வாசிக்க: 1 இராஜாக்கள் 19, 20 ; நீதிமொழிகள் 3 ; யோவான் 9: 24-41
வேத வசனம்: 1 இராஜாக்கள் 19: 7. கர்த்தருடைய தூதன் திரும்ப இரண்டாந்தரம் வந்து அவனைத் தட்டியெழுப்பி: எழுந்திருந்து போஜனம்பண்ணு; நீ பண்ணவேண்டிய பிரயாணம் வெகுதூரம் என்றான்.
8. அப்பொழுது அவன் எழுந்திருந்து புசித்துக் குடித்து, அந்தப் போஜனத்தின் பலத்தினால் நாற்பதுநாள் இரவுபகல் ஓரேப் என்னும் தேவனுடைய பர்வதமட்டும் நடந்துபோனான்.
9. அங்கே அவன் ஒரு கெபிக்குள் போய்த் தங்கினான்; இதோ, கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு உண்டாகி, அவர்: எலியாவே, இங்கே உனக்கு என்ன காரியம் என்றார்.
கவனித்தல்: எலியாவின் ஜெபத்திற்கு தேவன் அக்கினியால் பதிலளித்த பின்பு, அவனுடைய ஊக்கமான ஜெபத்துக்கு பதிலாக தேவன் அனுப்பிய ஒரு பெருமழையைக் கண்ட பின்பு, கர்மேல் பர்வதத்தில் ஆரம்பித்த ”கர்த்தரே தெய்வம்” என்று இஸ்ரவேலர்கள் முழங்கிய அந்த எழுப்புதல் அல்லது சீர்திருத்தத்தை தொடர்ந்து நடத்துவதற்கு எலியா உறுதியுள்ளவனாக இருந்திருக்க வேண்டும். ஆனால், யேசேபேலின் வார்த்தைகளைக் கேட்டு பயந்து, தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அவன் விலகி ஓடிப் போனான். அந்த நேரத்தில் எலியா செய்த ஜெபத்திற்காக அவனைக் கடிந்து கொள்ளாமல் (வ.4), ஒரு தூதன் மூலமாக தேவன் அவனை இளைப்பாறப் பண்ணி, அவனுக்குத் தேவையானதாக இருந்த (சரீர மற்றும் மனதளவிலான) ஓய்வு எடுப்பதற்கு தேவன் அனுமதித்தார். ஆயினும், “நீ பண்ணவேண்டிய பிரயாணம் வெகுதூரம்” என்று கர்த்தருடைய தூதன் அவனிடம் சொன்ன போது, தேவனுடைய வழிநடத்துதல் என்ன என்பதைக் கேட்பதற்குப் பதிலாக, அவன் தனிமையாக ஒரேப் மலைக்கு நடந்து சென்றான். பாலைவன மலையில் உள்ள ஒரு குகையானது யேசபேலின் அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாப்பாக இருப்பதற்கான ஒரு இடம் என்று அவன் நினைத்திருக்கக் கூடும். ஆனால் தேவன் அவனைக் குறித்து வேறு திட்டங்கள் வைத்திருந்தார்.
பயம் மற்றும் விரக்தியில், எலியா செய்தது போல, நாமும் கூட தனிமையான இடங்களுக்குச் சென்று மற்றவர்களின் பார்வையில் படாமல் நம்மை மறைத்துக் கொள்ள விரும்பக்கூடும். அப்படிப்பட்ட தருணங்களில், தேவன் நம்மைப் பார்த்து, “இங்கே உனக்கு என்ன காரியம்” என்று கேட்பார்.12 மற்றும் 13ம் வசனங்களில் நாம் வாசிக்கும் பெருங்காற்று, பூமி அதிர்ச்சி மற்றும் அக்கினி ஆகியவை எலியாவின் இருதய நிலையையும் எதிர்பார்ப்பையும் வெளிப்படுத்துகிறது. ஆனால், தேவனுடைய அமர்ந்த மெல்லிய சத்தத்தை எலியா கேட்க வேண்டியதாயிருந்தது. எலியா எங்கு இருக்க வேண்டும் என்று தேவன் விரும்பினாரோ அந்த இடத்தில் அவன் இல்லை என்பது வெளிப்படை. “நான் ஒருவன் மாத்திரம் மீதியாயிருக்கிறேன்” என்று சொல்லி சுய பரிதாபத்துடன் எலியா திரும்பத் திரும்ப தேவனுக்கு பதில் சொல்லிக் கொண்டிருக்கையில், இந்த முறை அவனை ஆறுதல் செய்வதற்குப் பதிலாக நீ வந்த வழியாக திரும்பிப் போ என்று சொல்லி, அடுத்த தலைமுறையின் வரலாறை தீர்மானிக்கப் போகிற மூன்று முக்கியமான பொறுப்புகளை அவனுக்குக் கொடுத்தார். முடிவில், நீ மட்டும் தனியாக இருக்கவில்லை என்று சொல்லி அவனை தேவன் உற்சாகப்படுத்தி, “பாகாலுக்கு முடங்காதிருக்கிற முழங்கால்களையும், அவனை முத்தஞ்செய்யாதிருக்கிற வாய்களையுமுடைய ஏழாயிரம்பேரை இஸ்ரவேலிலே மீதியாக வைத்திருக்கிறேன்” என்று சொன்னார் ( வ.15-18). நம் வாழ்க்கையில், நாம் உயர்வு தாழ்வுகள், ஏற்ற இறக்கங்கள், வெற்றிகரமான மலைகள் மற்றும் மரண இருளின் பள்ளத்தாக்கு, பெரும் மகிழ்ச்சி மற்றும் துக்கம், செழிப்பான (அ) பசுமையான புல்வெளி மற்றும் வறண்ட பாலைவனம் போன்ற பல சூழ்நிலைகளைக் எதிர் கொள்வோம். இவை எல்லாவற்றிலும், நாம் எங்கு இருக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார் என்பதை நாம் தேட வேண்டும். மேலும், அவருடைய வழிநடத்துதலை நமக்குத் தருகிற அவரின் அமர்ந்த மெல்லிய சத்தத்தைக் கேட்பதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும். நாம் இதைச் செய்கிறோமா? இதைச் செய்கிறதற்கு நாம் ஆயத்தமாக இருக்கிறோமா? நினைவில் கொள்வோம்: நம் வாழ்க்கையில் நாம் எதிர்கொள்கிற அச்சுறுத்தல்கள் மற்றும் தோல்விகளும், நம் பயங்களும் தேவனுடைய திட்டத்தை தடுத்து நிறுத்த முடியாது.
பயன்பாடு: நான் எலியாவை விட நல்லவன் அல்ல. நான் விரக்தியான அனுபவங்கள், பயங்கள், ஏமாற்றங்கள், மற்றும் தோல்விகளினூடாக செல்ல நேரிடலாம். ஆயினும், அவைகளை நான் பார்த்துக் கொண்டு, நான் விரும்புவதைச் செய்வதற்குப் பதிலாக, நான் தேவனையும் அவருடைய வழிநடத்துதலையும் தேட வேண்டும். மனித திட்டங்கள் தேவன் எனக்கென வைத்திருக்கிற திட்டங்களை குலைத்துப் போட முடியாது. பிசாசுக்கு எதிரான யுத்தத்தில் நான் தனியாக இல்லை என்று சொல்லி தேவன் என்னை உற்சாகப்படுத்துகிறார். அவர் என்னுடன் நடக்கிறார். தேவனுடைய வழிநடத்துதல் என்ன என்பதை நான் அறிந்து கொள்ளும்படி அவருடைய அமர்ந்த மெல்லிய சத்தத்தைக் கேட்க என்னை பலப்படுத்துகிறார். நான் எப்பொழுதும் தேவனை “நம்பி & கீழ்ப்படிய” வேண்டும்.
ஜெபம்: பிதாவாகிய தேவனே, என் வாழ்க்கையில் எப்பொழுதும் இருக்கிற உம் பிரசன்னத்திற்காக உமக்கு நன்றி. எல்லா சூழ்நிலைகளிலும் நீர் என்னைத் தாங்குகிறீர். ஆண்டவரே, நான் அனுதினமும் உம் அமர்ந்த மெல்லிய சத்தத்தைக் கேட்க விரும்புகிறேன். உம் வார்த்தைகளைக் கேட்பதற்கு உணர்வுள்ளவனாக இருக்க எனக்கு உதவும். சர்வ வல்லமையுள்ள தேவனே, உம் சித்தத்தின்படி வாழ என்னை பலப்படுத்தும். ஆமென்.- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573
Day - 154
No comments:
Post a Comment