வாசிக்க: எசேக்கியேல் 15,16; சங்கீதம் 130; எபிரேயர் 4
வேத வசனம்: எபிரேயர் 4: 11. ஆகையால், அந்தத் திருஷ்டாந்தத்தின்படி, ஒருவனாகிலும்
கீழ்ப்படியாமையினாலே விழுந்துபோகாதபடிக்கு, நாம் இந்த இளைப்பாறுதலில் பிரவேசிக்க ஜாக்கிரதையாயிருக்கக்கடவோம்.
12. தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும்
உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும்
கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது.
கவனித்தல்: நம் வேதாகமத்தில் 31,173 வசனங்கள் உள்ளதாக சொல்லப்படுகிறது.
”வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால்
அருளப்பட்டிருக்கிறது” என்று நாம் விசுவாசிக்கிறோம் (2 தீமோ.3:16). தனிநபர்களின்
தேவைகள் மற்றும் தேவனுடைய சித்தத்திற்கேற்ப, மனிதர்களைத் தொடுவதற்கு, மனதில் உந்துதலைக்
கொடுப்பதற்கு, உற்சாகமளிப்பதற்கு, கண்டித்துணர்த்துவதற்கு, சரி செய்வதற்கு, மற்றும்
ஆசீர்வதிப்பதற்கு தேவன் பல்வேறு வசனங்களை பயன்படுத்துகிறார். மார்ட்டின் லூத்தர் “விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்” (ரோமர் 1:17) என்ற வசனத்தின்
பொருளை உணர்ந்து கொண்டபோது, நாம் இன்று காண்கிற சீர்திருத்தம் அதன் துவக்கத்தை அன்று கண்டது. இது போல, வேதாகமமானது அனேகரது வாழ்க்கையைத்
தொட்டு, மாற்றி, உலகத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை தொடந்து பல நூறாண்டுகளாக செய்து
வருகிறது. வேதாகமத்தை அழிக்க பல்வேறு முயற்சிகள் நடந்தன/நடந்து கொண்டிருக்கின்றன.
ஆனால், பல்வேறு எதிர்ப்புகள் மற்றும் வேதாகமத்தை அழிக்கும் முயற்சிகளின் மத்தியிலும்,
அது இன்றும் உறுதியாக நிலைத்து நிற்கிறது. ”என் இறப்புக்குப் பின் நூறாண்டுகள் கழித்து,
பரிசுத்த வேதாகமம் அருங்காட்சியகத்தில் மட்டுமே இருக்கிற ஒரு காட்சிப் பொருளாக ஆகிவிடும்”
என்று பரியாசமாக பிரெஞ்சு தத்துவஞானி வால்டேர் சொன்னார். அவரது மரணத்திற்குப் பின்
நூறாண்டுகள் கழித்து, அவரது வீடு வேதாகமங்களை அச்சடிக்கும் இடமாக மாறியது என வரலாறு
கூறுகிறது. வேதாகமத்தின் மகத்துவத்தை எடுத்துக் காட்ட இது போன்ற பல நூறு உண்மைச் சம்பவங்களை
நாம் சொல்லலாம். நாம் ஜெபிக்கும்போது, பிரசங்கிக்கும்போது, மற்றும் வேதாகமத்தைப் பற்றிப்
பேசும்போது, எபிரேயர் 4:12 ஐக் குறிப்பிடுகிறோம். இது வேதாகமத்தில் அடிக்கடி மேற்கோள்
காட்டப்படும் வசனங்களில் ஒன்று ஆகும். பலர் எபிரேயர் 4:12 சொல்லப்பட்ட சூழலைப் (context)
பார்க்க தவறி விடுகிறார்கள்; அதை பெரும்பாலும் சொல்லப்பட்ட சூழ்நிலைக்குச் சம்பந்தமில்லாத
இடங்களில் (out of context) பயன்படுத்துகிறார்கள்.
தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படியாமல்
போனால் வரும் விளைவுகளைக் குறித்து பிரதானமாக சொல்லி, எபிரேயர் 4ஆம் அதிகாரம் நம்மை
எச்சரிப்பதுடன், தேவனுக்கும் அவருடைய வார்த்தைக்கும்
கீழ்ப்படியும்படி நம்மை வலியுறுத்துகிறது. ”அல்லாமலும், நீங்கள் உங்களை வஞ்சியாதபடிக்குத் திருவசனத்தைக்
கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல, அதின்படி
செய்கிறவர்களாயும் இருங்கள்” என்று வேதம் நம்மை உற்சாகப்படுத்துகிறது (யாக்.1:22).
”நாம் ஏன் தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிய வேண்டும்?” என்று சிலர் கேட்கக் கூடும்.
”தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும்” இருக்கிறது
என்று எபி.4:12 நமக்குப் பதிலளிக்கிறது. கர்த்தருடைய வார்த்தை ஒரு போதும் அழிந்து
போவதில்லை; அது அனுப்பப்பட்ட காரியத்தை நிறைவேற்றாமல் ஒரு போதும் வெறுமையாகத் திரும்புவதில்லை
(எசாயா 55:11). நம் தேவன் ஜீவனுள்ள தேவனாக இருக்கிறபடியால் (எபி.3:12), அவருடைய வார்த்தையானது
ஜீவனும் வல்லமையும் உள்ளதாக இருக்கிறது. தமது வார்த்தைகள் ஆவியாயும் ஜீவனாயும் இருக்கிறது
என இயேசு சொன்னார் (யோவான் 6:63). “மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும்
உயிரோடிருக்கிறேன்” என்று அவர் கூறுகிறார் (வெளி.1:18). தேவனுடைய வார்த்தையின்
கூர்மையானது ஜனங்கள் தங்கள் பாவத்தை உணர்ந்து கொள்ளவும், இரட்சிப்பைப் பெறவும் வழிநடத்துகிறது
(அப்.2:37-40). மறுபுறம், பிசாசுக்கு எதிரான்
நம் போரில் இதுவே நமது தாக்குதல் ஆயுதமாக இருக்கிறது (எபே.6:17). தேவனுடைய வார்த்தையானது
நம் உள்ளார்ந்த சிந்தனைகளையும் ஊடுருவிச் செல்ல வல்லதாக இருக்கிறது. இயேசு அனைவரையும்,
அனைவரின் இருதயத்திற்குள் இருப்பதையும் அறிந்திருக்கிறார் (யோவான் 2:25). நாம் உதடுகளினால்
மட்டுமல்ல, நம் முழு இருதயத்தோடும் தேவனுக்குக் கீழ்ப்படிய வேண்டும்.
பயன்பாடு: நான் தேவனுடைய வார்த்தையின்படி
வாழ, ஜீவனுள்ள தேவன் என்னை அழைக்கிறார். நான் அவரிடம் எதையும் மறைக்க முடியாது (வ.13).
இதை மனதில் வைத்து, நான் தேவனுக்கு எப்பொழுதும் கீழ்ப்படிய வேண்டும். வேண்டா வெறுப்பாக அல்ல, கட்டாயமாகவும் அல்ல, தேவன்
என்னை முதலில் நேசித்தபடியால் அன்புடன் நான் அவருக்குக் கீழ்ப்படிகிறேன்.
ஜெபம்: ஜீவனுள்ள
தேவனே, என் கரங்களில் நீர் கொடுத்திருக்கிறா வேதாகமத்திற்காக உமக்கு நன்றி. கர்த்தாவே,
வேதம் வாசிப்பிலும், கீழ்ப்படிதலிலும், அதை அறிவிப்பதிலும் எல்லா விதத்திலும் உம்
வார்த்தையை கனப்படுத்துகிற இருதயத்தை எனக்குத் தாரும். பரிசுத்த ஆவியானவரே, வேதத்தின்
படி வாழ எனக்கு உதவி, நித்திய வழியிலே என்னை நடத்தும். ஆமென்.
- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573
Day – 313
No comments:
Post a Comment