவன்
எனக்காக பாதுகாத்து வைத்திருக்கிற நித்திய பரிசைப் பெற நான் அழைக்கப்பட்டிருக்கிறேன்.
கிறிஸ்துவுக்குள் என் நம்பிக்கை இருக்கிறது.
கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக எனக்குள் இருக்கிறார் (கொலோ.1:27).
ஜெபம்: கிருபையும் இரக்கமுமுள்ள
தேவனே, நீர் எனக்குக் காண்பித்திருக்கிற மாபெரும் இரக்கத்திற்காக உமக்கு நன்றி. நீர்
எனக்குத் தந்திருக்கிற புதிய வாழ்க்கை, ஜீவனுள்ள நம்பிக்கை, மற்றும் நித்திய சுதந்திரம்
ஆகிய உம் பரிசுக்காக உம்மைத் துதிக்கிறேன். கர்த்தாவே, என் விசுவாசத்தை உறுதியாகப்
பற்றிப் பிடித்துக் கொண்டு, முடிவு வரை விசுவாசத்தில் நிலைத்திருக்க எனக்கு உதவியருளும்.
ஆமென்.
- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573
Day – 328
No comments:
Post a Comment