வாசிக்க: 2 இராஜாக்கள் 5, 6 ; நீதிமொழிகள் 7 ; யோவான் 11: 28-57
வேத வசனம்: 2 இராஜாக்கள் 5: 2. சீரியாவிலிருந்து தண்டுகள் புறப்பட்டு, இஸ்ரவேல் தேசத்திலிருந்து ஒரு சிறுபெண்ணைச் சிறைபிடித்துக்கொண்டு வந்திருந்தார்கள்; அவள் நாகமானின் மனைவிக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்தாள்.
3. அவள் தன் நாச்சியாரைப் பார்த்து: என் ஆண்டவன் சமாரியாவிலிருக்கிற தீர்க்கதரிசியினிடத்தில் போவாரானால் நலமாயிருக்கும்; அவர் இவருடைய குஷ்டரோகத்தை நீக்கிவிடுவார் என்றாள்...
20. தேவனுடைய மனுஷனாகிய எலிசாவின் வேலைக்காரன் கேயாசி என்பவன், அந்தச் சீரியனாகிய நாகமான் கொண்டுவந்ததை என் ஆண்டவன் அவன் கையிலே வாங்காமல் அவனை விட்டுவிட்டார்; நான் அவன் பிறகே ஓடி, அவன் கையிலே ஏதாகிலும் வாங்குவேன் என்று கர்த்தருடைய ஜீவன்மேல் ஆணையிட்டு, 21. நாகமானைப் பின்தொடர்ந்தான்;
கவனித்தல்: 2 இராஜாக்கள் 5ம் அதிகாரத்தில், இரண்டு வேலைக்காரர்களைப் பற்றி நாம் வாசிக்கிறோம்: முதலாவது, சிறைபிடிக்கப்பட்டு நாகமானின் மனைவிக்கு பணிவிடை செய்த பெயர் அறியப்படாத சிறு பெண், அடுத்ததாக எலிசாவின் வேலைக்காரனாகிய கேயாசி என்பவன். நாகமான் ஒரு சிறந்த மதிப்பிற்குரிய மற்றும் வீரமுள்ள ஒருவராக இருந்தாலும், “குஷ்டரோகியாயிருந்தான்” (வ.1). தன் எஜமானின் வியாதி பற்றி அந்த சிறு பெண் அறிந்தபோது, நாகமான் சுகமடைவதற்காக இஸ்ரவேலில் உள்ள தீர்க்கதரிசியிடம் அனுப்பும்படி தன் எஜமானியிடம் சொன்னாள். நாகமானின் குஷ்டரோகத்துக்கு என்ன செய்ய வேண்டும் என இஸ்ரவேலின் ராஜாவுக்குக் கூட எதுவும் தெரியவில்லை (வ.7). ஆயினும், நாகமான் எலிசாவின் வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்த போது, அவன் ஒரு அற்புத சுகத்தைப் பெற்றான். (அவன் கொண்டு வந்த திரளான வெள்ளி மற்றும் தங்கத்தில்) ஒரு சேக்கல் கூட செலவழிக்காமல், நாகமான் ஒரு புது மனிதனாக, ஒரு சிறு பிள்ளையைப் போல மாறினான். அந்த சிறுபெண்ணின் சிறிய செயலினால், இஸ்ரவேலின் தேவன் யார் என்று நாகமான் அறிந்து கொண்டான். மேலும், கர்த்தரைத் தவிர வேறு தேவர்களை பணிந்து கொள்ள மாட்டேன் என்று தீர்மானம் உடையவனாக மாறினான் (வ.15, 17).
மறுபக்கத்தில், நாகமானின் பரிசுகள் எதையும் ஏற்றுக் கொள்ள மறுத்த எலிசாவின் செயலினால் ஏமாற்றமடைந்த பேராசையுள்ள வேலைக்காரன் கேயாசி பற்றி நாம் வாசிக்கிறோம். அவனுடைய இருதயமானது நாகமானிடம் இருந்த வெள்ளி மற்றும் ஆடைகள் மீது இருந்தது. ஆகவே அவன் நாகமானைப் பின் தொடர்ந்து சென்று, வெள்ளியைப் பெற்றுக் கொள்வதற்காக ஒரு பொய் சொல்லி அவனை ஏமாற்றினான். நாகமானிடம் இருந்து கேயாசி பெற்ற வெள்ளியைக் கொண்டு, அவன் சமாரியா போன்ற ஒரு பட்டணத்தையே வாங்கி இருக்க முடியும் (5:23ல் சொல்லப்பட்ட அளவை 1 இராஜா 16:24 உடன் ஒப்பிட்டுப் பாருங்கள்). அந்தப் பணத்தைச் செலவழிப்பதற்கு கேயாசி பல பெரிய திட்டங்களை வைத்திருந்திருக்கலாம். அனைவரின் பார்வையிலும் இருந்து தன் துரோக செயலை மறைக்க அவன் கவனமுள்ளவனாக இருந்ததை அவன் செயல்கள் காட்டுகின்றது. ஆயினும், அவன் எலிசாவிடம் திரும்பி வந்த போது, எலிசா அவனுடைய பொய்கள் மற்றும் தவறான செய்கையை அம்பலப்படுத்தினான். முடிவில், நாகமானிடம் இருந்த குஷ்டரோகமானது கேயாசி மற்றும் அவனுடைய சந்ததியின் மீது தலைமுறை சாபமாக வந்தது.
நாகமானின் குணமாகுதல் பற்றிய இந்த கதையில் வரும் இரு சம்பவங்கள் நமக்கு நினைவுபடுத்துவது என்னவெனில், உலக பொருட்கள் மீது அல்ல, வியாதி மற்றும் கஷ்டங்களினால் பாடுபடுகிறவர்களுக்கு உதவுவதில் நம் கவனம் இருக்க வேண்டும் என்பதாகும். நம் சிறிய அல்லது எளிய செயல்கள் நம்மைச் சுற்றிலும் இருக்கிறவர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றங்களை உண்டு பண்ணக் கூடும். அந்த சிறு பெண்ணைப் போல, நமக்கு தீமை செய்தவர்களுக்குக் கூட நாம் நன்மை செய்ய முடியும். அல்லது கேயாசியைப் போல உலகக் காரியங்கள் மற்றும் உடைமைகள் மீது ஆசைப்பட்டு செல்லலாம். நன்மை செய்ய வேண்டுமா அல்லது தீமை செய்ய வேண்டுமா என்பதை முடிவு செய்யும் உரிமை நம் கையில் இருக்கிறது. “மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்” என்பதை நாம் நினைவில் கொள்வோம் (கலா.6:7).
பயன்பாடு: என் தேவன் தம் வல்லமை மற்றும் மகிமையை வெளிப்படுத்த மிகச் சாதாரணமானவர்களையே பயன்படுத்துகிறார், தேவனுடைய குணமாகுதலின் தொடுதலை ஜனங்கள் பெற அவர்களுக்கு உதவும் என் சிறிய முயற்சியானது அவர்களுடைய வாழ்க்கையில் பெரிய மாற்றங்களை உண்டு பண்ணக் கூடும். பணம், செல்வம், மற்றும் பதவி ஆகியவை வாழ்க்கையின் பிரச்சனைகளைத் தீர்க்க முடியாது. ஆனால் தேவன் மீது உள்ள என் விசுவாசம், அது கடுகு அளவு சிறிதாக இருந்தாலும், மலைகளை அசைக்கக் கூடியதாக இருக்கிறது (மத்.17:20).
ஜெபம்: பிதாவாகிய தேவனே, உம் ஜனங்கள் நடுவில் நீர் இருப்பதற்காக உமக்கு நன்றி. ஆண்டவரே, உம்மையும் உம் வல்லமையையும் ஜனங்கள் அறிந்து கொள்ளும்படி அவர்களை வழிநடத்த எனக்கு உதவும். “எங்களுக்கு அல்ல, கர்த்தாவே, எங்களுக்கு அல்ல, உமது கிருபையினிமித்தமும், உமது சத்தியத்தினிமித்தமும், உம்முடைய நாமத்திற்கே மகிமை வரப்பண்ணும்.” ஆமென்.
- அற்புதராஜ் சாமுவேல் +91 9538328573
Day - 158
No comments:
Post a Comment