வாசிக்க: 1 நாளாகமம் 19, 20; நீதிமொழிகள் 26; யோவான் 21: 1-14
வேத வசனம்: நீதிமொழிகள் 26: 20. விறகில்லாமல் நெருப்பு அவியும்; கோள்சொல்லுகிறவனில்லாமல் சண்டை அடங்கும்.
21. கரிகள் தழலுக்கும், விறகு நெருப்புக்கும் ஏதுவானதுபோல, வாதுப்பிரியன் சண்டைகளை மூட்டுகிறதற்கு ஏதுவானவன்.
22. கோள்காரனுடைய வார்த்தைகள் விளையாட்டுப்போலிருக்கும்; ஆனாலும் அவைகள் உள்ளத்திற்குள் தைக்கும்.
கவனித்தல்: இன்றைய உலகில் கோள் சொல்லுதல்/ பிறரைப் பற்றிப் புறம் பேசுதல் (gossip) எல்லோரும் ஏற்றுக் கொண்ட ஒரு நடை முறை போல தோன்றுகிறது. கோள்சொல்லுதல் என்பது ஒருவரைப் பற்றிய தனிப்பட்ட உறுதிப்படுத்தப்படாத தகவலைப் பேசுதல் அல்லது எழுதுதல் ஆகும். செய்தித்தாள்களில், பத்திரிகைகளில், சமூக வலைதளங்களில், மற்றும் மனிதர்கள் வேலை பார்க்கிற அனைத்து இடங்களிலும் ஜனங்கள் ஒருவரை ஒருவர் கோள்சொல்வதை நாம் காண்கிறோம். சில உளவியல் நிபுணர்கள் கோள்சொல்லுதல் சில சாதகமான விளைவுகளை உண்டாக்குவதாக சொல்கிறார்கள். அலுவலகங்களில் சில அதிகாரிகள் தங்களுடைய சுய நல லாபத்திற்காக கோள்சொல்லுவதை ஊக்கப்படுத்துகின்றனர். ஆயினும், வேதாகமமானது கோள்சொல்லுவதற்கு எதிராக தெளிவாக நம்மை எச்சரிக்கிறது. இங்கே, நீதிமொழிகள் 19ம் அதிகாரத்தில் கோள்சொல்லுதல் பற்றி வேதம் சொல்வதை நாம் வாசிக்கிறோம். நீதிமொழிகள் 19ம் அதிகாரத்தின் முக்கியமான கருப்பொருள் மூடருடைய மதியீனம் பற்றியது ஆகும். ஆகவே, இந்த அதிகாரத்தில் கோள்சொல்லுதல் பற்றி வாசிப்பது மிகவும் பொருத்தமானதாகவே இருக்கிறது. கோள் சொல்லுதல் சண்டைகள், வெறுப்பு, மற்றும் பிரச்சனைகளை உண்டாக்குகிறதாகவும், அனேக உறவுகளை சிதைக்கிறதாகவும் இருக்கிறது. கோள்சொல்லுதல் பெரும்பாலும் கோள் சொல்லப்பட்டவருடைய மதிப்பு மற்றும் மரியாதையைக் கெடுத்துப் போடுகிறதாக இருக்கிறது. அவர்களை நேர்மறை கண்ணோட்டத்துடன் பார்ப்பது ஜனங்களுக்குக் கடினமானதாக இருக்கிறது. “கோள்காரனுடைய வார்த்தைகள்...உள்ளத்திற்குள் தைக்கும்” என்று வாசிக்கிறோம். ஆண்டுகள் பல கடந்த பின்னரும் கூட, கோள்சொல்லுதலினால் பாதிக்கப்பட்ட அனேகர் அது உண்டாக்கிய அதிர்ச்சி, வலி, வேதனை, மற்றும் பயத்தில் இருந்து வெளிவர முடியாமல் கஷ்டப்படுகின்றனர். தற்கொலை எண்ணங்கள், தன்னைப் பற்றிய குறைவான மதிப்பீடு, தாழ்வு மனப்பான்மை, மற்றவர்களைப் பற்றிய எதிர்மறை சிந்தனை ஆகியவற்றுடன் போராடியது பற்றி அவர்களில் சிலர் பொதுவெளியில் தாங்கள் பட்ட கஷ்டத்தைப் பகிர்ந்திருக்கின்றனர். சில நேரங்களில், விளையாட்டாக, முன் யோசனையின்றி பிறரைப் பற்றிச் சொல்லப்பட்ட வார்த்தைகள், காட்டுத்தீ போல கட்டுப்பாடற்று பரவி விடுகின்றன. ஆகவே, ஒருவர், அதிலும் குறிப்பாக மற்றவர்களைப் பற்றிப் பேசும்போது, தன் வார்த்தைகளைக் குறித்து கவனமாக இருக்க வேண்டும். எப்பொழுதும் புறங்கூறித் திரிகிற ஒருவர் தேவனுடன் வாழ முடியாது (சங்.15:1-3).
ஒருவரைப் பற்றி புறங்கூற அல்லது கோள்சொல்ல வேண்டும் என்ற சோதனையுடன் நாம் போராடும்போது, குறிப்பாக ஒரு புதிய மற்றும் எவரும் அறியாத தகவல் நம்மிடம் இருக்கிறது என நாம் நினைக்கும்போது, இயேசு சொன்ன வார்த்தைகளை நாம் நினைத்துப் பார்க்கவேண்டும்: “உள்ளதை உள்ளதென்றும், இல்லதை இல்லதென்றும் சொல்லுங்கள்; இதற்கு மிஞ்சினது தீமையினால் உண்டாயிருக்கும்” (மத்தேயு.5:37). மற்றவர்களைப் பற்றி நாம் ஏதேனும் சொல்லுவதற்கு முன்பு, அது நமக்கு ஏதேனும் நன்மை உண்டாகுமா என்றும் மற்றவருடைய மதிப்பு மரியாதையை கட்டி எழுப்ப உதவுமா என்பதைப் பற்றி நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். நம் பதில் “இல்லை” என்பதாக இருந்தாம் நாம் அப்படிப்பட்ட வீணான வெட்டிப் பேச்சுகளைத் தவிர்த்தல் அனைவருக்கும் நலம். “கெட்ட வார்த்தை ஒன்றும் உங்கள் வாயிலிருந்து புறப்படவேண்டாம்; பக்திவிருத்திக்கு ஏதுவான நல்ல வார்த்தை உண்டானால் அதையே கேட்கிறவனுக்குப் பிரயோஜனமுண்டாகும்படி பேசுங்கள்” என்று அப்போஸ்தலனாகிய பவுல் கூறுகிறார் (எபேசியர் 4:29). கொலோசேயருக்கு எழுதிய நிருபத்தில், “அவனவனுக்கு இன்னின்னபடி உத்தரவு சொல்லவேண்டுமென்று நீங்கள் அறியும்படிக்கு, உங்கள் வசனம் எப்பொழுதும் கிருபை பொருந்தினதாயும் உப்பால் சாரமேறினதாயுமிருப்பதாக” என்ற நடைமுறைக்கேற்ற ஒரு அறிவுரையை பவுல் பகிர்ந்து கொள்கிறார் (கொலோசேயர் 4:6).
பயன்பாடு: என் வார்த்தைகள் மற்றவருடைய மதிப்பை கட்டி எழுப்பவும் கூடும் அல்லது அவர்களுடைய நற்பெயரை சிதைத்து, எதிர்காலத்தையே கேள்விக்குள்ளாக்கவும் கூடும். இயேசுவைப் பின்பற்றும் நான் மற்றவர்களுக்கு பக்திவிருத்தி உண்டாக்குகிற, அவர்களைக் கட்டி எழுப்புகிற வார்த்தைகளைப் பேச வேண்டும். பிரச்சனைகளை உண்டாக்குவதற்குப் பதிலாக, என் வார்த்தைகள் கிருபையுள்ளவைகளாக இருக்க வேண்டும். என் நாவானது மற்றவர்களை தவறாக வழிநடத்தவும் என்னைக் கறைபடுத்தவும் நான் அனுமதிக்க மாட்டேன். மாறாக, நான் தேவனைத் துதிப்பேன்; தேவனுடைய அன்பையும் கிருபையையும் மற்றவர்கள் ருசித்துப் பார்க்க நான் உதவி செய்வேன்.
ஜெபம்: தந்தையாகிய தெய்வமே, என் நாவைக் கட்டுப்படுத்தவும், உம் மகிமைக்காக அதைப் பயன்படுத்தவும் எனக்கு உதவியருளும். ஆண்டவரே, மற்றவர்களுக்கு உதவுகிற, பக்தி விருத்தி உண்டாக்குகிற, மற்றும் அவர்களைக் கட்டி எழுப்புகிற வார்த்தைகளை மட்டுமே பேச எனக்கு உம் ஞானத்தைத் தாரும். இயேசுவே, உம் புகழை அறிவிக்கும்படி என் உதடுகளைத் திறந்தருளும். ஆமென்.- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573
Day - 177
No comments:
Post a Comment