வாசிக்க: 2 இராஜாக்கள் 3, 4 ; நீதிமொழிகள் 6 ; யோவான் 11: 1-27
வேத வசனம்: 2 இராஜாக்கள் 3: 17. நீங்கள் காற்றையும் காணமாட்டீர்கள், மழையையும் காணமாட்டீர்கள்; ஆனாலும் நீங்களும் உங்கள் ஆடுமாடுகளும் உங்கள் மிருகஜீவன்களும் குடிக்கும்படிக்கு, இந்தப் பள்ளத்தாக்கு தண்ணீரால் நிரப்பப்படும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
18. இது கர்த்தரின் பார்வைக்கு அற்பகாரியம்; மோவாபியரையும் உங்கள் கையிலே ஒப்புக்கொடுப்பார்.
கவனித்தல்: இன்றைய வேத வாசிப்புப் பகுதியில், தன் ஊழியக்காரனாகிய எலிசா மூலம் தேவன் செய்த ஆறு அற்புதங்களைப் பற்றி நாம் வாசிக்கிறோம்: தாகமாயிருந்த இஸ்ரவேல் இராணுவத்திற்கு தண்ணீர் மற்றும் மோவாபியர் மீது வெற்றி, ஏழை விதவைக்கு ஒரு அற்புதமான எண்ணெய் பெருக்கம்,சூனேமிய பெண்ணுக்கு பிள்ளைப் பேறு, இறந்த அவளுடைய மகனுக்கு உயிர் கொடுத்தல், கூழில் இருந்த விஷத்தை நீக்குதல், மற்றும் ஒரு உணவுப் பெருக்கம். இந்த அற்புதங்கள் ஒவ்வொன்றும் தம் ஜனங்களுடைய தேவைகளைச் சந்திப்பதற்கான தேவனுடைய வல்லமை மற்றும் கரிசனையைப் பற்றி கூறுகின்றது.
2 இராஜாக்கள் 3ம் அதிகாரத்தில், இஸ்ரவேலின் ராஜாவாகிய யோராம் யூதா மற்றும் ஏதோமிய ராஜாக்களின் உதவியுடன் கலகம் செய்து கொண்டிருந்த மோவாபியருடன் போரிடச் சென்றான் என வாசிக்கிறோம். அவர்கள் புறப்படுவதற்கு முன்பு, தேவ சித்தம் இன்னதென்று அறிய ராஜா எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
ஏதோம் வனாந்தரவழியாய் அணிவகுத்து சென்ற ஏழு நாட்களுக்குப் பின், அவர்களுக்கு தண்ணீர் இல்லாமல் போயிற்று. அப்பொழுதும் கூட இஸ்ரவேலின் ராஜா தேவனைத் தேட தயாராக இல்லை. ஆனால், தேவ பயமுள்ள யூத ராஜாவாகிய யோசபாத் அந்தச் சூழ்நிலைக்கான தேவனுடைய வார்த்தை என்ன என்று அறிந்து கொள்வதற்கான முயற்சியை ஆரம்பித்து வைத்தான். அதன் பின்பு, மூன்று ராஜாக்களும் தேவனுடைய தீர்க்கதரிசியான எலிசாவைச் சந்திக்கச் சென்றனர். தேவன் எலிசா மூலமாக பேசி, அவர்களுடைய தேவை சம்பந்தமாக ஒரு தனித்துவமான வாக்குத்தத்தத்தை அவர்களுக்குக் கொடுத்தார். ஒரு வனாந்திரத்தில், மழையைப் பார்க்காமல் அவர்கள் தண்ணீர் பெறுவது எப்படி? தேவனால் கூடாத காரியம் ஒன்றும் இல்லை. தேவன் சொன்னபடி, அடுத்த நாள் காலையில் அவர்கள் தண்ணீரைப் பெற்றனர், வறண்ட பள்ளத்தாக்கு தண்ணீரினால் நிரம்பியது. அது மட்டுமல்ல, மோவாபியருக்கு ஒரு குழப்பத்தை உண்டாக்கி, அவர்கள் மீது ஒரு வெற்றியையும் தேவன் இஸ்ரவேலருக்குக் கொடுத்தார். தேவனுடைய இடைபடுதலால், ஒரு பெரிய அழிவு தவிர்க்கப்பட்டது. இல்லையெனில், அந்த மூன்று ராஜாக்கள் மற்றும் அவர்களின் இராணுவத்தினருக்கு ஒரு பெரிய தோல்வி மற்றும் மரணம் உண்டாயிருக்கக் கூடும். அவர்கள் தேவனைத் தேடின போது, அவர்கள் நினைத்துப் பார்க்காத ஒரு அற்புதத்தை தேவன் செய்தார்; அவர்களுக்கு தண்ணீரையும் வெற்றியையும் கொடுத்தார்.
நம் உடல் ஆரோக்கியம், பொருளாதாரம், வேலை, உறவுகள் போன்ற பல காரியங்களில் நமக்கு பிரச்சனைகள் இருக்கலாம். அது என்னவாக இருந்தாலும், நாம் ஒரு பிரச்சனையின் நடுவில் இருக்கும் போது, வரவிருக்கிற தவிர்க்க முடியாத சூழ்நிலையை எதிர்கொள்ள என்ன செய்ய வேண்டும் என்று நமக்குத் தெரியாத போது, நாம் தேவனைத் தேடுவது நமக்கு நல்லது. நாம் ஒன்றை செய்ய துவங்குவதற்கு முன்பு தேவனைத் தேட மறந்தோ அல்லது தவறியோ இருக்கலாம். நாம் அதை உணரும் போது, அது தேவனைக் கருத்தாய் தேடுவதற்கான நேரம் ஆகும். ஒருபோதும் தேவனைத் தேடாமல் இருப்பதை விட, தாமதமாகவேனும் அவரைத் தேடுவது நல்லது. எல்லாவற்றிற்கும் மேலாக, நமக்கு உதவி செய்வதும், விடுவிப்பதும் கர்த்தருடைய பார்வையில் எளிதான காரியம் ஆகும்.
பயன்பாடு: என் தேவன் அற்புதங்களைச் செய்கிறவர். அவர் வனாந்திரத்தில் வழியையும், அவாந்திரவெளிகளில் ஆறுகளையும் உண்டாக்குகிறவர் (ஏசாயா 43:19). நான் என் வாழ்க்கையில் சந்திக்கும் பெரிய பிரச்சனைகளைக் காட்டிலும் என் தேவன் மிகப் பெரியவர். அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராக இருக்கிறார் (எபி.13:8). நான் தேவனுக்கு உரிய முக்கியத்துவத்தையும் கனத்தையும் கொடுக்கும்போது, என் வாழ்க்கையில் அவருடைய அற்புதங்களைக் காண்பேன்.
ஜெபம்: தந்தையாகிய தெய்வமே, என் வாழ்க்கைப் பிரச்சனைகளைத் தீர்க்க உம் வல்லமை மற்றும் கரிசனையை எனக்கு நினைவுபடுத்துகிறதற்காக நன்றி. என் வாழ்க்கையில் பெரிதாய் தோன்றுகிற பிரச்சனைகளைப் பார்ப்பதற்குப் பதிலாக, முழு இருதயத்தோடு நான் உம்மைத் தேட எனக்கு உதவும். என் துதிக்கும் ஆராதனைக்கும் நீர் பாத்திரராக இருக்கிறீர். ஆமென்.- அற்புதராஜ் சாமுவேல் +91 9538328573
Day - 157
No comments:
Post a Comment