வாசிக்க: 2 இராஜாக்கள் 23-25; நீதிமொழிகள் 16; யோவான் 16: 1-15
வேத வசனம்: நீதிமொழிகள் 16: 18. அழிவுக்கு முன்னானது அகந்தை; விழுதலுக்கு முன்னானது மனமேட்டிமை.
கவனித்தல்: பெருமையினால் வரும் ஆபத்துகள் பற்றி வேதாகமம் அடிக்கடி கூறுகிறது. நீதிமொழிகள் 16:18 வேதாகமத்தில் அதிகம் மேற்கோள் காட்டப்படுகிற வசனங்களில் ஒன்று ஆகும். மற்றவர்களை எச்சரிக்க, அறிவுரை கூற கிறிஸ்தவர்கள் இந்த வசனத்தைப் பயன்படுத்துகின்றனர். மனித குல வரலாற்றில், தங்கள் பெருமையின் நிமித்தமாக தங்களிடம் இருந்த அனைத்தையும் இழந்த மாபெரும் அரசர்கள் மற்றும் மனிதர்கள் பற்றிய குறிப்புகளை நாம் காணலாம். ஆதாம் ஏவாளின் முதல் பாவமானது வாழ்க்கையைப் பற்றிய பெருமையுடன் தொடர்புடையது என்பதை நாம் அறிவோம். முதல் மனிதனின் வீழ்ச்சிக்கு முன்பே, லூசிபர் பிசாசு தன் மேன்மையான ஸ்தானத்தை பெருமையின் நிமித்தம் இழந்தான் என்று வேதம் சொல்கிறது (ஏசாயா 14:12-15). தங்கள் பெருமையின் காரணமாக தங்கள் மகிமையை இழந்தவர்களைப் பற்றிச் சொல்ல இந்த இடம் போதாது. பரிசுத்த வேதாகமம் பெருமைக்கு எதிராக திட்டவட்டமாக போதிக்கிறது. மனித பெருமை அல்லது அகங்காரத்துக்கு ஆதரவாக வேதாகமத்தில் ஒரு வசனம் கூட கிடையாது.
தேசிய பெருமை, சமுதாயப் பெருமை, மதரீதியான பெருமை, சாதனைகள் மற்றும் உடைமைகள் பற்றிய பெருமை என பலவிதமான பெருமைகளை நாம் காணலாம். இந்த உலகமானது தன் வரலாற்றில் இருந்து பெருமை பற்றி எதுவும் கற்றுக் கொள்ளவில்லை என்பதாக தோன்றுகிறது. சிலர் பெருமையானது சாத்தானிடம் இருந்து வருகிறது என்று நினைக்கின்றனர். அது உண்மைதான் என்றாலும், ஒருவரின் வாழ்வில் பெருமையைத் தூண்டுவதற்கு அவன் ஒருபோதும் நேரடியாக வருவதில்லை. அனேகர் தங்களுடைய திறமைகள், வெற்றிகள், சாதனைகள், சமுதாய மற்றும் கல்வி நிலை ஆகியவற்றைக் கண்டு பெருமை எனும் வலையில் விழுந்து விடுகிறார்கள். பெரும்பாலும், பெருமையானது வாழ்க்கையின் உண்மை நிலையை அறிந்து கொள்ள ஒரு மனிதனை அனுமதிப்பதில்லை. ஏனெனில், அவர் தன்னைப் பற்றி மிதமிஞ்சிய சுய மரியாதை உடையவராக இருக்கிறார். தஙகளுடைய பெருமையின் நிமித்தமாக ஜனங்கள் தேவனை நிராகரித்து, ஏற்றுக் கொள்வதில்லை. மேலும் சக மனிதர்களையும் சரியாக நடத்துவதில்லை. நம் காலத்திலும் கூட, பெருமை உள்ளவர்களின் பரிதாபமான முடிவை நாம் காண்கிறோம். பெருமைக்கு எதிராக வேதாகமம் தெளிவாக எச்சரிக்கும் அதே வேளையில், நம் அனுதின வாழ்வில் தாழ்மையுடன் வாழ நம்மை அழைக்கிறது. “நீங்களெல்லாரும் ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து, மனத்தாழ்மையை அணிந்துகொள்ளுங்கள்; பெருமையுள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்” (1 பேதுரு 5:5) என்று அப்போஸ்தலனாகிய பேதுரு எழுதுகிறார்.
பயன்பாடு: ஒரு காலத்தில் ஒன்றுமில்லாதவர்களாக விரும்பத்தகாதவர்களாக இருந்தவர்களை தேவன் எப்படி உயர்த்தினார் என்பது பற்றிய பல விவரங்களை வேதாகமம் சொல்கிறது. தேவனைப் பிரியப்படுத்துகிற தாழ்மையுள்ள வாழ்க்கைக்கு இயேசுவின் வாழ்க்கை மிகச் சரியான முன் மாதிரி ஆகும். என்னிடம் அனேக ஆவிக்குரிய உலகப் பிரகாரமான வரங்கள், தாலந்துகள் இருக்கலாம். ஆயினும் என்னிடம் அன்பும் தாழ்மையும் இல்லையேல், அதனால் ஒருவருக்கும் பயன் இருக்காது. நான் தேவனுடன் மனத்தாழ்மையுடன் நடக்க வேண்டும் என அவர் விரும்புகிறார் (மீகா 6:8). அன்பு மற்றும் மனத்தாழ்மை தவிர, வேறு எதை தேவன் என்னிடம் எதிர்பார்க்கிறார்?
ஜெபம்: தந்தையாகிய தெய்வமே, பெருமைக்கு எதிராக வேதாகமத்தில் அனேக எச்சரிக்கைப் பலகைகளை வைப்பதற்காக உமக்கு நன்றி. ஆண்டவரே, எந்தவிதமான மனிதப் பெருமையிலும் நான் விழுந்துவிடாதபடிக்கு என்னைக் காத்துக் கொள்ளும். நான் பெருமையில் அழிய அல்ல, நித்திய வாழ்வை வாழ நீர் என்னை அழைத்திருக்கிறீர். இயேசுவே, உம் அடிச்சுவடுகளைப் பின்பற்ற எனக்கு உதவும். ஆமென்.
- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573
Day - 167
No comments:
Post a Comment