வாசிக்க: 1 நாளாகமம் 23, 24; நீதிமொழிகள் 28; அப்போஸ்தலர் 1
வேத வசனம்: நீதிமொழிகள் 28: 13. தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்.
கவனித்தல்: “நான் பாவிதான், பரிசுத்தமானவன் அல்ல” என்று அனேக தங்களைப் பற்றி ஒப்புக் கொள்வார்கள். ஆனால், அவர்கள் அனைவரும் தங்கள் பாவங்களை அறிக்கை செய்ய முன்வருவது கிடையாது. முதல் மனிதனாகிய ஆதாமில் இருந்து, மனிதர்கள் தங்களுடைய பாவங்களை தேவனிடம் இருந்தும் (மற்ற மனிதரிடம் இருந்தும்) மறைக்க முயற்சி செய்கிறார்கள். அவர்களுடைய தவறான செயல் அல்லது பாவங்களைப் பற்றி எதிர்த்துக் கேள்விகேட்காவிடில், பொதுவாக அவர்கள் அவற்றைப் பற்றி பேசுவதில்லை. ஜனங்கள் தங்கள் பாவங்களை மறைக்கப் பயன்படுத்தும் வழிகள்—பொய்கள், மற்றவர்களை குறை சொல்தல், தார்மீக பொறுப்பு எடுக்காமல் விலகிச் செல்தல், தங்களுடைய தவறுகளை நியாயப்படுத்துதல், அனுதாபத்தை உண்டாக்குதல், கண்ணீர் வடித்தல், சாக்குப் போக்குகளைச் சொல்லுதல், இரகசியமாக வைத்திருத்தல்— இன்னதென்று நாம் அறிந்தும் பார்த்தும் இருக்கிறோம். இப்படிப்பட்டவர்கள் வாழ்வடைய மாட்டார்கள் என வேதாகமம் மிகவும் உறுதியாக எச்சரிக்கிறது. சங்கீதம் 32ல், தன் பாவங்களை மறைத்ததினால் உண்டான வேதனை மற்றும் வலி பற்றி தாவீது கூறுகிறார் (சங்.32:3,4). தன் மீறுதல்களை தாவீது அறிக்கை செய்யும் வரைக்கும், அவரால் தேவனுடைய மன்னிப்பைப் பெற முடியவில்லை. சங்கீதம் 32:1,2 வசனங்களில், தேவனுடைய மன்னிப்பு மற்றும் மகிழ்ச்சியினை பெறுதலின் ஆசீர்வாதம் பற்றி தாவீது பாடுகிறார். நாம் மற்ற மனிதர்களிடம் இருந்து சில காரியங்களை மறைக்கக் கூடும். ஆனால் தேவனிடம் இருந்து எதையும் நாம் மறைக்க முடியாது. அவர் அனைத்தையும் அறிந்திருக்கிறார்; அவர் பார்வைக்கு மறைவானது எதுவும் இல்லை.
நீதிமொழிகள் 28:13ன் பிற்பகுதியை நாம் கவனமாகப் பார்ப்போம். இங்கே, தன் பாவங்களை “அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்” என்று வாசிக்கிறோம். பாவங்கள்/மீறுதல்கள்/அக்கிரமங்கள் ஆகியவற்றில் இருந்து மன்னிப்பைப் பெற, ஒருவர் தன் பாவங்களை அறிக்கையிட்டு அவைகளை விட்டுவிடவேண்டும். “பாவம் செய்வது மனித இயல்பு, ஆகவே நான் பாவம் செய்கிறேன்” என்றோ, அல்லது “தேவனுடைய கட்டளைகளும் எதிர்பார்ப்புகளும் பின்பற்ற முடியாதபடி மிகவும் கடினமானவை” என்றோ, அல்லது, “இக்காலத்தில் இதைச் செய்வது பாவமல்ல” என்றோ சிலர் கூறுகிறார்கள். எனவே, அவர்கள் தங்கள் பாவங்களை விட்டுவிட விரும்புவதில்லை; மாறாக, அவர்கள் சாக்குபோக்குகளைச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இது தவறு என தெரிந்திருந்தும், உலகப்பிரகாரமான பல்வேறு காரணங்களுக்காக அவர்கள் தங்கள் பாவங்களை விட்டு வெளியே வர விருப்பம் இல்லாமல் இருக்கிறார்கள். ஒரு மனிதன் பாவம் செய்யும்போது, அவன் தேவனுக்கு விரோதமாகவே பாவம் செய்கிறான் (சங்.51:3, 4). நாம் நம் பாவங்களை அறிக்கை செய்து விட்டுவிடும்போது, தேவனுடன் நம்மை அடையாளப்படுத்திக் கொள்கிறோம். நம் பாவங்களை நாம் ஒப்புக் கொள்ளும்போது, இயேசு நமக்காக பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறார் (1 யோவான் 2:1). ஆயினும், நம் பாவ அறிக்கையானது நேர்மையானதாகவும், மாய்மாலம் இல்லாததாகவும் இருக்க வேண்டும். பாவங்களை அறிக்கை செய்தல் என்பது தங்களுடைய மதிப்பை குலைத்து விடும் என அனேகர் பயப்பட்டு, பாவ அறிக்கை செய்ய தயக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள். ஆனால், தேவனிடத்தில் தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு, மன்னிப்பையும் இரக்கத்தையும் பெற்ற அனேகரைப் பற்றி வேதாகமம் பல சம்பவங்களை நமக்குச் சொல்கிறது. “தேவனால் மன்னிக்க முடியாத அளவுக்கு மிகப் பெரிய பாவம் என எதுவும் இல்லை” (No sin is too big for God to forgive). நம் கடந்த கால பாவங்களை அறிக்கை செய்யாமல், அது நம் உள்ளான மனிதனையும் சமாதானத்தையும் பாதித்து, நம்மை அது வேதனைப்படுத்த அனுமதிப்பதற்குப் பதிலாக, நாம் மனத்தாழ்மையுடன் தேவனிடம் பாவ அறிக்கை செய்து, அவருடைய இரக்கங்களைக் கண்டடையலாம். நம் பாவங்களை அறிக்கை செய்து அவற்றை விட்டுவிடும்போது, இயேசு கிறிஸ்துவின் இரத்தமானது சகல பாவங்களிலும் இருந்தும் எல்லா அநியாயங்களில் இருந்தும் நம்மை சுத்திகரிக்கிறது. அதன் பின், நாம் தேவனுடைய மன்னிப்பையும் அன்பையும் ருசிக்க ஆரம்பிக்கிறோம்.
பயன்பாடு: என் தேவனிடம் இருந்து நான் எதையும் மறைக்க முடியாது. அவருக்கு மறைவானது எதுவுமில்லை. என் பாவங்களை அறிக்கை செய்தல் என்பது என் பலவீனத்திற்கான அடையாளம் அல்ல. மாறாக, என் பலவீனங்களை மேற்கொள்ள/வெற்றி பெறுவதற்கு தேவனுடைய வல்லமையைப் பெறுவதற்கான வழி ஆகும். நான் தேவன் முன்பாக வரத் தயங்க மாட்டேன். இயேசுவின் பாவநிவாரண பலியின் காரணமாக, தேவனுடைய மன்னிப்பைப் பெற, நான் அவர் முன்பாக தைரியமாக வரமுடியும். “எவனுடைய மீறுதல் மன்னிக்கப்பட்டதோ, எவனுடைய பாவம் மூடப்பட்டதோ, அவன் பாக்கியவான்...தேவரீர் என் பாவத்தின் தோஷத்தை மன்னித்தீர்” (சங்.32:1,5).
ஜெபம்: பிதாவாகிய தேவனே, என் பாவங்களை மன்னிக்க நீர் உண்டு பண்ணி வைத்திருக்கிற கிருபைக்காக உமக்கு நன்றி. இயேசுவே, தேவனுடன் ஒப்புரவாக்குதலை உண்டாக்கும் உம் பலிக்காக உமக்கு நன்றி. ஆண்டவரே, நீரே என் மறைவிடம் ஆக இருக்கிறீர். என் தேவனே, “வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து, நித்திய வழியிலே என்னை நடத்தும்.” ஆமென்.- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573
Day - 179
No comments:
Post a Comment