வாசிக்க: 1 நாளாகமம் 15, 16; நீதிமொழிகள் 24; யோவான் 20: 1-18
வேத வசனம்: 1 நாளாகமம் 16: 35. எங்கள் ரட்சிப்பின் தேவனே, நாங்கள் உமது பரிசுத்த நாமத்தைப் போற்றி, உம்மைத் துதிக்கிறதினால் மேன்மைபாராட்டும்படிக்கு, எங்களை ரட்சித்து, எங்களைச் சேர்த்துக்கொண்டு, ஜாதிகளுக்கு எங்களை நீங்கலாக்கியருளும் என்று சொல்லுங்கள்.
36. இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு சதாகாலங்களிலும் ஸ்தோத்திரம் உண்டாவதாக, அதற்கு ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லிக் கர்த்தரைத் துதித்தார்கள்.
கவனித்தல்: 1 நாளாகமம் 16:8-36 வசனங்களில் நாம் காணும் தாவீதின் பாடலானது,சங்கீதம் 96:1-13; 105:1-15; மற்றும் 106:1, 47,48 என மூன்று சங்கீதங்களின் வசனங்களுக்கு ஒத்திருக்கிறது கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியை எருசலேமுக்குக் கொண்டுவந்து, ஜெபிக்க, துதிக்க, மற்றும் ஆராதிக்க லேவியரை ஏற்படுத்திய போது இப்பாடலை தாவீது பாட கொடுத்ததாக வாசிக்கிறோம். ஆனால், சங்கீதம் 96, 105, மற்றும் 106 ஆகிய மூன்று சங்கீதங்களும், சிறைப்பட்டுப் போன இஸ்ரவேலர்கள் நாடு திரும்பிய பின்பு, எழுதப்பட்டவை ஆகும். 1 நாளா.16:35, 36ல் உள்ள வசனங்கள் சங்கீதம் 106:47, 48 க்கு ஒத்ததாக இருக்கிறது. 1 நாளா 16:35ல் உள்ள ஜெபமானது லேவியருக்குக் கொடுக்கப்பட்ட மூன்று கடமைகளுடன் மிகவும் தொடர்புடையதாக இருப்பது சுவராசியமானது ஆகும். விடுதலைக்கான ஜெபம் செய்து, தேவனைத் துதித்து, நன்றிசெலுத்தும்படி , 1நாளா.16:35 நம்மை அழைக்கிறது. “அதற்கு ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லிக் கர்த்தரைத் துதித்தார்கள்” என்று 1 நாளா.16:36 ல் நாம் வாசிக்கிறோம். மறுபுறம் சங்கீதம் 106ல், சங்கீதக்காரன் தன் ஜெபத்தை முடித்த பின்பு, “ஜனங்களெல்லாரும்: ஆமென், அல்லேலூயா என்பார்களாக” என்று ஜனங்களுக்கு அழைப்பு விடுக்கிறார். வித்தியாசத்தைக் கவனித்துப் பாருங்கள்!
இந்த ஜெபத்தில், “உம்மைத் துதிக்கிறதினால் மேன்மைபாராட்டும்படிக்கு” என்ற ஒரு தனித்துவமான ஜெப சொற்றொடரை நாம் காண்கிறோம். முழு வேதாகமத்திலும் மூல மொழியில் இந்த சொற்றொடரானது இந்த இரண்டு வேதபகுதிகளில் மட்டுமே வருகிறது. இந்தப் பாடல் மூன்று காரியங்களை நமக்கு நினைவுபடுத்துகிறது: நாம் எந்தக் காலத்தில் வாழ்ந்தாலும், தேவனே நம் இரட்சகராக இருக்கிறார்; அவர் நம்மை ஒன்றுசேர்க்கிறார் மற்றும் விடுவிக்கிறார்; நாம் அவருடைய பரிசுத்த நாமத்தை போற்றி துதித்து, அவரைத் துதிப்பதில் மேன்மை பாராட்ட வேண்டும். இந்த ஜெபமானது நம் தற்கால சூழ்நிலைக்கு மிகவும் ஏற்றதாக இருக்கிறது. இந்த ஜெபத்தில் “ஜாதிகள்” என்ற வார்த்தையானது தேவ ஜனங்களின் எதிரிகளைக் குறிக்கிறது. நம் அனுதின வாழ்க்கையைப் பாதிக்கிற கண்ணுக்குத் தெரியாத பல எதிரிகளுடன் நாம் போராடிக்கொண்டிருக்கிறோம். தேவனேயன்றி, யார் நம்மை இரட்சித்து, ஒன்று சேர்த்து, விடுவிக்கக் கூடும்? அனேக உத்தம/உண்மை கிறிஸ்தவர்கள் நம் காலத்தில் நிலவும் பல மோசமான பிரச்சனைகளில் இருந்து தேவன் விடுதலை கொடுக்க வேண்டும் என ஊக்கமாக ஜெபித்துக் கொண்டிருக்கிறார்கள். நாம் செய்ய/சொல்ல வேண்டியதெல்லாம் என்னவெனில், “ஆமென்,” “கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.”
பயன்பாடு: என் தேவன் எல்லா மனிதருடைய சரீர மற்றும் ஆவிக்குரிய சுகத்தை விரும்பும் இரட்சகர் ஆவார். நான் அவரை நோக்கி ஜெபிக்கும்போது, அவர் பதிலளித்து எனக்கு விடுதலை தருகிறார். கர்த்தருடைய நாமம் என்னைப் பாதுகாக்கும் வலிமையான அரண் ஆகும். நான் என் தேவனைத் துதித்து அவருக்கு நன்றி செலுத்துகிறேன்; அவர் என் ஜெபங்களுக்குச் செவிகொடுக்கிறார். அவரைத் துதிப்பதில் நான் மேன்மை பாராட்டுகிறேன். என் தேவன் மகிமையின் ராஜா ஆவார். இஸ்ரவேலரின் தேவனே சகல மனிதருக்கும் தேவனாக இருக்கிறார். எனவே, நான் சொல்வது: “ஆமென்,” “கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.”
ஜெபம்: பிதாவாகிய தேவனே, என் இரட்சகராக நீர் இருப்பதற்காக உமக்கு நன்றி. ஆண்டவரே, நான் எப்பொழுதும் வந்து தஞ்சமடையக் கூடிய கன்மலை நீரே. என் வாழ்க்கையில் உம் இரட்சிப்பையும், அன்பையும் அனுபவிக்கவும் ருசிக்கவும் கொடுத்த உம் கிருபைக்காக உமக்கு நன்றி. “இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு சதாகாலங்களிலும் ஸ்தோத்திரம் உண்டாவதாக.” ஆமென்.- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573
Day - 175
No comments:
Post a Comment