வாசிக்க: 1 இராஜாக்கள் 15, 16 ; நீதிமொழிகள் 1 ; யோவான் 8: 31-59
வேத வசனம்: யோவான் 8: 34. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: பாவஞ்செய்கிறவன் எவனும் பாவத்துக்கு அடிமையாயிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
35. அடிமையானவன் என்றைக்கும் வீட்டிலே நிலைத்திரான்; குமாரன் என்றைக்கும் நிலைத்திருக்கிறார்.
36. ஆகையால் குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்.
கவனித்தல்: ஒரு அடிமையாக இருப்பதை எவரும் விரும்புவதில்லை. ஆயினும், உலகமெங்கிலும் அடிமைத்தனத்தின் பழைய மற்றும் நவீன வடிவங்களை நாம் காண்கிறோம். இயேசுவிடம் பேசிய யூதர்களைப் போலவே, அனேகர் தாங்கள் ஒரு அடிமைத்தனத்தில் இருக்கிறோம் என்பதை ஏற்றுக் கொள்ளக் கூட தயாராக இல்லை என்பது வருந்தத்தக்கது ஆகும். இங்கு, யாரோ ஒருவருக்கு அடிமையாக இருப்பது ( அரசியல், பொருளாதார மற்றும் சமுதாய அடிமைத்தனம்) பற்றி இயேசு சொல்லவில்லை. பாவத்துக்கு அடிமையாக இருத்தல் பற்றி கூறுகிறார். இது ஒரு குறிப்பிட்ட பாவத்தைக் குறிப்பிடாமல், ஒருவரின் பாவ வாழ்க்கையைக் குறிக்கிறது. பாவத்திற்கு அடிமையாக இருத்தல் என்பது வேறெந்த அடிமைத்தனத்தைப் பார்க்கிலும் மிகவும் வேதனையானது ஆகும். ஏனெனில், இது நம் மனச்சாட்சியையும், உள்ளான மனிதனையும் பாதிக்கிறது. பாவத்துக்கு அடிமைகளாக இருப்பவர்கள் தேவனுடைய குடும்பத்தின் ஒரு அங்கமாக இருக்க முடியாது. அனேக நல்ல மனிதர்கள் பாவ சோதனைகளுக்கு இடம் கொடுத்து பாவ வாழ்க்கையில் சிக்கிக் கொள்கிறார்கள். கெட்ட பழக்க வழக்கங்களைக் குறித்த விஷயத்தில், இதை நான் விட்டுவிட நினைக்கும்போது அல்லது நான் முடிவெடுத்துவிட்டால் உடனடியாக எளிதில் நிறுத்திவிட முடியும் என்று ஜனங்கள் சொல்வதுண்டு. ஆனால், எத்தனை வருடமானாலும் அவர்களில் ஒரு மாற்றமும் இருக்காது. ஏன்?
“பாவஞ்செய்கிறவன் எவனும் பாவத்துக்கு அடிமையாயிருக்கிறான்” என்று இயேசு சொல்கிறார். ஒரு பாவி தன் எஜமானனாகிய பாவத்திற்கு கீழ்ப்படியாமல் இருப்பதற்கு எவ்வித சுயாதீனமும் இல்லாதவராக இருக்கிறார். இன்று கிடைக்கக் கூடிய அனைத்து விதமான மருந்துகளில், எந்த மருந்தும் பாவத்தில் இருந்து விடுதலையைத் தர முடியாது. குமாரன் நம்மை விடுதலையாக்குகிறார் என்று இயேசு சொல்கிறார். இயேசு நம்மை பாவ அடிமைத்தனத்தில் இருந்து விடுதலையாக்கி, நீதியின் ஊழியக்காரராக மாற்றுகிறார் (ரோமர் 6:22). இயேசு நம்மை பாவத்தில் இருந்து எப்படி விடுதலையாக்குகிறார்? “சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்” என்று அவர் சொல்கிறார் (வசனம் 32). இயேசுவே அந்த சத்தியம். வேதாகமத்தில் நாம் தேவனுடைய சத்தியத்தை வாசிக்கும்போது, நாம் இயேசுவைப் பற்றி அதிகம் அறிந்து கொள்கிறோம். அவர் நம்மை எவ்வித பாவ அடிமைத்தனத்தில் இருந்தும் விடுவிக்கிறார். “ஆகையால் குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்.”
பயன்பாடு: பலவிதமான பாவங்களும், பாவச் சோதனைகளும் இருக்கின்றன. அனேகருக்கு தங்கள் பாவ வாழ்க்கையை ஒத்துக் கொள்வது கடினமானதாக இருக்கிறது. நான் அவர்களைப் போல இருக்கக் கூடாது. “நமக்குப் பாவமில்லையென்போமானால், நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது. நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்” (1 யோவான் 1: 8, 9) என்று வேதம் சொல்கிறது. ஆகவே, உலகப் பிரகாரமான பொய்களால் என்னை நான் வஞ்சித்துக் கொள்வதற்குப் பதிலாக, தேவனுடைய மன்னிப்பும், சுத்திகரிப்பும் தேவைப்படுகிற ஒரு பாவி என்று ஒப்புக் கொண்டு அறிக்கை செய்வேன். அப்பொழுது, இயேசு என்னை பாவ வாழ்க்கையில் இருந்து விடுவித்து, எனக்கு பரிசுத்தத்தையும் நித்திய ஜீவனையும் தருகிறார். நான் இயேசுவின் போதனையையும் சத்தியத்தையும் கடைபிடிக்கும்போது, பாவமில்லாத ஒரு வாழ்க்கையை வாழ அவர் எனக்கு உதவுகிறார். நான் தேவனுடைய பிள்ளையாக இருக்கிறேன். நான் இனி பாவத்திற்கு அடிமை அல்ல.
ஜெபம்: இயேசுவே, பாவங்களில் இருந்து விடுதலையை நான் பெற்றனுபவிக்க நீர் உண்டுபண்ணி வைத்திருக்கிற ஏற்பாட்டுக்காக உமக்கு நன்றி. இன்றும் நீர் ஜனங்களை விடுவிக்கிறீர். ஆண்டவராகிய இயேசுவே, உம்மால் கூடாதது என்று எதுவுமில்லை. உம்மைக் குறித்தும் உம் சத்தியத்தைக் குறித்தும் நான் இன்னும் அதிகம் அறிந்து கொள்ள எனக்கு உதவும். உம் பரிசுத்தத்திலும் நீதியிலும் வாழ்வதற்கு எப்பொழுதும் எனக்கு அனுக்கிரகம் தாரும். ஆமென்.- அற்புதராஜ் சாமுவேல் +91 9538328573
Day - 152
No comments:
Post a Comment