வாசிக்க: 2 இராஜாக்கள் 11, 12; நீதிமொழிகள் 10; யோவான் 13: 1-20
வேத வசனம்: யோவான் 13:12. அவர்களுடைய கால்களை அவர் கழுவினபின்பு, தம்முடைய வஸ்திரங்களைத் தரித்துக்கொண்டு, திரும்ப உட்கார்ந்து, அவர்களை நோக்கி: நான் உங்களுக்குச் செய்ததை அறிந்திருக்கிறீர்களா?
13. நீங்கள் என்னைப் போதகரென்றும், ஆண்டவரென்றும் சொல்லுகிறீர்கள். நீங்கள் சொல்லுகிறது சரியே, நான் அவர்தான்.
14. ஆண்டவரும் போதகருமாகிய நானே உங்கள் கால்களைக் கழுவினதுண்டானால், நீங்களும் ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள். 15. நான் உங்களுக்குச் செய்ததுபோல நீங்களும் செய்யும்படி உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்.
கவனித்தல்: இந்தியாவில், பெரியவர்கள் மற்றும் ஆசிரியர்களின் கால்களைக் கழுவுதல் என்பது அவர்களைக் கனப்படுத்துகிற, கவுரவிக்கிற ஒரு செயலாகக் கருதப்படுகிறது. மதிப்பிற்குரிய ஒருவர் தாழ்ந்த அல்லது வயதில் இளையவராக இருப்பவரின் கால்களைக் கழுவுகிறார் என்பது வழக்கத்தில் இல்லாத ஒன்று ஆகும். யூதப் பாரம்பரியத்தில், ஒருவருடைய “பாதரட்சையின் வாரை அவிழ்ப்பது” என்பது மிகவும் இழிவான ஒரு வேலையாகக் கருதப்பட்டது (யோவான் 1:27). இங்கு, இயேசு தன் சீடர்களின் கால்களைக் கழுவினார் என்று நாம் வாசிக்கிறோம். வேலைக்காரனாக இருந்தால் கூட ஒரு யூதன் இப்படி செய்ய மாட்டான், ஒரு அடிமை மட்டுமே இந்த வேலையை செய்வான். இயேசுவின் தாழ்மையானது எந்த கலாச்சார மற்றும் சமுதாய நடைமுறைகளுக்கும் அப்ப்பாற்பட்டது ஆகும். எதேனும் கட்டாயத்தின் பேரில் இயேசு இதைச் செய்ய வில்லை. தன் தாழ்மையை சீடர்கள் பின்பற்றும்படி அவர்களுக்கு ஒரு முன் மாதிரியை அவர் வைத்தார். இது ஒருவர் விரும்பினால் மட்டுமே செய்யும்படி தெரிவு செய்கிற ஒரு காரியம் அல்ல. இயேசு தன் சீடர்கள் அனைவரும் மற்றவர்களுக்கு சேவை செய்வதில் தாழ்மையுள்ளவர்களாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்.
“உங்களுக்குள்ளே அப்படி இருக்கலாகாது” என்று முன்பு தன் சீடர்களிடம் இயேசு உறுதியாகச் சொல்லி, உலக அதிகாரிகள் போல அவர்கள் இருக்கக் கூடாது என்று அவர் எச்சரித்தார் (மத். 20: 26; லூக்கா 22:27). இயேசுவின் சீடர்கள் தங்களிடம் உள்ள அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தக் கூடாது. மாறாக, ஜனங்களுக்கு தாழ்மையுடன் சேவை செய்ய வேண்டும். யோவான் 13ல், மற்றவர்களுக்கு தாழ்மையுடன் சேவை செய்வது பற்றிய தன் முன் மாதிரியை காண்பிக்கிறார். உங்கள் ஆராதனை ஒழுங்குகளில் அல்லது முக்கியமான நிகழ்ச்சிகளில் “கால்களைக் கழுவுதல்” நிகழ்ச்சியை வைக்க வேண்டும் என்று இயேசு சொல்லவில்லை. மாறாக, நம் அனுதின வாழ்வில் மனத்தாழ்மையை வெளிப்படுத்தி நாம் வாழ வேண்டும் என விரும்புகிறார். இயேசுவைப் போல, கிறிஸ்தவர்களாகிய நாம் கர்த்தருக்காக எந்த வேலையையும், ஒருவரும் செய்ய விரும்பாத வேலையாக அது இருந்தாலும் கூட அதை, செய்யத் தயாராக இருக்க வேண்டும். நம்மை இரட்சிப்பதற்காக இயேசு தம்மைத்தாமே தாழ்த்தினார் என்பதை நினைவில் கொள்வோம். நம் வாழ்வில், கிறிஸ்து இயேசுவிடம் இருந்த அதே சிந்தையை உடையவர்களாக இருப்போம் (பிலி. 2:5-11).
பயன்பாடு: இயேசுவின் முன்மாதிரியான வாழ்க்கை எல்லா வயதினருக்கும் எக்காலத்திலும் பொருத்தமானதாக இருக்கிறது. ஆயினும், அன்பு மற்றும் மனத்தாழ்மை இல்லாமல், என் ஆண்டவராகிய இயேசுவின் அடிச்சுவடுகளை நான் பின் தொடர முடியாது. உலக பதவிகள் மற்றும் அதிகாரங்கள் மீது என் கவனம் இருக்கக் கூடாது. மக்களுக்குச் சேவை செய்வது தொடர்பான உலக எதிர்பார்ப்புகள் மற்றும் யூகங்களின் அடிப்படையில் நான் வேலை செய்ய மாட்டேன். தேவையில் இருக்கும் ஜனங்களுக்கு சேவைசெய்ய நான் ஆயத்தமாக இருப்பேன். அவர்களுக்காக என்னால் இயன்றதைச் செய்வேன்.
ஜெபம்: இயேசுவே, என் முன் நீர் வைத்திருக்கிற சிறந்த முன்மாதிரிக்காக உமக்கு நன்றி. ஆண்டவரே, அன்பிலும் மனத்தாழ்மையிலும் உம்முடன் நடக்க என் கால்களைப் பெலப்படுத்தி அருளும். ஆமென்.- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573
Day - 161
No comments:
Post a Comment