வாசிக்க: 1 இராஜாக்கள் 21, 22 ; நீதிமொழிகள் 4 ; யோவான் 10: 1-21
வேத வசனம்: நீதிமொழிகள் 4: 23. எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதினிடத்தினின்று ஜீவஊற்று புறப்படும்.
கவனித்தல்: ஜனங்கள் தங்களிடம் உள்ள விலைமதிப்பற்ற பொருள்களுக்கு அதிகபட்ச பாதுகாப்பு கொடுக்கின்றனர். அவர்களுடைய தகுதிக்கேற்ப, அவர்களுடைய அதிக விலை மதிப்புள்ள அருமையான பொருட்களை பாதுகாப்பான ஒரு இடத்தில் வைத்து பாதுகாக்கின்றனர். ஆதியாகமம் முதல் வெளிப்படுத்தல் புத்தகம் வரைக்கும், “இருதயம்” என்ற வார்த்தையானது 1000க்கும் அதிகமான முறை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இங்கே, அன்புள்ள தகப்பன் தன் பிள்ளைக்குச் சொன்ன ஞானமுள்ள வார்த்தைகளை நாம் பார்க்கிறோம். ”எல்லாக் காவலோடும்” என்று வரும் சொற்றொடர் நம் இருதயத்தை பாதுகாக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. சரீரப்பிரகாரமாகவும் ஆவிக்குரியப் பிரகாரமாகவும், நீண்ட ஆயுளுக்கு ஆரோக்கியமான இருதயம் மிகவும் முக்கியம் ஆகும். வேதாகமத்தின்படி, நம் இருதயத்தைப் பாதுகாப்பதற்கான முதல் படி என்னவெனில், அதில் தேவனுடைய வார்த்தையை வைத்து பாதுகாப்பதுதான் (வ.21). வெறுமையான ஒரு இருதயமானது எளிதில் பிசாசின் தாக்குதல்களுக்கு உள்ளாகும் என்றும், வாழ்க்கையை மோசமானதாக்கும் என்றும் இயேசு எச்சரித்தார் (மத்.12:45). “நான் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாதபடிக்கு, உமது வாக்கை என்னிருதயத்தில் வைத்து வைத்தேன்” என்று சங்கீதக்காரன் எழுதுகிறார் (சங்.119:11). நாம் தேவனுடைய வார்த்தையை நம் இருதயத்தில் வைக்கும்போது, தேவனுடைய வார்த்தையானது நமக்குள்ளும் நம் மூலமாகவும் செயல்பட அனுமதிக்கும்போது, நம் நலத்துக்கான மீதமுள்ள அனைத்து வேலைகளையும் தேவனுடைய வார்த்தையானது செய்து, பாவம் செய்வதில் இருந்து நம்மை பாதுகாக்கிறது.
“இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும்” என்று வேதம் சொல்கிறது (மத்.12:34). நாம் இங்கு வாசிப்பது போல, நம் இருதயமானது ஜீவ ஊற்று ஆகும். அதில் இருந்துதான் நாம் செய்யும் அனைத்தும் வெளிவருகின்றன (வ.23). பொல்லாத சிந்தனைகள் மற்றும் தீய செயல்கள் அனைத்தும் ஒரு நபரின் இருதயத்தில் இருந்து வருகின்றன என்று இயேசு சொன்னார் (மத்.15:19). நம் செயல்கள், வார்த்தைகள் மற்றும் சிந்தனைகள் ஆகிய அனைத்தும் நம் இருதயத்திற்குள் இருப்பவைகளால் வரும் பலன்கள் ஆகும். தேவனுக்குப் பிரியமான ஒரு வாழ்க்கையை நாம் வாழ விரும்பினால், ஆவியாயும் ஜீவனாயும் இருக்கிற தேவனுடைய வார்த்தையினால் நாம் நம் இருதயங்களை நிரப்ப வேண்டும். தேவனுடைய வார்த்தையால் நம் இருதயத்தை நிரப்புவது எப்படி? வேத வாசிப்பு, தேவனுடைய வார்த்தையை தியானிப்பது ஆகியவை இதற்கு மிகவும் உதவிகரமானவை. ஆயினும், நாம் தேவனுக்கு நம் இருதயத்தை அர்ப்பணிக்காமல், இயேசு கிறிஸ்துவை ஆண்டவராக ஏற்றுக் கொள்ளாமல் இது சாத்தியமாகுமா?
பயன்பாடு: தேவனுடைய வார்த்தையை என் இருதயத்தில் பத்திரப்படுத்துவது கர்த்தருடைய ஆசீர்வாதங்கள் பலவற்றை எனக்குத் தருகிறது. ஆகவே, “எல்லாக் காவலோடும்” என் இருதயத்தைப் பாதுகாப்பதற்கு நான் முன்னுரிமை கொடுப்பேன். ஆயினும், என் சொந்த பலத்தில் நான் இதைச் செய்ய முடியாது. எனக்கு இயேசு தேவை. இயேசு என் இருதயத்திற்குள் வரும்போது, அவர் என் இருதயத்தை தேவனுடைய வார்த்தையால் நிரப்பி, அவருடைய வழியில் என்னை நடத்துகிறார். நான் பாக்கும் விதம், என் பேச்சு, மற்றும் என் செயல்கள் அனைத்தையும் அவர் மாற்றுகிறார். இயேசு எனக்குள் வாழ்கையில், என்னில் இருந்து புறப்பட்டு வரும் அனைத்தும் நன்மையானதாகவும், அனைவருக்கும் பயனுள்ளதாகவும் இருக்கிறது.
ஜெபம்: அன்புள்ள தகப்பனே, தேவபக்தியுள்ள ஒரு வாழ்க்கையை வாழ்வதற்குத் தேவையான ஞானமுள்ள வார்த்தைகளுக்காக உமக்கு நன்றி. நீரே என் கேடகமும், பெலனும் ஆனவர். இயேசுவே, நீர் என் மேய்ப்பர். ஆகவே, பிசாசானவன் எனக்கு தீங்கு செய்ய முடியாது. ஆமென்.- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573
Day - 155
No comments:
Post a Comment