வாசிக்க: 2 இராஜாக்கள் 17. 18; நீதிமொழிகள் 13; யோவான் 14: 15-31
வேத வசனம்: யோவான் 14: 27. சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக.
கவனித்தல்: எபிரேய மொழியில் ஷாலோம் (Shalom என்றால் சமாதானம் என்று அர்த்தம்) என்பது ஒருவரைச் சந்திக்கும்போதும், விடைபெறும்போதும் சொல்கிற ஒரு வார்த்தை ஆகும். பொதுவாக, ஜனங்கள் மற்றவர்களைச் சந்திக்கும்போது வழக்கமாகச் சொல்கிற வாழ்த்துதல்களை, அவர்கள் உண்மையிலேயே விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் கூட, சொல்வார்கள். இங்கே, இயேசு சொன்ன வார்த்தைகள் வழக்கமான வாழ்த்துதல் வார்த்தைகளில் இருந்து தனித்துவமானவை ஆகும். இயேசு சீக்கிரத்தில் தன் பிதாவிடம் சென்றுவிடுவேன் என்று தன் சீடர்களிடம் ஏற்கனவே சொல்லி இருந்தார். மூன்று ஆண்டுகள் நெருங்கிய தொடர்பு மற்றும் ஊழியத்திற்குப் பின், அவர்கள் அதைப் பற்றி கவலைப்பட்டுக் கொண்டு இருந்திருப்பார்கள். அந்த நேரத்தில் அவர்களுக்கு என்ன தேவை என்பதை இயேசு நன்றாக அறிந்திருந்தார். அனைத்து பிரச்சனைகள், தந்திரமான கேள்விகள், மற்றும் எதிர்ப்புகளை இயேசு எப்படி கையாண்டார் என்பதை அவருடைய சீடர்கள் நேரடியாகப் பார்த்திருந்தார்கள். ஆகவே, “என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்” என்று இயேசு சொல்லும் போது, அவர் வெற்று வார்த்தைகளையோ அல்லது வாக்குறுதிகளையோ சொல்ல வில்லை. அவர் உண்மையிலேயே அதைக் கொடுக்க விரும்புகிறார் என்பதே அதன் அர்த்தம் ஆகும். நாம் அனைவரும் அறிந்திருக்கிறபடி, உலகப் பிரகாரமான சமாதானமானது சூழ்நிலையைப் பொறுத்து வேறுபடுகிறதும், தற்காலிகமானதும் ஆகும். இயேசுவோ, “உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை” என்று சொல்கிறார். இயேசு சமாதான பிரபு என்று வேதம் சொல்கிறது. ஒரு சாதாரண குடிமகனிடம் ஒரு அரசர் சென்று, நான் என் ராஜ்ஜியத்தையே உனக்குத் தருகிறேன் என்று எப்பொழுதாவது சொல்வாரா? இங்கே இயேசு என் சமாதானத்தைத் தருகிறேன் என்று சொல்கிறார்.
இந்த உலகமானது சில தற்காலிகமான, வெளிப்பிரகாரமான அமைதியைக் கொடுக்கக் கூடும்; ஆனால் மனதில் அல்லது உள்ளான அமைதியை இந்த உலகம் கொடுக்க முடியாது. அமைதியைத் தேடி ஜனங்கள் அலைந்து திரிகிறார்கள். அமைதியான இடங்களில், தியானத்தில், சிகிச்சைகளில் என பலவிதங்களில் அமைதியைப் பெற முயற்சி செய்கிறார்கள். ஆனால், அவர்கள் ஏமாற்றங்களையும், விரக்தியையும், மற்றும் தோல்விகளைத் தவிர வேறு எதையும் கண்டு கொள்வதில்லை. மறுபுறம், “எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம்” பற்றி வேதாகமம் கூறுகிறது (பிலி.4:7). இயேசுவின் சமாதானத்துடன், அவருடைய சீடர்கள் எதற்கும் கவலைப்படவோ அல்லது பயப்படவோ தேவையில்லை. இயேசுவின் சமாதானம் அவருடைய சீடர்களுக்கான ஒரு வாக்குத்தத்தம் அல்ல, அவர்களுடைய சுதந்தரம் ஆகும். நாம் சரீரப்பிரகாரமாக இயேசுவைப் பார்க்க முடியாமல் இருக்கலாம். ஆனால், நம் சூழ்நிலைகள் என்னவாக இருந்தாலும், எப்பொழுதும் அவருடைய சமாதானத்தை நாம் பெற்று அனுபவிக்க முடியும். இயேசு தரும் சமாதானமானது நம் வாழ்க்கையின் எல்லா பிரச்சனைகளையும் எதிர்கொள்ளவும், கவலையின்றி அமைதியாக இருக்கவும் தேவையான பலத்தை நமக்குத் தருகிறது.
பயன்பாடு: இந்த உலகத்தின் பொய்களை நம்புவதற்குப் பதிலாக, நான் இயேசுவையும் அவருடைய வார்த்தைகளையும் விசுவாசிக்க வேண்டும் என அவர் விரும்புகிறார். அவர் என்னைத் திக்கற்றவராக இருக்க விடுவதில்லை. நான் இயேசுவை நேசிக்கும்போது, அவர் வாக்குப்பண்ணியது போல, அவர் என் இருதயத்திற்குள் வந்து, என்னுள் வாசம் செய்கிறார். நான் அமைதியைத் தேடி அலையத் தேவை இல்லை. இயேசுவில், என் மனதில் நான் அமைதியை கண்டு கொள்ள முடியும். இயேசு என் இருதயத்தை மகிழ்ச்சியினால் நிரப்பி, தம் சமாதானத்தினால் என்னை நிரப்புகிறார். அவருடைய சமாதானமானது என் இருதயத்தைக் காத்து, நான் நம்ப ஏதுவில்லாதிருந்தும் எனக்கு நம்பிக்கையைத் தருகிறது.
ஜெபம்: இயேசுவே, என் வாழ்க்கையை எதிர்கொள்ளத் தேவையான வலிமையையும் சமாதானத்தையும் தருகிற உம் ஆறுதலான வார்த்தைகளுக்காக நன்றி. ஆண்டவரே, நீரே என் சமாதான காரணர். என் ஆண்டவராகிய இயேசுவே, நான் செல்லும் எல்லா இடங்களிலும் உம் அமைதியை பெற்றனுபவிக்கவும், பரப்பவும் எனக்கு உதவியருளும். ஆமென்.- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573
Day - 164
No comments:
Post a Comment