வாசிக்க: 1 நாளாகமம் 1, 2; நீதிமொழிகள் 17; யோவான் 16: 16-33
வேத வசனம்: யோவான் 16: 33. என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும் பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார்.
கவனித்தல்: தம் சிலுவை மரணத்திற்கு முன், வரவிருக்கும் சவால்கள் மற்றும் சோதனைகளை எதிர்கொள்ள தம் சீடர்களை இயேசு ஆயத்தப்படுத்தினார். அந்த நேரத்தில், இயேசுவின் சீடர்கள் தங்களுடைய எதிர்காலத்தைக் குறித்து அறியாதவர்களாக இருந்தாலும், இயேசு அனைத்தையும் அறிந்திருக்கிறார் என்று அவர்கள் நம்பினார்கள். தன் பாடுகள் மற்றும் சிலுவை மரணம் பற்றி முழுமையாக அறிந்திருந்த இயேசு பயத்தில் பேசிக்கொண்டிருக்கவில்லை. மாறாக, சமாதானத்தைக் குறித்த உறுதியை அவர்களுக்குக் கொடுத்தார். இயேசு சொன்னது போல, நாமனைவரும் நம் வாழ்வில் உபத்திரவத்தை காண்போம்; உபத்திரவத்தின் அளவு மட்டுமே நபருக்கு நபர் வேறுபடுகிறது. “உபத்திரவம்” என்கிற வார்த்தையானது பாடுகள், கஷ்டங்கள், வேதனைகள், கவலைகள், சோதனைகள், மற்றும் இழப்பு ஆகியவற்றைக் குறிக்கிறதாக இருக்கிறது. இந்த வாழ்வில் நாமனைவருமே உபத்திரவத்தை உடையவர்களாக இருந்தாலும், இயேசு சொன்னது போல, அவரில் நாம் சமாதானத்தைப் பெற்றனுபவிக்க முடியும். இங்கு, எதிர்காலத்தில் நீங்கள் என் சமாதானத்தைப் பெறுவீர்கள் என்று இயேசு சொல்லவில்லை. இயேசுவின் சமாதானம் நம் சுதந்திரம்; எந்தச் சூழ்நிலையிலும் நாம் இந்த சமாதானத்தைப் பெற்றனுபவிக்க முடியும் என்பதை நாம் நினைவில் கொள்வோமாக. தன் சீடர்களுக்கு பொய் வாக்குறுதிகளைத் தருவதற்குப் பதிலாக, அவர்களை கலங்காமல் உறுதியாக இருக்கும்படி, இயேசு உற்சாகப்படுத்தினார். தம் சீடர்களின் எதிர்கால உபத்திரவம் பற்றி இயேசு பேசிய போது, அவர் தம் வெற்றியை பறைசாற்றினார். கிறிஸ்துவின் சமாதானம் மட்டுமல்ல, அவருடைய வெற்றியும் நமக்குச் சொந்தமானது ஆகும். நம் வாழ்நாளெல்லாம் இந்த உலகமானது கஷ்டத்தைத் தவிர வேறெதையும் தருவதில்லை. இயேசுவோ தம் சமாதானத்தைத் தந்து நம் வாழ்வில் எதையும் எதிர்கொள்ளும்படி நம்மைப் பெலப்படுத்துகிறார். நாம் செய்ய வேண்டியதெல்லாம் என்னவெனில், இயேசு கிறிஸ்துவில் வாழ்வதுதான்.
பயன்பாடு: இயேசு சமாதானத்தைத் தருகிறார்; இந்த உலகமோ உபத்திரவத்தையும் கஷ்டத்தையும் தருகிறது. கஷ்ட நேரங்களின் போது இயேசுவின் சமாதானத்தை நான் அனுபவிக்க அவர் என் இருதயத்தை ஆயத்தம் செய்கிறார். நான் இயேசு கிறிஸ்துவில் வாழும்போது, நான் எந்த பொல்லாங்கையோ அல்லது கஷ்டத்தையோ எதிர்கொண்டாலும் நான் பயப்படமாட்டேன் (சங்.3:6). உலகப் பிரகாரமான உபத்திரவங்களும் கஷ்டங்களும் இயேசுவை விட்டு என்னைப் பிரிக்க முடியாது. அப்போஸ்தலனாகிய பவுல் எழுதுவது போல, “உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ, நாசமோசமோ, பட்டயமோ? இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே” (ரோமர் 8:35-37). நான் இயேசுவிலும் அவருடைய அன்பிலும் நிலைத்திருக்கும்போது, சிலுவையில் அவர் பெற்ற வெற்றியை நான் அனுபவிக்க என்னைப் பலப்படுத்துகிறார். இயேசு தன் சமாதானத்தையும் வெற்றியையும் அவருடைய அன்பின் பரிசாக எனக்குத் தந்திருக்கிறார்.
ஜெபம்: இயேசுவே, நீர் எனக்குத் தருகிற சமாதானத்துக்காக உமக்கு நன்றி. நான் உம்மில் நிலைத்திருக்கும்போது மட்டுமே உம் சமாதானத்தைப் பெற்றனுபவிக்க முடியும். ஆண்டவரே, என் கண்களை, உலகப் பிரகாரமான கஷ்டங்கள் மீது அல்ல, உம் மீது வைக்க உதவியருளும். சிலுவையில் நீர் உலகத்தை ஜெயித்தீரே, நன்றி! அன்பின் ஆண்டவரே, உம்மில் நிலைத்திருக்கவும், உம் அன்பை ருசிக்கவும், உம் அன்பை உலகத்திற்குக் காண்பிக்கவும் எனக்கு உதவும். ஆமென்.+91 9538328573
Day - 168
No comments:
Post a Comment