வாசிக்க: 2 இராஜாக்கள் 21, 22; நீதிமொழிகள் 15; யோவான் 15: 18-27
வேத வசனம்: யோவான் 15:18. உலகம் உங்களைப் பகைத்தால், அது உங்களைப் பகைக்கிறதற்குமுன்னே என்னைப் பகைத்ததென்று அறியுங்கள்.
19. நீங்கள் உலகத்தாராயிருந்தால், உலகம் தன்னுடையதைச் சிநேகித்திருக்கும்; நீங்கள் உலகத்தாராயிராதபடியினாலும், நான் உங்களை உலகத்திலிருந்து தெரிந்துகொண்டபடியினாலும், உலகம் உங்களைப் பகைக்கிறது.
கவனித்தல்: பிரச்சனைகளே இல்லாத வாழ்க்கையை இயேசு ஒருபோதும் வாக்குப்பண்ண வில்லை. அவரைப் பின்பற்றுபவர்களுக்கு என்ன நடக்கும் என்பதை முன்னமே அறிவித்திருக்கிறார். இயேசு தன் சீடரை நேசிக்கும் அதே நேரத்தில், உலகமோ அவர்களை வெறுக்கக் கூடும். ஒரு பெரிய பாவியான மனிதன் கிறிஸ்தவனாக மாறி ஒரு பயனுள்ள வாழ்க்கையை வாழ ஆரம்பித்தாலும் கூட, அவர்களுடைய வாழ்க்கையில் உள்ள மாற்றத்தைக் கண்டு இந்த உலகம் மகிழ்ச்சி அடைவதில்லை. மாறாக, அப்படிப் பட்டவர்களை இந்த உலகமானது அவமதித்து கேலி செய்கிறது. இது நாம் எல்லா இடங்களிலும் காண்கிற ஒரு காட்சி!
யோவான் 15ல், இந்த உலகமானது தன் சீடர்களை ஏன் வெறுக்கிறது என்பதற்கான மூன்று காரணங்களை இயேசு தருகிறார்: முதலாவதாக, நம்மை இந்த உலகம் வெறுத்து ஒதுக்குவதற்கு முன்பே, அது கிறிஸ்துவை ஒதுக்கி விட்டது. இயேசு ஒரு முன்மாதிரியான வாழ்க்கையை வாழ்ந்தார், அனேக அற்புதங்களைச் செய்தார், மற்றும் தேவனைப் பற்றிய ஆழமான சத்தியங்களைப் போதித்தார். ஆயினும், அவருடைய ஜனங்கள் அவரை ஏற்றுக் கொள்ள வில்லை. தங்களுடைய வாழ்க்கை முறை மற்றும் பாரம்பரிய அமைப்புகளுக்கு ஒரு அச்சுறுத்தலாக இயேசு இருக்கிறார் என கருதினபடியினால், அவரை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இரண்டாவதாக, நாம் இந்த உலகத்திற்குரியவர்கள் அல்ல என்று இயேசு சொல்கிறார். வேறு விதமாகச் சொல்வதானால், நாம் இந்த உலகத்துடன் இணைக்கப்படாமல், இயேசுவுடன் இணைந்து செயல்படுகிறவர்களாக இருக்கிறோம். நாம் இந்த உலகத்தில் இருந்தாலும், உலகப்பிரகாரமான வாழ்க்கையை வாழாமல், எவ்விதத்திலும் இயேசுவைப் பின்பற்ற முயற்சி செய்கிறோம். இந்த உலகத்தின் மக்களுக்கு நம் வித்தியாசமான மாற்றப்பட்ட வாழ்க்கையானது கேலிக்குரியதாக தோன்றுகிறது. நாம் தேவனுக்காக வாழும்படி தெரிந்தெடுக்கப்பட்ட, வேறுபிரிக்கப்பட்டவர்கள் என்பதை அவர்கள் புரிந்து கொள்வதில்லை. மூன்றாவதாக, இந்த உலகமானது தேவனை அறியவில்லை. தேவன் அறியமுடியாதவராக அவர்களுக்கு இருக்கிறார் என்பது அல்ல இதன் அர்த்தம். அனேகர் தேவனுக்கு உண்மையாக/விசுவாசமாக இருப்பதைக் காட்டிலும் தங்கள் உலக சம்பிரதாயங்கள் மற்றும் பாரம்பரியங்களுக்கு அதிக உண்மையுள்ளவர்களாக இருக்கிறபடியால் தேவனை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள்.
இங்கு, அனைத்து கிறிஸ்தவர்களும் உபத்திரவத்தை எதிர்கொள்வார்கள் என்றோ அல்லது கிறிஸ்தவனின் வாழ்க்கையில் உள்ள எல்லா பிரச்சனைகளுக்கும் காரணம் கிறிஸ்துவின் மீதான விசுவாசமே காரணம் என்றோ இயேசு சொல்ல வில்லை. மேலும், உபத்திரவத்தை சந்திக்கிற கிறிஸ்தவரே உண்மைக் கிறிஸ்தவர், மற்றவர்கள் பெயரளவிலேயே கிறிஸ்தவர்கள் என்பதை இது குறிக்காது. இந்த உலகத்தின் வெறுப்பை நாம் எப்போதாகிலும் எதிர்கொள்ள நேர்ந்தால் நினைவு கூரும்படி இயேசு இவ்வார்த்தைகளைச் சொல்கிறார். இயேசு நம் பாடுகளில் தம்மை அடையாளப்படுத்திக் கொள்கிறார்; அவர் நமக்கு உதவி செய்ய வல்லவராக இருக்கிறார் என்பதை நாம் மறந்து விடாமல் இருப்போமாக. நம்மை வெறுக்கிறவர்களை நாமும் வெறுக்க வேண்டிய தேவை இல்லை. “பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே” என்று இயேசு ஜெபித்தது போல, நாம் நம்மை வெறுப்பவர்களுக்காக ஜெபிக்கலாம் (லூக்கா.23:34).
பயன்பாடு: இந்த முழு உலகமும் இயேசுவை வெறுத்தாலும், நான் இயேசுவை நேசிப்பேன். ஏனெனில், அவர் என் வாழ்க்கையில் உள்ள எல்லா இருளையும் நீக்கினார். இயேசுவுடனான என் புதிய வாழ்க்கையில் நான் மகிழ்ச்சியுடன் இருக்க அவர் எனக்கு தம் ஜீவனையும் வெளிச்சத்தையும் தந்திருக்கிறார். வெளிப்பிரகாரமாக எனக்கு என்ன நேர்ந்தாலும் அது என்னை சேதப்படுத்துவதில்லை. இயேசு எனக்குள் வாழ்கிறபடியால், இந்த உலகத்திற்கு கிறிஸ்துவின் அன்பைக் காட்டவும், எந்த வெறுப்பும் இன்று மன்னிக்கவும் தயாராக இருக்க வேண்டும். ஏனெனில், நான் எல்லாவற்றிலும் இயேசுவை பின்பற்ற தீர்மானித்திருக்கிறேன்.
ஜெபம்: இயேசுவே, இந்த உலகத்தை எதிர்கொள்ளவும், எல்லா சூழ்நிலைகளிலும் உம்மைப் பின்பற்றவும் என் இருதயத்தை ஆயத்தம் பண்ணுகிறதற்காக உமக்கு நன்றி. ஆண்டவரே, ஒருவரில் ஒருவர் அன்பாயிருக்கும்படி நீர் என்னை அழைத்திருக்கிறீர். என்னை வெறுப்பவர்களுக்கும் உம் அன்பைக் காண்பிக்க எனக்கு உதவும். என் இரட்சகரே, வெறுப்பவர்களை மன்னிக்க எனக்கு உம் பலத்தைத் தாரும். ஆமென்.- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573
Day - 166
No comments:
Post a Comment